• May 8, 2024

செந்தில் பாலாஜி செய்தது ஊழல் முறைகேடு என்றால், ஆளுநர் ஆர்.என்.ரவி செய்திருப்பது அதிகார முறைகேடு ; சீமான் கண்டனம்

 செந்தில் பாலாஜி செய்தது ஊழல் முறைகேடு என்றால், ஆளுநர் ஆர்.என்.ரவி செய்திருப்பது அதிகார முறைகேடு ; சீமான் கண்டனம்

நாம் தமிழர் கட்சி தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் ஆளுநர் ரவிக்கு கண்டனம் தெரிவித்து தனது டுவிட்டர் பக்கத்தில்  கூறி இருப்பதாவது:-

அமைச்சர் செந்தில் பாலாஜியை தமிழ்நாடு அரசின் அமைச்சரவையிலிருந்து நீக்கி அறிவித்திருக்கும் ஆளுநர் ஆர்.என்.ரவியின் தான்தோன்றித்தனமான செயல்பாடு எதேச்சதிகாரப்போக்கின் உச்சமாகும்.

மக்களால் தேர்வுசெய்யப்பட்ட சட்டமன்ற உறுப்பினர்களைக் கொண்டு, அமைக்கப்பட்டிருக்கும் மாநில அரசின் அமைச்சரவையிலிருந்து ஒருவரை நீக்கும் அதிகாரம் மாநில அரசுக்கே உண்டு எனும் மரபைத் தகர்த்து, அரசின் நிர்வாகத்தில் அத்துமீறி தலையிட்டு, செந்தில்பாலாஜியை அமைச்சர் பதவியிலிருந்து நீக்கம் செய்திருக்கும் ஆளுநரின் முடிவு எதன்பொருட்டும் ஏற்புடையதல்ல.

செந்தில் பாலாஜி மீதான ஊழல் வழக்குகள் நேர்மையாக நடைபெற வேண்டும் என்பதிலோ, சட்டத்தின்படி அவர் தண்டிக்கப்பட வேண்டும் என்பதிலோ மாற்றுக்கருத்தில்லை. ஆனால், அதனைக் காரணமாகக் காட்டி, மாநில அரசின் இறையாண்மை மீது தாக்குதல் தொடுக்கும் ஆளுநரின் அட்டூழியப்போக்கை ஒருபோதும் ஏற்க முடியாது.

சட்டத்தின்படி, செந்தில் பாலாஜியை நீதிமன்றம் தண்டிக்க வேண்டும். தார்மீகக்கோட்பாட்டின்படி, மக்கள் தேர்தல் களத்தில் தோற்கடித்து, தண்டிக்க வேண்டும். இதற்கிடையே, ஆளுநர் இதனை வைத்து அரசியல் செய்ய முயல்வதும், அரசின் நிர்வாக முடிவை மாற்றி அமைக்க முற்படுவதும் அப்பட்டமான சட்டவிரோதமாகும்.

தம்பி பேரறிவாளன் விடுதலை வழக்கில், மக்களால் தேர்வுசெய்யப்பட்ட மாநில அரசின் முடிவுக்கு ஆளுநர் கட்டுப்பட்டவர் எனக்கூறி, மாநிலத்தன்னுரிமையை நிலைநாட்டியுள்ள நிலையில், அதற்கு மாறாக, அதிகாரத்தைத் தவறாகப் பயன்படுத்தியிருக்கும் ஆளுநரது முடிவு சனநாயக முறைமைக்கும், மாநிலத் தன்னாட்சிக்கும் எதிரானது. தம்பி செந்தில் பாலாஜி செய்தது ஊழல் முறைகேடு என்றால், ஆளுநர் செய்திருப்பது அதிகார முறைகேடு! அதற்கு எனது கடும் கண்டனத்தையும், எதிர்ப்பையும் பதிவுசெய்கிறேன்.

இவ்வாறு சீமான் கூறி இருக்கிறார் .

Digiqole Ad

Related post

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *