தாத்தா தேடிய அரைக்கீ … (சிறுகதை)
ஒரு ஊரிலே ஒரு தாத்தா இருந்தார்.அவர் பேரன்களுக்கு புதிர் கதை சொல்வார்.விடை சொல்லாவிட்டால் விடமாட்டார்.
இதனால் தாத்தா கண்ணில் மாட்டாமல் பாட்டியிடம் பேரன்கள் ஓடிவந்தனர்.பாட்டி அவர்களை அரவணைத்து அன்பாக பேசுவார்.
அப்போது அவர்கள் பாட்டி நீங்கள் ஒரு கதை சொல்லுங்கள் என்று பேரன்கள் கேட்க பாட்டி சிரித்தபடி …நான் கதை சொல்லட்டுமா என்று சொல்லத்தொடங்கினார்.
ஒரு ஊரிலே ஒரு பாட்டி தாத்தா இருந்தாங்க…பாட்டிக்கும் தாத்தாவுக்கும் எப்போதும் சண்டைதான்.தாத்தா சொல்லுறதை பாட்டி கேட்கமாட்டாங்க..பாட்டி சொல்லுறதை தாத்தா கேட்கமாட்டாங்க…
ஏன்னா இரண்டு பேருக்கும் காது கேட்காது. பிறகு எப்படி சொல்லுறதை கேட்கிறது.இரண்டும் சண்டை போட்டாலும் கொஞ்ச நேரத்தில அமைதியாகிடுவாங்க…அவ்வளவு பாசம்..
இப்படியிருக்கும்போது..ஒருநாள் திடிரென்று பாட்டிக்கும் தாத்தாவுக்கும் தகராறு. .தாத்தா கோபத்தில் வீட்டிலிருந்து கடை வீதிக்கு சென்றுவிட்டார்.மாலையில் வீட்டுக்கு திரும்பிவந்தார்.
வீடு பூட்டிக்கிடந்தது.வழக்கமா வீட்டை பூட்டிவிட்டு சாவியை கதவுக்கு மேல் பாட்டிவைத்துவிட்டு செல்வார்.அப்படிவைத்துவிட்டு சென்றிருப்பார் என்று தாத்தா நினைத்து கதவுக்கு மேல் பார்த்தார்.ஆனால் சாவி இல்லை. பாட்டியையும் காணவில்லை.
இதனால் கோபம் அடைந்த அவர்..அரைக்கீயை காணம்…அரைக்கீய எங்கே என்று சத்தம் போட்டார்.தாத்தா
கோபத்தில் பாட்டியைத்தான் அரைக்கின்னு திட்டுறாருன்னு நினைத்து அக்கம்பக்கத்தில் உள்ளவர்கள்..எங்களுக்கு தெரியவில்லை..நல்லா தேடிப்பாருங்க என்றனர்.அவர் ஒரு தவு மேல நல்லாப்பார்த்தார்.ஒன்றும் சிக்கவில்லை.அதைப்பார்த்தவர்கள் என்ன மனைவியை காணவில்லை என்றால் கதவுக்கு மேல தேடிட்டு இருக்காரு…என்று நினைத்து சிரித்தனர்
.தாத்தாவுக்கு: அவர்களை பார்த்து கோபம் வந்தது.என்ன இப்படி சிரிக்கிறாங்க என்று நினைத்தவாறு வீட்டின்முன் திண்ணையில் அமர்ந்தார்.அந்த வழியாக சென்றவர்கள் என்ன வீட்டுக்கு வெளியே இருக்கீங்க என்று கேட்க தாத்தாவோ அரைக்கீயை காணம்..அதான் தேடுறேன் என்றார்.
: மனைவி மேல கோபம் இருந்தாலும் அரைக்கீன்னு சொல்லலாமா என்றபடி அவர்கள் சென்றனர்.தாத்தாவுக்கு ஆத்திரம்தான் வந்தது.இந்த நேரத்தில்வீட்டை பூட்டிவிட்டு கடைவீதியில் தாத்தாவை தேடிச்சென்ற பாட்டி அவரை காணாமல்…வீட்டுக்கு திரும்பி வந்தார்.அவரைப்பார்த்ததும் தாத்தா கோபத்தில் அரைக்கீ எங்கே கொண்டு போன என்று திட்டினார்.
உடனே பாட்டி தன் இடுப்பில் மறைத்துவைத்திருந்த சாவியை எடுத்து தாத்தாவிடம் நீட்டினார்.அவர் சாவியை வாங்கி கதவை திறந்துவிட்டு மனைவியை பார்த்து வா பேபி என்று அழைக்க அவரும் பொக்கைவாயால் சிரித்தபடி வீட்டுக்குள் சென்றார்.
இதைப்பார்த்தவர்கள் ஒன்றும் புரியாமல் விழித்தனர்.இந்த பிரச்சினைக்கு என்ன காரணம் சொல்லுங்க என்று பேரன்களிடம் பாட்டி கேட்டார்.
பேரன்கள் சரியா புரியலை என்றனர்.அதற்கு பாட்டி மெல்ல சிரித்தபடி..தாத்தா அந்த காலத்து பத்தாம் கிளாஸ்பாஸ்..அவர் பாதி இங்கிலீசும் பாதி தமிழும் கலந்து பேசுவார்.அப்படித்தான் இங்கேயும் மாட்டிக்கொண்டார்.
எப்படி.அறைச்சாவின்னு கேட்கிறதுக்கு பதிலாக அரைக்கீ என்று சொல்ல அது அரக்கியை சொல்வதாக பொருள் வந்துவிட்டது.இதன் மூலம் என்ன தெரியுது.ஒண்ணு தமிழில் பேசணும்.இல்லை ஆங்கிலத்தில் பேசணும்.இரண்டையும் கலந்துபேசினால் சிக்கல்வரும்..புரியுதா என்றார்.பேரன்களும் அதைக்கேட்டு சிரித்தனர்.
வே.தபசுக்குமார்.முள்ளன்விளை.தூத்துக்குடி.