தூத்துக்குடி-மதுரை புதிய ரெயில் பாதைப்பணிகள் விரைவில் முடிந்து மார்ச் முதல் ரெயில்கள் இயக்க திட்டம்
![தூத்துக்குடி-மதுரை புதிய ரெயில் பாதைப்பணிகள் விரைவில் முடிந்து மார்ச் முதல் ரெயில்கள் இயக்க திட்டம்](https://tn96news.com/wp-content/uploads/2022/11/download-1-17.jpg)
நெல்லை, கன்னியாகுமரி, தூத்துக்குடி உள்ளிட்ட தென் மாவட்டங்களுக்கு மதுரையில் இருந்து ஒரே அகல ரெயில்பாதை மட்டுமே உள்ளது. இதனால் சென்னை, கோவை உள்ளிட்ட நகரங்கள் மற்றும் வட மாநிலங்களுக்கு செல்வதிலும், அங்கிருந்து தென் மாவட்டங்களுக்கு கூடுதல் ரெயில்கள் இயக்குவதிலும் பல்வேறு சிரமங்கள் உள்ளன.
இதுதொடர்பாக தென்மாவட்ட மக்களின் நீண்டநாள் கோரிக்கையை தொடர்ந்து மத்திய அரசு கடந்த 2012 – 13-ம் ஆண்டு இரட்டை வழித்தடத்திற்கு அனுமதி வழங்கியது. இதைத்தொடர்ந்து பொறியியல் குழுவினர் ஆய்வு நடத்திய பின்பு கடந்த 2015 –-16 பட்ஜெட்டில் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டு மதுரை- வாஞ்சி மணியாச்சி- தூத்துக்குடிக்கு 160 கிலோமீட்டருக்கும், வாஞ்சி மணியாச்சி- நெல்லை-நாகர்கோவில் வரையில் 102 கிலோமீட்டர் தூரத்திற்கும் என திட்டம் தீட்டி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டு பணிகள் நடைபெற்று வருகிறது.
இதில் மதுரையில் இருந்து தூத்துக்குடி-மீளவிட்டான் வரையிலும், நாகர்கோவில் வரையிலும் 2 பிரிவுகளாக பாதை அமைக்கப்பட்டு வருகிறது. தூத்துக்குடியில் இருந்து சென்னை உள்ளிட்ட நகரங்களுக்கு செல்பவர்கள் பயண நேரத்தை மிச்சப்படுத்த வேண்டும் என்ற நோக்கத்தில் தான் இந்த இரட்டை பாதை பணிகள் நடைபெற்று வருகிறது.
தூத்துக்குடி-மதுரை இடையே மொத்தம் உள்ள 159 கிலோ மீட்டரில் இதுவரை 134 கிலோ மீட்டர் தூரத்திற்கு அதாவது 84 சதவீதம் பணிகள் முடிவடைந்து விட்டன. மீதமுள்ள பணிகள் விரைவில் முடிக்கப்பட்டு வருகிற மார்ச் மாதத்தில் புதிய தடத்தில் ரெயில்கள் இயக்கப்படும் என்று ரெயில்வே அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
![Digiqole Ad](https://tn96news.com/wp-content/uploads/2023/01/add-1.jpg)