• May 9, 2024

பத்திரிகையாளர்கள் 41 பேருக்கு ஓய்வூதிய ஆணை; முதல்-அமைச்சர் வழங்கினார்

 பத்திரிகையாளர்கள் 41 பேருக்கு ஓய்வூதிய ஆணை; முதல்-அமைச்சர் வழங்கினார்

பத்திரிகையாளர்களின் பணியினை சிறப்பிக்கும் வகையில் தமிழ்நாட்டில் முதன்முறையாக உழைக்கும் பத்திரிகையாளர்களை முன்களப் பணியாளர்களாக தமிழ்நாடு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் அறிவித்தார். மேலும், 2021-22ஆம் ஆண்டிற்கான செய்தி மற்றும் விளம்பரத் துறை மானியக் கோரிக்கையில், உழைக்கும் பத்திரிகையாளர்களுக்கு வழங்கப்பட்டு வரும் அனைத்துத் திட்டங்களையும் ஒருங்கிணைத்துச் செயல்படுத்துவதோடு, நல வாரிய உதவித்தொகைகள், நலத்திட்ட உதவிகள் அளித்திடும் வகையில் பத்திரிகையாளர் நல வாரியம் அமைக்கப்படும் என்று அறிவிப்பு வெளியிடப்பட்டு, அதன்படி பத்திரிகையாளர் நல வாரியம் அமைக்கப்பட்டுள்ளது.
மேலும் பணிக்காலத்தில் இயற்கை எய்தும் பத்திரிகையாளர்களின் குடும்பங்களுக்கு முதலமைச்சரின் பொது நிவாரண நிதியிலிருந்து வழங்கப்படும் குடும்ப நிதிஉதவியை 3 லட்சம் ரூபாயிலிருந்து 5 லட்சம் ரூபாயாக உயர்த்தி தமிழ்நாடு அரசு வழங்கியது.

பத்திரிகையாளர் நல நிதியத்திற்கென தமிழ்நாடு மின்விசை நிதி மற்றும் அடிப்படை வசதி மேம்பாட்டு நிறுவனத்தில் ஒரு கோடி ரூபாய் நிரந்தர நிதியாக வைப்பீடு செய்யப்பட்டு இத்தொகையின் மூலம் கிடைக்கப்பெறும் வட்டித் தொகையிலிருந்து பத்திரிகையாளர்களுக்கு நிதியுதவி, கொரோனா நோய்த் தொற்று தடுப்பு நடவடிக்கையின்போது பணியாற்றிய பத்திரிகையாளர்களுக்கு சிறப்பு ஊக்கத் தொகையாக 5 ஆயிரம் ரூபாய் வீதம் 5782 பத்திரிகையாளர்களுக்கு மொத்தம் 2 கோடியே 89 இலட்சத்து 10 ஆயிரம் ரூபாய் சிறப்பு ஊக்கத்தொகை வழங்கியது.

கொரோனா நோய்த் தொற்றால் இயற்கை எய்திய பத்திரிகையாளர்களின் குடும்பத்திற்கு முதலமைச்சரின் பொது நிவாரண நிதியிலிருந்து வழங்கப்பட்டு வரும் இழப்பீட்டுத் தொகையை 5 லட்சம் ரூபாயிலிருந்து 10 லட்சம் ரூபாயாக உயர்த்தி, 20 பத்திரிகையாளர்களின் வாரிசுதாரர்களுக்கு, தலா 10 லட்சம் ரூபாய் வீதம், மொத்தம் 2 கோடி ரூபாய் இழப்பீட்டுத் தொகை வழங்கியது, பத்திரிகைத் துறையில் பணிபுரியும் செய்தியாளர்களுக்கு அரசு விருப்புரிமை ஒதுக்கீட்டில் சென்னை மற்றும் இதர மாவட்டங்களில் உள்ள தமிழ்நாடு வீட்டு வசதி வாரியக் குடியிருப்புகளில் குறைந்த வாடகையில் வீடுகள் ஒதுக்கீடு, பத்திரிகையாளர் நல நிதியத்திலிருந்து வழங்கப்படும்.

மருத்துவ உதவித் தொகையை 2 லட்சம் ரூபாயிலிருந்து 2 இலட்சத்து 50 ஆயிரம் ரூபாயாக உயர்த்தியது, பத்திரிகையாளர் அங்கீகார அட்டை பெற்றுள்ள அனைத்துப் பத்திரிகையாளர்களுக்கும் கட்டணமில்லாப் பேருந்து பயண அட்டைகள் போன்ற பல்வேறு திட்டங்களை பத்திரிகையாளர்களின் நல்வாழ்விற்காக செயல்படுத்தி வருகிறது.

அனைத்துத் தரப்புச் செய்திகளையும் பொதுமக்கள் பார்வைக்கு கொண்டு செல்லும் வகையில் 24 மணி நேரமும் அயராது பணியாற்றி வரும் பத்திரிகையாளர்கள் ஓய்வுபெற்ற பின்னர், எத்தகு இயலாமைக்கும் ஆளாகாமல் இருக்க, அரசு சார்பில் மாதந்தோறும் ரூ.10ஆயிரம் ஓய்வூதியம் வழங்கப்பட்டு வருகிறது.
2022-23ஆம் ஆண்டிற்கான செய்தி மற்றும் விளம்பரத் துறை மானியக் கோரிக்கையில், பத்திரிகையாளர் ஓய்வூதியத் திட்டத்தில் நிர்ணயிக்கப்பட்ட பணிக்கொடை மற்றும் பணிக்கால ஆண்டு வருமான உச்சவரம்பு 3 லட்சம் ரூபாயிலிருந்து 4 லட்சம் ரூபாயாக உயர்த்தப்படும் என்று அறிவிக்கப்பட்டு, அதற்கான அரசாணையும் வெளியிடப்பட்டுள்ளது.

அதன்படி, நாளிதழ்கள், பருவ இதழ்கள் மற்றும் செய்தி முகமைகள் ஆகியவற்றில் பணியாற்றி ஓய்வு பெற்ற 41 பத்திரிகையாளர்களுக்கு மாதந்தோறும் ரூ.10ஆயிரம் ஓய்வூதியம் வழங்குவதற்கான ஆணைகளை வழங்கிடும் அடையாளமாக தமிழ்நாடு முதலமைச்சர் 7 ஓய்வு பெற்ற பத்திரிகையாளர்களுக்கு ஆணைகளை வழங்கினார்.

இந்த நிகழ்ச்சியில் செய்தித் துறை அமைச்சர் மு.பெ. சாமிநாதன், தலைமைச் செயலாளர் வெ. இறையன்பு, தமிழ் வளர்ச்சி மற்றும் செய்தித்துறை செயலாளர் (முழு கூடுதல் பொறுப்பு) ம.சு. சண்முகம், செய்தி மக்கள் தொடர்புத் துறை இயக்குநர் வீ.ப. ஜெயசீலன், ஆகியோர் கலந்து கொண்டனர்.

Digiqole Ad

Related post

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *