• May 3, 2024

மனைவியை எரித்து கொன்றவருக்கு ஆயுள் தண்டனை

 மனைவியை எரித்து கொன்றவருக்கு ஆயுள் தண்டனை

தென்காசி அருகே பாலமார்த்தாண்டபுரம் பிள்ளையார் கோவில் தெருவை சேர்ந்தவர் பொன்னுத்துரை (வயது 44). இவர் அப்பகுதியில் ஒரு மெடிக்கல் கடையில் ஊழியராக வேலை செய்தார். இவருக்கும், பக்கத்து ஊரான திருமலாபுரத்தைச் சேர்ந்த கருப்பசாமி மகள் லலிதாவுக்கும் கடந்த 2012-ம் ஆண்டு திருமணம் நடந்தது. பின்னர் பொன்னுத்துரை தனது மனைவி லலிதாவின் நடத்தையில் சந்தேகப்பட்டு, அவரிடம் அடிக்கடி தகராறு செய்து வந்தார். இதனால் லலிதா தனது பெற்றோரின் வீட்டுக்கு சென்றார்.

இந்த நிலையில் கடந்த 5.7.2014 அன்று பொன்னுத்துரை தனது மாமனாரின் வீட்டுக்கு சென்று, மனைவி லலிதாவை குடும்பம் நடத்த வருமாறு அழைத்து சென்றார். பின்னர் மறுநாள் அதிகாலையில் வீட்டில் தூங்கி கொண்டிருந்த மனைவி லலிதாவின் மீது பொன்னுத்துரை மண்எண்ணெய் ஊற்றி உயிரோடு தீ வைத்து விட்டு, வீட்டை வெளிப்பக்கமாக பூட்டி சென்றார். 

இதில் உடல் கருகி பலத்த காயமடைந்த லலிதாவை அக்கம்பக்கத்தினர் மீட்டு சிகிச்சைக்காக தென்காசி அரசு மருத்துவமனையில் அனுமதித்தனர். ஆனால், அங்கு சிகிச்சை பலனின்றி 7.7.2014 அன்று லலிதா இறந்தார். இதுகுறித்து ஆய்குடி போலீசார் வழக்குப்பதிவு செய்து பொன்னுத்துரையை கைது செய்தனர். இந்த வழக்கு தென்காசி மாவட்ட கூடுதல் நீதிமன்றத்தில் நடைபெற்று வந்தது. 

வழக்கை விசாரித்த நீதிபதி அனுராதா, மனைவியை தீ வைத்து எரித்து கொன்ற பொன்னுத்துரைக்கு ஆயுள் தண்டனை மற்றும் ரூ.2 ஆயிரம் அபராதம் விதித்து தீர்ப்பு கூறினார். அபராதத்தை செலுத்த தவறினால் மேலும் ஓராண்டு சிறை தண்டனை அனுபவிக்கவும் உத்தரவிட்டார். இந்த வழக்கில் அரசு தரப்பில் வக்கீல் வேலுச்சாமி ஆஜரானார்.

Digiqole Ad

Related post

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *