• May 20, 2024

ஈரோடு இடைத்தேர்தலில் 50 ஆயிரம் வாக்குகள் வித்தியாசத்தில் அ. தி. மு. க. வெற்றி பெறும் -டி. ஜெயக்குமார் பேட்டி

 ஈரோடு இடைத்தேர்தலில் 50 ஆயிரம் வாக்குகள் வித்தியாசத்தில் அ. தி. மு. க. வெற்றி பெறும் -டி. ஜெயக்குமார் பேட்டி

news:
சென்னையில் அதிமுக.தலைமை கழகத்தில் முன்னாள் அமைச்சர் டி.ஜெயக்குமார்  செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டியின் போது கூறியதாவது :-

இந்த இயக்கத்திற்கு அழிவே இல்லை என்ற கருத்தை  புரட்சித்தலைவர்  எடுத்துவைத்தார். அந்த கருத்தின் அடிப்படையில் புரட்சித்தலைவரின் மறைவுக்கு பிறகு புரட்சித்தலைவி அம்மாவும் ,அம்மாவின் மறைவுக்கு பிறகு எடப்பாடியாரும் இன்றைக்கு கழகத்தை வலிமைமிக்க இயக்கமாக  உருவெடுத்து, ஒவ்வொரு தொண்டனும் அம்மாவின் பிறந்தநாள் விழாவை மகிழ்ச்சியான விழாவாக இன்றைக்கு கொண்டாடி கொண்டிருக்கின்றோம்.
அம்மாவை பொறுத்தவரையில் அவர் மறைந்துவிடவில்லை.அவருடைய நல்லாசி நமக்கு இருக்கின்றது.
ஒவ்வொரு தொண்டனுடைய நெஞ்சங்களிலும் அம்மா நிறைந்திருப்பதால் நம்முடைய கழகத்தை  பொறுத்தவரை இன்றும் 100 ஆண்டுகள் ஓங்கி வளரும் என்ற வகையிலே, நம்முடைய புரட்சித்தலைவியின் எண்ணங்கள் நிறைவேறியுள்ளது. இந்த 75 வது பிறந்தநாள் விழாவில் மிகப்பெரிய அளவிலே உச்சநீதிமன்றம் ஒரு தீர்ப்பை வழங்கி,எடப்பாடியார் இடைக்கால பொதுச்செயலாளர் என்பதை உறுதிப்படுத்தி, கழகத்திற்கு ஊறுவிளைவித்து கழகத்திற்கு துரோகம் விளைவித்து,கழகம் தலை தூக்ககூடாது எனவே அதனை எப்படியாவது அழித்துவிடவேண்டும் என்ற எண்ணத்தை கொண்ட திமுகவோடு கைகோர்த்துக்கொண்டு திமுவின் பி டீமாக செயல்பட்ட ஒ-பன்னீர்செல்வம் போன்றவர்கள் எல்லாம் இன்றைக்கு, அடையாளம் தெரியாதவர்களாக,தொண்டர்களால் நிராகரிக்கப்பட்டவர்களாக,மக்களால் நிராகரிக்கப்பட்டவர்களாக இருக்கின்ற நிலையில்  எங்களுடை பயணம் என்பது ஒரு வெற்றி பயணமாக, நிச்சயமாக இந்த 75 வது ஆண்டு மட்டுமல்ல இன்றும் 100 ஆண்டுகாலத்திற்கும் வெற்றி பயணமாக தொடரும்.
ஈரோட்டில் நாங்கள் பெறுகின்ற ஒரு மகத்தான வெற்றி,பாராளுமன்றத்திலே எதிரொலிக்கும். பாராளுமன்ற தேர்தலில் நாங்கள் பெறுகின்ற மகத்தான வெற்றி 2026 சட்டமன்ற தேர்தலில் எதிரொலிக்கும்.
இவ்வாறு டி. ஜெயக்குமார் தெரிவித்தார்.

தொடர்ந்து செய்தியாளர்கள் கேட்ட கேள்வியும்,அதற்கு அவர் அளித்த பதிலும் வருமாறு
கேள்வி : உச்சநீதிமன்ற தீர்ப்பு என்பது முழுமையான தீர்ப்பு இல்லை.இன்னும் எங்களுக்கு வாய்ப்பு உள்ளது என்று தெரிவித்துள்ளார்களே.
பதில் :  அவர்கள் ஆயிரம் சொல்லலாம்.அது அவர்களுடைய கருத்து. இந்தியாவுக்கு எப்படி சட்டதிட்டம் உள்ளதோ,அதுபோல கழகத்திற்கும் சட்டத்திட்டம் உண்டு. சட்டப்படி,நியாயப்படி சரியான பாதையில் நாங்கள் சென்றுகொண்டிருக்கின்றோம். நாங்கள் சரியான பாதையில் சென்றுகொண்டிருப்பதால் அவர் எத்தனை சுற்றுகள்  போனாலும் சரி.நாங்கள்தான் வெற்றிபெறுவோம்.பொதுக்குழு உறுப்பினர்கள் அனைவரும் ஒருமித்த கருத்தோடு இருக்கும்போது அதைவிட ஒரு வலிமையான சக்தி இருக்காது.அவர்களை பொறுத்தவரை அவர்கள் எப்படி வேண்டுமானாலும் போகட்டும்.எங்களை பொறுத்தவரையில் நாங்கள் சட்டப்படி நியாயப்படி செல்கின்றோம்.
கேள்வி:  6 சட்டமன்ற உறுப்பினர்கள் மற்றும் நாடாளுமன்ற உறுப்பினரின் நிலை என்ன?


