• May 20, 2024

இலட்சியத்தை  அடைய துணிச்சலான முடிவுகளை எடுக்க வேண்டும்;கல்லூரி மாணவ, மாணவிகள் மத்தியில் ஆட்சியர் செந்தில்ராஜ் பேச்சு  

 இலட்சியத்தை  அடைய துணிச்சலான முடிவுகளை எடுக்க வேண்டும்;கல்லூரி மாணவ, மாணவிகள்  மத்தியில் ஆட்சியர் செந்தில்ராஜ் பேச்சு  

தூத்துக்குடி மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் பயிற்சித்துறையின் கீழ் செயல்படும் தொழில்நெறி வழிகாட்டும் மையம் மற்றும் காமராஜ் கல்லூரி இணைந்து நடத்திய கல்லூரி மாணவ/ மாணவர்களுக்கான தொழில்நெறி வழிகாட்டும் புத்தக கண்காட்சி மற்றும் கருத்தரங்கினை மாவட்ட ஆட்சியர் கி.செந்தில் ராஜ்,  இன்று தொடங்கி வைத்தார்.

பின்னர் அவர் பேசுகையில் கூறியதாவது:-‘

 உலக நாடுகளிலேயே அதிக அளவில் இளம் மக்கள்தொகையை கொண்ட நாடு இந்தியா ஆகும். இந்தியாவில் உள்ள மக்களின் சராசரி வயது 29 ஆகும். உலக நாடுகளில் சீனாவில் 38, அமெரிக்காவில் 40, ஐரோப்பாவில் 46 சராசரி வயதாக உள்ளது. அடுத்த 20 ஆண்டுகளில் இந்தியாவின் சராசரி வயது 35ஆக மாறும்பொழுது சீனா, ஐரோப்பாவின் சராசரி வயது 50க்கு சென்றுவிடும். 

இந்தியர்கள்தான் வரும் காலங்களில் உலகம் முழுவதும் பல்வேறு துறைகளில் பணியாற்ற இருக்கிறார்கள். இந்த மாதிரியான சூழ்நிலையில் பட்டதாரியாகும் உங்களுக்கு சிறப்பான எதிர்காலம் இருக்கிறது. உலக அளவில் இந்திய இளைஞர்களுக்கு நிறைய வாய்ப்புகள் உள்ளது. வாய்ப்புகளை பயன்படுத்திக்கொள்ள கல்லூரி படிப்பு அடிப்படைதான் என்றாலும் அதற்கு பிறகும் நிறைய பாதைகள் இருப்பதை திறப்பதற்கான விழிப்புணர்வு நிகழ்ச்சியாகதான் இன்று நடைபெறும் கருத்தரங்கம் இருக்கிறது. 

இன்று திறக்கப்பட்டுள்ள புத்தக கண்காட்சியில் இடம்பெற்றுள்ள போட்டித்தேர்வு புத்தகங்கள் மற்றும் உயர்கல்விக்கான புத்தகங்களை நீங்கள் பார்வையிட வேண்டும். இதே புத்தகங்கள் வேலைவாய்ப்பு அலுவலகத்திலும் உள்ளன. அதுமட்டுமல்லாமல் போட்டித் தேர்வுகளுக்கு மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகத்தில் ஒவ்வொரு வாரமும் சிறப்பு பயிற்சி வகுப்புகள் நடைபெறுகின்றன. சென்னையில் இருந்து இணையதளம் மூலமாக வகுப்புகள் நடைபெறுகின்றன. உங்களுக்கு என்ன குறிக்கோள் இருக்கிறதோ அதனை நோக்கி பயணம் செய்ய வேண்டும்.

இப்பொழுது கல்லூரி முடித்து வெளியே செல்லும்போது உங்களுக்கு பல வாய்ப்புகள் இருக்கும். ஆனால் நீங்கள் பல இடையூறுகள் வந்தாலும் உங்களது இலட்சியத்தை நோக்கி செல்ல வேண்டும். இலட்சியத்தினை அடைய துணிச்சலான முடிவுகளை எடுக்க வேண்டும்.

நான் மருத்துவப்படிப்பு முடித்தவுடன் ஒரு அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் மருத்துவராக பணியாற்றினேன். ஆனால் எனது இலட்சியம் யு.பி.எஸ்.சி. என்பதால் நான் இந்திய ஆட்சிப்பணிக்கு வந்துள்ளேன். எனவே உங்களுக்கு பிடித்த துறையில் பயணம் செய்தால் வாழ்க்கையில் வெற்றியடையலாம். எல்லாம் தெரிந்தவர்கள் யாரும் கிடையாது. அனைவரும் தொடர்ந்து படித்துக்கொண்டுதான் இருக்கிறார்கள்.

முன்னாள் குடியரசு தலைவர் அப்துல் கலாம் 5ம் வகுப்பு படிக்கும் போது அவரது ஆசிரியர் சிவசுப்பிரமணிய ஐயர் இராமேஸ்வரம் கடற்கரைக்கு அழைத்து சென்று பறவைகளை காண்பித்துள்ளார். அப்பொழுது அப்துல் கலாம் மனிதனால் ஏன் பறக்க முடியவில்லை என்று கேட்டபோது அவரது ஆசிரியர் விமானத்தில் மனிதர்கள் பறக்கலாம் என்று தெரிவித்துள்ளார். எனவே அவர் விமானியாக வேண்டும் என்று முடிவெடுத்தார். ஆனால் அவருக்கு இந்திய அரசின் பாதுகாப்பு துறையில் விமானியாகும் வாய்ப்பு கிடைக்கவில்லை. எனினும் அவர் இந்திய பாதுகாப்பு ஆராச்சி மையத்தில் விஞ்ஞானியாக பணியில் சேர்ந்து பல ஏவுகணைகளை கண்டறிந்தார். 

பின்னர் குடியரசு தலைவரான பிறகு முப்படைகளின் தலைவர் என்ற அந்தஸ்தை அடைந்தார். அப்போது ராணுவ விமானத்தில் ஏறி பறந்து தனது வாழ்நாள் இலட்சியத்தை 70 வயதில் அடைந்தார். எனவே சாதனை செய்வதற்கு வயது தடையில்லை. இலட்சியத்தை நோக்கி தொடர்ந்து பயணம் செய்தால் வெற்றி பெற முடியும். நீங்களும் உங்களது இலட்சியத்தில் வெற்றி பெற வாழ்த்துக்கள்

இவ்வாறு என மாவட்ட ஆட்சியர் செந்தில்ராஜ்,  பேசினார்.

Digiqole Ad

Related post

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *