இந்தியாவிற்குள் சுற்றிப்பார்க்க அனுமதி பெற வேண்டிய இடங்கள்

 இந்தியாவிற்குள் சுற்றிப்பார்க்க அனுமதி பெற வேண்டிய இடங்கள்

இந்தியாவிற்குள் சுற்றிப்பார்க்க அனுமதி பெற வேண்டிய இடங்கள் பற்றிய பட்டியல் இது. வெளிநாட்டிற்கு செல்ல வேண்டும் என்றால் ‘விசா’ வேண்டும். அவர் எந்த நாட்டைச் சேர்ந்தவர் என்பதை அங்கீகரிக்கும் ஆவணமாக பாஸ்போர்ட் வைத்திருக்க வேண்டும்.

உள் நாட்டிற்குள் உலவுவதற்கு இத்தகைய ஆவண கட்டுப்பாடுகள் எதுவும் தேவையில்லை. இருப்பினும் ஒருசில இடங்களுக்குள் நுழைவதற்கு உரிய அனுமதி பெற்றிருக்க வேண்டும். இந்தியாவிலும் அப்படிப்பட்ட இடங்கள் இருக்கத்தான் செய்கின்றன.

இந்தியர்களாகவே இருந்தாலும் ஐ.எல்.பி எனப்படும் ‘இன்னர் லைன் பெர்மிட்’ பெற்றிருக்க வேண்டும். இது பாதுகாக்கப்பட்ட அல்லது குறிப்பிட்ட பகுதிக்குள் பயணிப்பதற்கு இந்திய அரசாங்கத்தால் வழங்கப்படும் அதிகாரப்பூர்வ பயண ஆவணமாகும். அப்படிப்பட்ட அனுமதி பெற வேண்டிய இடங்கள் பற்றிய பட்டியல்

அருணாச்சல பிரதேசம் இட்டாநகர், ரோயிங், தவாங், போம்டிலா, பாசிகாட், பாலுக்போங், ஜிரோ மற்றும் அனினி ஆகியவை ‘இன்னர் லைன் பெர்மிட்’ கேட்கும் அருணாச்சல பிரதேச மாநில சுற்றுலாத் தலங்களாகும். இந்த இடங்கள் பூடான், மியான்மர், சீனா ஆகிய நாடுகளின் எல்லைகளுக்கு அருகில் அமைந்திருக்கின்றன. அதனால் பாதுகாப்பு விஷயத்தில் கடும் கட்டுப்பாடுகள் பின்பற்றப்படுகின்றன.

அருணாச்சல பிரதேசத்தில் வசிப்பவர்களைத் தவிர, மற்றவர்கள் எவரும் இங்கு எளிதில் நுழைந்துவிட முடியாது. அதற்கு அடையாள அட்டை, பாஸ்போர்ட் அளவு புகைப்படம் உள்ளிட்டவற்றை சம்பந்தப்பட்ட துறை அலுவலகத்திடம் கொடுத்து விண்ணப்பிக்க வேண்டும். இந்த ‘இன்னர் லைன் பெர்ட்மிட்’ 30 நாட் களுக்கு செல்லுபடியாகும். ஆன்லைன் வழியாகவும் விண்ணப்பித்து பெறலாம். அதற்கு 100 ரூபாய் கட்டணம் வசூலிக்கப்படும்.

லட்சத்தீவு 36 தீவுகளைக் கொண்ட யூனியன் பிரதேசமான லட்சத்தீவு, உலக அளவில் சுற்றுலாப் பயணிகளை கவரும் அம்சங்கள் அமையப் பெற்றது. இந்திய அரசின் கட்டுப்பாட்டில் இருந்தாலும், இங்கு இந்தியர்கள் செல்வதற்கு பாஸ்போர்ட் தேவை இல்லை என்றாலும், உரிய அனுமதி பெறுவது அவசியம். அதாவது லட்சத்தீவில் பூர்வீகமாக வசிப்பவர்களைத் தவிர, மற்ற இந்தியர்கள் உரிய அனுமதி பெற வேண்டும். அடையாள அட்டை, பாஸ்போர்ட் அளவு புகைப்படத்துடன் சம்பந்தப்பட்ட அதிகாரியிடம் விண்ணப்பிக்க வேண்டும். அதற்கு 50 ரூபாய் கட்டணமாக வசூலிக்கப்படும். வெளிநாட்டினராக இருந்தால், செல்லுபடியாகும் பாஸ்போர்ட், விசா வைத்திருக்க வேண்டும்

 சிக்கிமில் சோங்மோ ஏரி, நாதுலா, கோயிச்லா ட்ராக், குருடோங்மர் ஏரி மற்றும் யும்தாங் போன்ற இடங்களைப் பார்வையிட இன்னர் லைன் பெர்மிட் தேவை. இருப்பினும் அனுமதி வாங்குவதற்கு பணம் செலுத்தத் தேவையில்லை. மிசோரம் வங்கதேசம் மற்றும் மியான்மர் எல்லைகளுக்கு இடையே அமைந்துள்ள மிசோரமுக்கு சுற்றுலாப் பயணிகள் செல்ல அனுமதி பெற வேண்டும். தற்காலிக ‘இன்னர் லைன் பெர்மிட்’ 15 நாட்களுக்கு செல்லுபடியாகும். அடையாள அட்டையை காண்பித்து ரூ.120 கட்டணம் செலுத்தி அனுமதி அட்டையைப் பெறலாம். நிரந்தர இன்னர் லைன் பெர்மிட் வாங்குவதற்கு ரூ.220 ரூபாய் கட்டணம் வசூலிக்கப்படும். இது 6 மாதங்களுக்கு செல்லுபடியாகும்.

பசுமை மிளிரும் அழகிய பிரதேசங்களுள் ஒன்றாக விளங்கும் நாகலாந்துக்கு ஆண்டுதோறும் ஏராளமான சுற்றுலாப் பயணிகள் வந்து செல்கின்றனர். இருப்பினும் நாகலாந்தின் எல்லா பகுதிகளுக்கும் சென்று சுற்றிப்பார்த்துவிட முடியாது. கோஹிமா, வோகா, மொகோக்சுங், திமாபூர், கிபிர், மோன் போன்ற இடங்களுக்குச் செல்ல சிறப்பு அனுமதி பெற வேண்டும். ஏதேனும் ஒரு அடையாள அட்டை, பாஸ்போர்ட் அளவு புகைப்படம் மற்றும் 50 ரூபாய் சமர்ப்பிக்க வேண்டும். இந்த அனுமதிச் சீட்டு 5 நாட்களுக்கு மட்டுமே செல்லுபடியாகும். 30 நாட்களுக்கான அனுமதிச் சீட்டு பெற, 100 ரூபாய் கட்டணம் வசூலிக்கப்படும்.

காஷ்மீர் பகுதியில் அமைந்திருக்கும் லடாக்கிலும்  எல்லா இடங்களையும் சுற்றிப்பார்த்துவிட முடியாது. நுப்ரா பள்ளத்தாக்கு, கர்துங் லா பாஸ், த்சோ மோரி ஏரி, பாங்காங் த்சோ ஏரி, தா, ஹனு கிராமம், நியோமா, துர்டுக், திகர் லா, தங்கியார் போன்ற இடங்களுக்குச் செல்ல ‘இன்னர் லைன் பெர்மிட்’ வைத்திருக்க வேண்டும். இதற்கு விண்ணப்பக் கட்டணம் 30 ரூபாய். இந்த அனுமதி ஒரு நாளுக்கு மட்டுமே செல்லுபடியாகும்.

Digiqole Ad

Related post

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *