கார்கில் வெற்றி தினம்; இந்திய வரைபடத்தில் அகல்விளக்குகள் ஏற்றி மாணவிகள் மரியாதை

1999ம் ஆண்டு இந்தியாவிற்கும் பாகிஸ்தானுக்கும் இடையே நடந்த கார்கில் போரில் 527 ராணுவ வீரர்கள் வீரமரணம் அடைந்தனர்.1363 வீரர்கள் படுகாயம் அடைந்தனர். 1999ம் ஆண்டு ஜூலை 26ம் தேதி வரை நடந்த கார்கில் போரில் இந்தியா வெற்றிபெற்றது. உயிர் தியாகம் செய்த 527 ராணுவ வீரர்களின் தியாகங்களை நினைவு கூரும் வகையில் ஆண்டு தோறும் ஜூலை 26 கார்கில் வெற்றி தினமாக நாடு முழுவதும் கொண்டாடப்படுகிறது.
கோவில்பட்டி அரசு மகளிர் மேல்நிலைப் பள்ளியில் நடந்த கார்கில் வெற்றி தினத்தில் பள்ளி மாணவிகள் இந்தியா வரைபடம் வரைந்து அதில் 527 ராணுவ வீரர்களின் தியாகங்களை நினைவு படுத்தும் வகையில் 527 அகல் விளக்குகள் ஏற்றி இந்தியாவின் பாதுகாப்பிற்கும், ஒற்றுமைக்கும், வளர்ச்சிக்கும் பாடுபட உறுதிமொழி எடுத்துக் கொண்டனர்.
இந்நிகழ்ச்சிக்கு பள்ளி தலைமை ஆசிரியை ஜெயலதா தலைமை தாங்கினார். பள்ளி மேலாண்மை குழு உறுப்பினர் முத்து முருகன் முன்னிலை வகித்தார். ஆசிரியை உமா மகேஸ்வரி அனைவரையும் வரவேற்றார். பள்ளி மாணவிகள் இந்தியா வரைபடத்தில் 527 அகல் விளக்குகள் ஏற்றி மரியாதை செலுத்தினர்.
இந்நிகழ்ச்சியில் பள்ளி உதவி தலைமை ஆசிரியர்கள் உஷா ஜோஸ்பின், கண்ணன், சீனிவாசன், வரலாற்று துறை ஆசிரியர்கள் பிரியா, சுப்புலட்சுமி, பிரேமா, சகுந்தலா, ஸ்டெல்லா, சாந்தி, உமா மகேஸ்வரி உள்ளிட்ட ஆசிரியர்கள், மாணவிகள் பலர் கலந்து கொண்டனர். முடிவில் ஓவிய ஆசிரியர் ஆவடைத்தாய் நன்றி கூறினார்.