பதில் : இது குறித்து ஏற்கனவே எடப்பாடியார் தெளிவுப்படுத்திவிட்டார். திமுகவின் பி டீமாக இருக்கின்ற ஓ.பன்னீர்செல்வத்தை எப்படி சேர்க்க முடியும் என்ற தெரிவித்துவிட்டார்.இதுதான் ஒட்டுமொத்த தொண்டர்களின் கருத்தும்கூட.பொதுக்குழுவின் கருத்தும் அதுதான்.ஓ.பி.எஸ்,டிடிவி தினகரன்,சசிகலா தவிர மீதி யாரும் எங்களுக்கு எதிரி இல்லையே. ரவீந்திரநாத் அதிமுகவில் இல்லை.இது குறித்து ஏற்கனவே பாராளுமன்றத்தில் கடிதம் அளிக்கப்பட்டுள்ளது.
கேள்வி : ஆணையத்தில் இதுவரை ஒருங்கிணைப்பாளர் என்று என்னுடைய பெயர்தான்  இருக்கின்றது என்று தெரிவித்துள்ளாரே
பதில் :  உச்சநீதிமன்ற தீர்ப்பின் அடிப்படையில் முன்னாள் சட்டத்துறை அமைச்சர் மற்றும் கழக வழக்கறிஞர்கள் குழுவினர் தேர்தல் ஆணையத்திற்கு செல்கின்றனர்.உச்சநீதிமன்ற தீர்ப்பின் அடிப்படையில்தான் தேர்தல் ஆணையம் செயல்பட  முடியும்.
கேள்வி : பொதுச்செயலாளருக்கான தேர்தல் எப்போது நடத்தப்படுகிறது
பதில் :  மூத்த கட்சி நிர்வாகிகளுடன் சேர்ந்து இது குறித்து முடிவு செய்யப்படும் என்று ஏற்கனவே எடப்பாடியார் தெரிவித்துள்ளார். உரிய நேரத்தில் உரியவை அனைத்தும் கண்டிப்பாக நடந்தே தீரும்.
கேள்வி : ஒரு பாராளுமன்ற உறுப்பினர் இருக்கின்றாரே
பதில் :- கடந்த காலம் குறித்து பேசவேண்டாம்.இதற்கு ஒரு முற்றுபுள்ளியை உச்சநீதிமன்றம் வைத்துள்ளது.முற்றுப்புள்ளி வைத்த பிறகு  அவர் (ரவீந்திரநாத் ) எப்படி அதிமுகவில் தொடர முடியும்.அவருக்கும் கட்சிக்கும் சம்பந்தம் கிடையாது.தகுதி நீக்கம் செய்கிறார்களா இல்லையா என்பதை பாராளுமன்றம்தான் முடிவு செய்யும்.
கேள்வி :  பாஜகவை அதிமுக தொடர்ந்து புறக்கணிப்பதாக குற்றச்சாட்டு உள்ளதே

பதில் ;அது உங்களின் கற்பனை. கூட்டணி தர்மம் உள்ளது. ஒட்டுமொத்தமாக  திமுகவுக்கு கூட்டணி கட்சிகள் சரியான பதிலடி கொடுத்து அதன் மூலம் பாடம் கற்பிக்கவேண்டும்.அதன் அடிப்படையில் கூட்டணி கட்சியினர் வீறுகொண்டு உழைத்துக் கொண்டுள்ளார்கள். எங்களுடைய வேட்பாளர் கூட்டணி கட்சியின் ஆதரவோடு 50 ஆயிரம் வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்று,இந்த விடியா அரசுக்கு பேரிடியாக விழுகின்ற வகையிலே முடிவுகள் இருக்கும்.
கேள்வி:- இந்த தீர்ப்பு அதிமுகவை மேலும் பலவீனப்படுத்தும் என்று டிடிவி தினகரன் தெரிவித்துள்ளாரே
பதில்:-  அவர் எப்போது சட்ட வல்லுனர் ஆனார் என்று எனக்கு தெரியவில்லை. முதலில் அவர் சட்டம் படித்துவிட்டு வரட்டும். நான் பதில் சொல்கிறேன். உச்சநீதிமன்றமே தீர்ப்பு அளித்துவிட்டது. இவருடைய கருத்தை உதாசினப்படுத்தி, புறம்தள்ளவேண்டியதுதான்.

இவ்வாறு டி. ஜெயக்குமார் பதில் அளித்தார்.

Digiqole Ad

Related post

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *