• May 3, 2024

மதுரையில் சுற்றுலா ரெயில் பெட்டியில் தீவிபத்து; 9 பேர் பலி

 மதுரையில் சுற்றுலா ரெயில் பெட்டியில் தீவிபத்து; 9 பேர் பலி

உத்தர பிரதேச மாநில பயணிகளை ஏற்றி கொண்டு சுற்றுலா ரெயில் ஒன்று கடந்த 17-ந்தேதி தமிழகம் வந்தடைந்தது. மதுரை ரெயில் நிலையத்தில் இருந்து 1 கி.மீ. தொலைவில் மதுரை போடி லைன் பகுதியில் சுற்றுலா ரெயிலின் இரண்டு பெட்டிகள் நிறுத்தி வைக்கப்பட்டு இருந்தது.

இந்த நிலையில், இன்று காலையில் ஒரு ரெயில் பெட்டி திடீரென தீப்பற்றி எரிந்தது. அப்போது, ரெயிலில் கடைசியாக இருந்த சிறப்பு முன்பதிவு ரெயில் பெட்டியில் 90 பேர் இருந்தனர். தீ விபத்து பற்றி அறிந்ததும் 60-க்கும் மேற்பட்டோர் ரெயில் பெட்டியில் இருந்து கீழே இறங்கி தப்பியோடி விட்டனர்.

எனினும், முதலில் 2 பேர் உயிரிழந்தனர் என தகவல் வெளியானது. பின்னர் பலி எண்ணிக்கை 9 ஆக உயர்ந்தது. பலருக்கு காயம் ஏற்பட்டு உள்ளது. சிலருக்கு தீ விபத்து, அதன் தொடர்ச்சியாக எழுந்த புகையால் மூச்சு திணறல் ஏற்பட்டு உள்ளது. அவர்கள் அனைவரும் சிகிச்சைக்காக மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டனர்.

தீ விபத்தில் உயிரிழந்தவர்கள் உத்தர பிரதேச மாநிலத்தில் இருந்து சாமி தரிசனம் செய்ய வந்தவர்கள் என கூறப்படுகிறது.,. தீயணைப்பு வீரர்கள், தீயை அணைக்கும் பணியில் ஈடுபட்டனர். ரெயில்வே அதிகாரிகள், மருத்துவ குழுவினர், பாதுகாப்பு படையினர், வருவாய் துறையினர் சம்பவ பகுதிக்கு விரைந்தனர்.

 ரெயிலில் சுற்றுலா பயணிகள் கியாஸ் சிலிண்டரை பயன்படுத்தி சமையல் செய்தபோது, அது வெடித்து தீ விபத்து ஏற்பட்டு உள்ளது என்று கூறப்படுகிறது. இந்த ரெயில் பெட்டியில் தீ பற்றி எரிந்து கொண்டிருந்தபோது, மற்றொரு ரெயில் அந்த பகுதியை கடந்து சென்றது. இதனால், ரெயிலில் தீப்பிடிக்க கூடிய பொருட்களை ஏற்றி செல்ல அனுமதி இல்லாத நிலையில், இந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

இதனை தொடர்ந்து, தீயை அணைக்கும் பணி முழுமையடைந்து உள்ளது. அந்த ரெயில் பெட்டி தனியாக கொண்டு செல்லப்பட்டு உள்ளது. உயிரிழந்தவர்களின் உடல்களை மீட்கும் பணி நடந்து வருகிறது. இதில், 9 பேரின் உடல்கள் மீட்கப்பட்டு உள்ளன. இதுபற்றி மதுரை கலெக்டர் சங்கீதா நேரில் சென்று ஆய்வில் ஈடுபட்டார்.

இந்த நிலையில், பயணிகள் சட்ட விரோதமாக சிலிண்டர் கொண்டுவரப்பட்டதே விபத்துக்கு காரணம் என தெற்கு ரெயில்வே நிர்வாகம் தெரிவித்து உள்ளது.

ஐஆர்சிடிசி இணையதளத்தில் யார் வேண்டுமானாலும் டிக்கெட் முன்பதிவு செய்யலாம் என்றும், ஆனால் ரெயிலில் பயணிப்பவர்கள் சிலிண்டர் போன்ற எளிதில் தீப்பற்றும் பொருட்களை கொண்டுசெல்லக்கூடாது எனவும் தெற்கு ரெயில்வே நிர்வாகம் தெரிவித்துள்ளது.

சட்ட விரோதமாக கொண்டுவரப்பட்ட சிலிண்டர் மூலமாக பயணிகள் சமையல் செய்ய முற்பட்டபோது தீ விபத்து ஏற்பட்டதாகவும் தெற்கு ரெயில்வே அறிக்கையில் தெரிவித்துள்ளது.
தெற்கு ரெயில்வே வெளியிட்ட இன்னொரு  செய்தியில், மதுரையில் ரெயிலில் ஏற்பட்ட தீ விபத்தில் சிக்கி உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு தலா ரூ.10 லட்சம் நிவாரணம் வழங்கப்படும். இதுபற்றி விரிவான விசாரணை நடந்து வருகிறது என அறிவித்து உள்ளது.


Digiqole Ad

Related post

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *