கோவில்பட்டி ரெயில்நிலைய வளாகத்தில் மினி பஸ்-ஆட்டோ டிரைவர்கள் மோதலை தடுக்க சமாதான கூட்டம்; பல்வேறு பிரச்சினைகளுக்கு தீர்வு
கோவில்பட்டி ரெயில்நிலைய வளாகத்தில் அதிகாலை நேரத்தில் ரெயில்களில் வரும்பயணிகளை ஏற்றி செல்வதில் ஆட்டோ டிரைவர்களுக்கு போட்டியாக மினி பஸ்கள் நிறுத்தப்பட்டதால் ஆட்டோ டிரைவர்கள் பாதிக்கப்பட்டனர்,\
மேலும் இது தொடர்பாக மினி-பஸ்-ஆட்டோ டிரைவர்களுக்கு இடையே மோதல் ஏற்படும் சூழல் உருவானது.இதையொட்டி சில நாட்களுக்கு முன்பு ரெயில்நிலைய ஆட்டோ டிரைவர்கள் சங்கத்தினர், கோட்டாட்சியர் அலுவலகம் முன்பு ஆர்ப்பாட்டம் நடத்தி கோரிக்கை மனு அளித்தனர்.
இதை தொடர்ந்து கோவில்பட்டி வட்டார போக்குவரத்து அலுவலகத்தில் மினி பஸ் உரிமையாளர்கள் மற்றும் ஆட்டோ டிரைவர்கள் கலந்து கொண்ட சமாதான பேச்சுவார்த்தை கூட்டம் நேற்று நடத்தப்பட்டது.
வட்டார போக்குவரத்து அலுவலர் நெடுஞ்செழிய பாண்டியன் தலைமை தாங்கினார். போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் ரவீந்திரன் முன்னிலை வகித்தார். கூட்டத்தில், ஆட்டோ தொழிலாளர்கள் சங்கம் சார்பில் ராமகிருஷ்ணன், மினி பஸ் உரிமையாளர்கள் ராஜகுரு, அருணாச்சலம், கிஷோர்குமார், அழகர் ராமானுஜம், ஹரிக்குமார், ராஜேந்திரன், வட்டார போக்குவரத்து அலுவலக கண்காணிப்பாளர் இன்பகுமார் மற்றும் ஆட்டோ டிரைவர்கள் கலந்து கொண்டனர்.
… கூட்டத்தில், மிஎடுக்கப்பட்ட முடிவுகள் வருமாறு:-
*மினி பஸ்கள் தங்களுக்கு வழங்கப்பட்ட வழித்தடங்கள் மற்றும் நேரங்களில் மட்டும் இயக்க வேண்டும். *ரெயில்வே துறை அனுமதி வழங்கிய ஆட்டோக்கள் மட்டுமே ரெயில்வே ஆட்டோ நிறுத்தத்தில் நிறுத்தி வைக்க வேண்டும்.
*மினி பஸ்களில் ஏறிய பயணிகளை ஆட்டோ டிரைவர்கள் தங்கள் வாகனங்களுக்கு அழைக்கக்கூடாது.
* ஆட்டோக்களை ஷேர் ஆட்டோ போல் இயக்கக் கூடாது. *மினி பஸ்களுக்கு போக்குவரத்து வழங்கிய வழித்தடத்தின் கடைசி நிறுத்தம் வரை சென்று வர வேண்டும்.
*ரெயில் நிலையம் முன்பு மினி பஸ்களுக்கு வாகன எண்ணுடன் கூடிய நேர அட்டவணை மற்றும் ஆட்டோக்களுக்கு வாகன எண்ணுடன் கூடிய விவர பட்டியல் தகவல் பலகை வைக்க வேண்டும்.
*முறையான ஆவணங்கள் மற்றும் முறையாக கட்டணம் வசூலித்து வாகனங்களை இயக்க வேண்டும்.
*விதிகளை மீறினால் காவல்துறை மூலம் நடவடிக்கை எடுக்கப்படும்.
*மினி பஸ் டிரைவர்களும், ஆட்டோ டிரைவர்களும் நேரடியாக பேசிக்கொள்ளக்கூடாது.
*புகார்கள் இருந்தால் சம்பந்தப்பட்ட துறையிடம் தெரிவித்து தீர்வு காண வேண்டும்
மேற்கண்ட ,முடிவுகளை இருதரப்பினரும் ஏற்றுகொண்டனர்,.