25 ஆண்டுகளுக்கு பிறகு சந்தித்த பாபநாசம் திருவள்ளுவர் கல்லூரி முன்னாள் மாணவர்கள்
திருநெல்வேலி மாவட்டம் பாபநாசம் திருவள்ளுவர் கலை கல்லூரியில் 1993ம் ஆண்டு முதல் 2003 ம் ஆண்டு வரை பயின்ற வணிகவியல், வரலாறு மற்றும் தமிழ் துறைகளை சேர்ந்த முன்னாள் மாணவர்களின் முதலாம் ஆண்டு சந்திப்பு நிகழ்ச்சி தென்காசி அருகே ஆயிரப்பேரி – பழைய குற்றாலம் சாலையில் உள்ள பன்லேண்ட் ரிசார்ட்ஸ் அரங்கில் நடைபெற்றது.
நாகாலாந்து, மும்பை உள்ளிட்ட மாநிலங்கள் மற்றும் தமிழ்நாட்டின் பல்வேறு பகுதிகளில் பணிபுரிந்து வரும் 80க்கும் மேற்பட்ட முன்னாள் மாணவர்கள் இந்த சந்திப்பில் கலந்து கொண்டனர்.. செல்போன் வாட்ஸ் அப் மூலம் மட்டுமே பேசிக்கொண்ட அனைவரும் நேரில் முதன் முதலில் சந்தித்ததால் ஆரத்தழுவி கட்டியணைத்து தங்களின் அன்பை பரிமாறிக் கொண்டனர். 25 ஆண்டுகளுக்கு பிறகு இவர்கள் சந்திக்கும் வாய்ப்பு கிடைத்து இருக்கிறது. இதனால் அவர்கள் அளவில்லா மகிழ்ச்சியில் காணப்பட்டனர்.
காலையில் தொடங்கிய நிகழ்வில், கல்லூரி காலத்தில் நடைபெற்ற சுவாரஸ்யமான நிகழ்ச்சிகள் பற்றி பேசி மகிழ்ச்சியை பகிர்ந்து கொண்டனர். மேலும் தற்போது செய்து வரும் பணி, வாழக்கை நிலவரம் பற்றி பேசினார். பின்னர் மதிய விருந்து பரிமாறப்பட்டது நண்பர்கள் அனைவரும் அமர்ந்து ஒருவருக் கொருவர் உணவை புன்னகையுடன் பரிமாறிக் கொண்டு உணவு அருந்தினர்.
மதிய உணவு இடைவேளைக்கு பிறகு நடைபெற்ற நிகழ்ச்சியில் பாபநாசம் தாமிரபரணி நதியை சுத்தம் செய்யும் சேவை புரிந்ததற்காக முன்னாள் மாணவரான ராமகிருஷ்ணன் மற்றும் பொருளாதார வளர்ச்சிக்கு ஊக்குவிக்கும் வண்ணம் சிவதாசன், பொன்னுசாமி, கோபிநாத்,சிவகுமார் ஆகிய 5 பேருக்கும் பாபநாசம் முன்னாள் மாணவர்கள் சார்பில் தங்க நாணயம் வழங்கப்பட்டது.
திருவள்ளுவர் கல்லூரியின் முன்னாள் மாணவர்களின் முதலாம் ஆண்டு சந்திப்பு நிகழ்ச்சியில் பங்கேற்ற அனைவருக்கும் வாழ்க்கையில் மறக்கமுடியாத நாள் ஆகிவிட்டது. இனிமேல் ஒவ்வொரு ஆண்டும் இதுபோல் சந்திப்பு நிகழ்ச்சி நடத்துவது என்று அவர்கள் முடிவு செய்து கொண்டனர். பின்னர் அனைவரும் பிரியாவிடை பெற்று கிளம்பி சென்றனர்.