ஜெயலலிதாவின் மரணத்துக்கு காரணமானவர்கள் தண்டிக்கப்படவேண்டும்; டி.ஜெயக்குமார் பேட்டி
எம்ஜிஆர் நினைவிடத்தில் அ. தி. மு. க. வினர் தற்காலிக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி தலைமையில் அஞ்சலி செலுத்தினர்.
இந்த அஞ்சலி நிகழ்ச்சி யில் பங்கேற்ற அ. தி. மு. க. அமைப்பு செயலாளர் முன்னாள் அமைச்சர் டி.ஜெயக்குமார் செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டியின் போது கூறியதாவது :-
அரசியல் வானிலும், பொது வாழ்க்கையிலும் உலகத்தில் உச்சபட்சமாகத் துருவ நட்சத்திரத்தை தொட்டு இன்றைக்கு உலகளாவிய புகழ் பெற்றிருக்கின்ற,மறைந்தாலும் இன்றும் உலகம் முழுவதும் வாழ்கின்ற ,தமிழ் மக்களின் அத்தனை நெஞ்சங்களிலும் வாழ்ந்து கொண்டிருக்கின்ற,சத்துணவு தந்த சரித்திர நாயகன் என்று அவரைப்பற்றிப் புகழ் பாடிக்கொண்டே இருக்கலாம். அந்த அளவுக்கு ஒரு வரலாற்று சகாப்தமாக வாழ்ந்து மறைந்து 35 ஆண்டுகள் ஆகிவிட்டாலும் இன்றைக்கும் புரட்சித்தலைவரைப் பொறுத்தவரை,ஒவ்வொரு கிராமங்களிலும் வாழ்கின்றார். ஒவ்வொரு நகராட்சியிலும் வாழ்கின்றார். ஒவ்வொரு பேரூராட்சி,மாநகராட்சி பகுதியில் இருக்கின்ற அத்தனை மக்களின் நெஞ்சங்களில் வாழ்ந்துகொண்டிருக்கின்ற உன்னதமான மகத்தான தலைவர்,சகாப்தம் படைத்த தலைவர்.
தி.மு.க.வை,அந்த குடும்ப ஆதிக்கத்தை ஒழித்து 13 ஆண்டு காலம் வனவாசத்திற்கு அனுப்பி வைத்த அந்த வரலாற்றுக்குரிய பெருமைக்காரர். தன்னுடைய ஆட்சிக் காலத்திலே ஏழை,எளிய நடுத்தர மக்கள்,குடிசைவாழ் மக்கள் முதற்கொண்டு எல்லோருக்கும் எல்லாமே என்ற வகையிலே பல்வேறு திட்டங்கள் எல்லாம் கொண்டுவந்து தமிழகத்தை முன்னேற்றப் பாதைக்கு அழைத்துச் சென்ற ஒரு மகத்தான தலைவர் புரட்சித்தலைவர் எம்ஜிஆர். அவரின் 35 ஆம் ஆண்டு நினைவுநாளை முன்னிட்டு எடப்பாடியார் தலைமையிலே தலைமைக்கழக நிர்வாகிகள்,முன்னாள் அமைச்சர்கள்,நாடாளுமன்ற,சட்டமன்ற உறுப்பினர்கள்,முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர்கள்,முன்னாள் சட்டமன்ற உறுப்பினர்கள்,கழகத்தின் செயல் வீரர்,வீராங்கனைகள் என அனைவருமே ஒன்று திரண்டு இன்றைக்கு நினைவஞ்சலி செலுத்தியுள்ளோம்.
இவ்வாறு தெரிவித்தார்.
இதனைத் தொடர்ந்து செய்தியாளர்கள் கேட்ட கேள்வியும்,அதற்கு அவர் அளித்த பதிலும் வருமாறு.
கேள்வி : அதிமுகவை ஒருங்கிணைக்கும் பணியை முன்னெடுப்பதாக சசிகலா தெரிவித்துள்ளாரே.
பதில் : அவர்களுக்கும் அதிமுகவுக்கும் என்ன சம்பந்தம் இருக்கிறது. பல முறை தெரிவித்து விட்டேன். டிடிவி,சசிகலா,ஓபிஎஸ் ஆகியோரை ஒன்றிணைக்கும் பணியைச் செய்யலாமே தவிர,ஆடு நனைகிறதே என்று ஓநாய் அழக்கூடாது. எங்கள் கட்சியில் எந்த பிரச்சனையும் இல்லை.எடப்பாடியார் தலைமையில் கட்சி எழுச்சியோடு சென்று கொண்டிருக்கும் நிலையிலே அவர்களுடைய கருத்தை யாரும் ஏற்றுக்கொள்ள மாட்டார்கள். இதனை எள்ளி நகையாடும் செயலாகத்தான் பார்க்கிறோம்.இவர்கள் என்ன ஜ.நா.சபையா. இங்கு எந்த சண்டையும் இல்லை.சில பேர் சென்றார்கள்.வேஸ்டு லக்கேஜ் போலச் சென்றார்கள்
எந்த நிலைமையிலும் எங்கள் தலைமையில்தான் கூட்டணி இருக்கும் என்று எடப்பாடியார் தெளிவாகக் கூறிவிட்டார். எங்கள் கூட்டணியில் நாங்கள் ஒதுக்கும் இடம்தான். எங்களை யாரும் வற்புறுத்த முடியாது.கட்டாயப்படுத்த முடியாது.இதுபோலத்தான் கடந்த தேர்தலில் பேச்சுவார்த்தை நடத்தப்பட்டு அதன் அடிப்படையில் கூட்டணிக் கட்சிகளுக்கு நாங்கள் ஒதுக்கிய இடம்தான் என்பது ஊரரிந்த ஒன்று..2024 ல் எங்கள் தலைமையில்தான் கூட்டணி அமையும். அந்த கூட்டணியில் டிடிவி,சசிகலா.ஒபிஎஸ் ஆகியோரை எந்த நிலையிலும் சேர்த்து கொள்வதாக இல்லை. நாடாளுமன்றத் தேர்தல் தொடர்பான பூர்வாங்க பணிகளைத் தொடங்கிவிட்டோம். இந்த ஆட்சி மீது மக்களுக்குக் கடுமையாக அதிருப்தி உள்ளது. அம்மாவின் திட்டங்கள் குறித்து மக்களிடையே எடுத்துச் சொல்லிவருகிறோம். நாங்கள் ஆட்சியில் இருக்கும்போது பொங்கல் பரிசாக 5 ஆயிரம் தரவேண்டும் என்றார்கள். பாராளுமன்ற தேர்தல் வரும் காரணத்தினாலே ஆயிரம் என்று அறிவித்துள்ளார்கள். போனால் போகட்டும் என்று அறிவித்துள்ளார்கள்.உங்கள் வீட்டுப் பணத்தையா அளிக்கப் போகிறீர்கள். நாங்கள் நல்ல நிர்வாகத்தைச் செய்து அனைத்தையும் அளித்தோமா இல்லையா. 5 ஆயிரம் ரூபாய் கொடுங்கள். புரட்சித்தலைவர் ஒரு திட்டத்தைப் போட்டால் லாப நஷ்டத்தைப் பார்க்க மாட்டார். அந்த திட்டத்தின் மூலமாக எவ்வளவு மக்கள் பயன்பெறுகிறார்கள் என்றுதான் பார்ப்பார்.அதுதான் ஒரு தலைவனுக்குரிய பண்பு.கைத்தறி நெசவாளர்களின் வாழ்வு சிறக்கவேண்டும் என்றால் அந்த துணியை என்னுடைய தலையில் சுமர்ந்து தெரு,தெருவாகக் கூவி விற்பேன் என்றார்.அடிப்படையில் கைத்தறி நெசவாளர்களைக் காப்பாற்ற வேண்டும் என்பதுதான் அவரின் எண்ணம். அண்ணாவின் வழியில் ஆட்சிக்கு வந்தவுடன் கைத்தறி நெசவாளர்களின் வாழ்க்கை மேம்பட அனைவருக்கும் இலவச வேட்டி,சேலையை வழங்கினார்.நாங்கள் எங்கள் ஆட்சிக் காலத்தில் 2 கோடி பேருக்கு வழங்கினோம். கரும்பு விவசாயிகளின் வாழ்க்கைத் தரம் உயர அரசு கரும்பைக் கொள்முதல் செய்யவேண்டியதுதானே.நீங்கள் கொள்முதல் செய்வீர்கள் என்ற அடிப்படையில் அவர்கள் அதனை விளையவைத்துவிட்டார்கள். இப்போது அவர்கள் கரும்பை எங்கே கொண்டு போவார்கள்.விவசாயிகளுக்கு எவ்வளவு பெரிய துரோகத்தை திமுக செய்துள்ளது. கட்சியைப் பொறுத்தவரையில் கட்சி ஒரு அளவில்தான் செய்ய முடியும்.அரசுதான் அனைவருக்கும் வழங்க முடியும். ஏன் அரசு கரும்பைக் கொள்முதல் செய்யவில்லை என்பதுதான் எங்களுடைய கேள்வி.
கேள்வி : மருத்துவமனையிலிருந்த ஜெயலலிதா,வெளிநாடு செல்ல விரும்பவில்லை என்று சசிகலா தெரிவித்துள்ளாரே
பதில் : இது தொடர்பான ஓய்வு பெற்ற நீதிபதி தலைமையில் கமிஷன் அமைக்கப்பட்டது. அந்த கமிஷன் அறிக்கை அளித்துள்ளது.சசிகலா மற்றும் சிலர் மீது நடவடிக்கை எடுக்கவேண்டும் என்று தெரிவித்துள்ளது. நடவடிக்கை எடுக்கவேண்டும் என்பதுதான் அதிமுகவின் நிலை. ஆனால் வடிகட்டின பொய்யை அவர்கள் ( சசிகலா) தெரிவித்துவருகிறார். இந்த கருத்தை கமிஷனில் தெரிவித்திருக்கலாமே.25.11.2016 அந்த தேதியில் அம்மா,சசிகலா,அமெரிக்காவிலிருந்து வந்த மருத்துவர்,அப்போலா மருத்துவமனை மருத்துவர்.அதற்கு முன்னர் கார்டியோ ஆஞ்சியோ செய்யவேண்டும் என்று முடிவு செய்கிறார்கள்.அம்மாவும் இதற்கு ஒத்துக்கொள்கிறார். இந்த தகவல் கமிஷனில் உள்ளது.
அறுவை சிகிச்சை செய்யலாம் என்று அம்மாவே ஒத்துக்கொள்ளும்போது ஏன் அந்த சிகிச்சையைச் செய்யவில்லை.ஏன் வெளிநாடு கொண்டுபோகவில்லை. கமிஷனில் தெளிவாக உள்ளது.அம்மா அதற்கு ஒப்புதல் அளித்துவிட்டார்கள் என்று உள்ளது. உண்மையை மறைத்துப் பேசக்கூடாது.அன்றைக்கு நான்குபேர் இருந்தார்கள். அன்று மாலையிலேயே அறுவை சிகிச்சை செய்திருக்கவேண்டும். ஏன் செய்யவில்லை.அறுவை சிகிச்சை செய்திருந்தால் இன்றைக்கு 2021 ல் ஆட்சியைப் பிடித்திருப்பார். 21.11.க்கு பிறகு அம்மாவுக்கு மரணம் ஏற்பட்டது.அம்மாவின் மரணத்திற்குக் காரணமானவர்கள் தண்டிக்கப்படவேண்டும்.இதுதான் நாங்கள் எதிர்பார்க்கின்ற ஒரே நீதி. அம்மாவின் ஆத்மா சும்மா விடாது. அவர்களைத் தூங்கவிடாமல் நிச்சயமாகச் செய்யும்.
இவ்வாறு முன்னாள் அமைச்சர் டி.ஜெயக்குமார் தெரிவித்தார்.