• May 20, 2024

நாடாளுமன்ற தேர்தலில் பா.ம.க.யாருடன் கூட்டணி ? டாக்டர் ராமதாசுக்கு முடிவெடுக்கும் அதிகாரம்

 நாடாளுமன்ற தேர்தலில் பா.ம.க.யாருடன் கூட்டணி ?  டாக்டர் ராமதாசுக்கு முடிவெடுக்கும் அதிகாரம்

பாட்டாளி மக்கள் கட்சி சிறப்பு பொதுக்குழுக் கூட்டம் சென்னை  ராணி மெய்யம்மை அரங்ககில் இன்று நடைபெற்றது. கட்சியின் நிறுவனர் டாக்டர் ராமதாஸ், தலைவர் அன்புமணி ராமதாஸ் முன்னிலையில் இந்த கூட்டம் நடைபெற்றது. இக்கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட அரசியல் தீர்மானம் விவரம் வருமாறு:-

நாடாளுமன்ற மக்களவைக்கான தேர்தல் வரும் ஏப்ரல், மே மாதங்களில் நடத்தப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. அத்தேர்தலுக்கான அறிவிப்பு இம்மாத இறுதிக்குள் வெளியிடப்படும் என்று தெரிகிறது. பாட்டாளி மக்கள் கட்சிக்கு மட்டுமின்றி தமிழ்நாட்டின் நலன்களை பாதுகாப்பதில் இந்தத் தேர்தல் மிகவும் முக்கியமானது என்று பாட்டாளி மக்கள் கட்சி கருதுகிறது.

மத்தியில் ஆட்சி செய்யும் கட்சிகள் மாறினாலும் கூட, மாநில அதிகாரத்தைப் பறிக்கும் போக்கு மட்டும் மாறவே இல்லை.தமிழ்நாட்டு மாணவர்கள் மீது நீட் தேர்வு திணிக்கப்பட்டதற்கும், தமிழர்கள் தங்களின் வீரத்தின் அடையாளமாகவும், பண்பாட்டுச் சின்னமாகவும் கருதிய ஜல்லிக்கட்டுப் போட்டிகள் தடைசெய்யப்பட்டது ஆகிய அனைத்திற்கும் மாநிலப்பட்டியலில் இருந்த 5 பொருட்கள் மத்தியப் பட்டியலுக்கு மாற்றப்பட்டது தான் காரணம் ஆகும்.

பொதுக்குழுவில் கலந்து கொண்டவர்கள்

இந்த அநீதிக்கு எதிராக போராடவேண்டியது மாநிலக்கட்சிகளின் கடமை ஆகும். அந்தக் கடமையை பா.ம.க. மிகச்சரியாக நிறைவேற்றி வருகிறது.நாடாளுமன்ற மக்களவையில் பாட்டாளி மக்கள் கட்சிக்கு போதிய பிரதிநிதித்துவம் இருந்த காலங்களில் எல்லாம் மாநில சுயாட்சி உரிமைக்காகவும், சமூகநீதிக்காகவும் பாட்டாளி மக்கள் கட்சி குரல்கொடுத்தும், போராடியும் வந்திருக்கிறது. மத்திய அரசின் உயர்கல்வி நிறுவனங்களில் பிற பிற்படுத்தப்பட்ட வகுப்பினருக்கு 27% இடஒதுக்கீட்டைக் கொண்டு வருவது சாத்தியம் இல்லை என்று கூறப்பட்ட நிலையில், ஐக்கிய முற்போக்குக் கூட்டணி அரசில் அங்கம் வகித்த பாட்டாளி மக்கள் கட்சியின் நிறுவனர் மருத்துவர் அய்யா (டாக்டர் ராமதாஸ்), கூட்டணியின் ஒருங்கிணைப்புக்குழு கூட்டத்தில் போர் முழக்கமிட்டு அதை சாத்தியமாக்கினார்.

 தமிழ்நாட்டிற்கும், சமூகநீதிக்கும் பாட்டாளி மக்கள் கட்சியால் கிடைத்த நன்மைகளின் பட்டியல் மிக நீண்டது. மக்களவையில் பா.ம.க. வலிமையாக இருந்ததால் தான் இது சாத்தியமானது.மக்களவையில் பாட்டாளி மக்கள் கட்சிக்கு உரிய பிரதிநிதித்துவம் இல்லாத போதெல்லாம், சமூக நீதிக்கும், தமிழகத்தின் நலன்களுக்கும் பின்னடைவு ஏற்பட்டு வந்திருக்கிறது. இந்த உண்மைகள் சொல்லும் பாடம் என்னவெனில், மக்களவைத் தேர்தல்களில் பா.ம.க.வின் வெற்றி தமிழ்நாட்டின் நன்மை என்பதுதான்.

அதனால்தான் 2024 மக்களவைத் தேர்தலில் கணிசமான இடங்களில் வெற்றி பெற வேண்டும் என்று இலக்கு நிர்ணயித்து, அதற்கான உத்திகளை வகுத்து பாட்டாளி மக்கள் கட்சி செயல்பட்டு வருகிறது.அதன் ஒருகட்டமாக, 2024 மக்களவைத் தேர்தலில் மாநில நலனிலும், தேசிய நலனிலும் அக்கறை கொண்ட கட்சிகளுடன் கூட்டணி அமைத்து போட்டியிட பாட்டாளி மக்கள் கட்சியின் சிறப்புப் பொதுக்குழுக் கூட்டம் தீர்மானிக்கிறது. எந்தெந்த கட்சிகளுடன் கூட்டணி அமைப்பது என்பது குறித்து முடிவெடுக்கும் அதிகாரத்தை கட்சியின் நிறுவனர் மருத்துவர் அய்யா (டாக்டர் ராமதாஸ்)வுக்கு  அதிகாரத்தை வழங்குகிறது.

Digiqole Ad

Related post

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *