• May 20, 2024

பசுமை தமிழ்நாடு திட்டத்தை விளாத்திகுளம் தொகுதி தான் முதலில் நிறைவேற்றும்-மார்க்கண்டேயன் எம்.எல்.ஏ.உறுதி

 பசுமை தமிழ்நாடு திட்டத்தை விளாத்திகுளம் தொகுதி தான் முதலில் நிறைவேற்றும்-மார்க்கண்டேயன் எம்.எல்.ஏ.உறுதி

தமிழக அரசின் பசுமை தமிழ்நாடு திட்டத்தின் மூலம் அடுத்த 10 ஆண்டுகளில் 265 கோடி உள்நாட்டு வகை மரக்கன்றுகள் நடப்பட உள்ளன. அதன் ஒருபகுதியாக விளாத்திகுளம் சட்டப்பேரவை தொகுதிக்கு உட்பட்ட பகுதிகளில் ஒரு கோடி மரங்கள் நடவு செய்ய திட்டமிடப்பட்டிருக்கிறது.
விளாத்திகுளம், புதூர், எட்டயபுரம் பேரூராட்சி பகுதிகளிலும், 29 கிராம ஊராட்சி பகுதிகளிலும் தொடங்கப்பட உள்ளன. விளாத்திகுளத்தில் பேரூராட்சி நிர்வாகம் மற்றும் மரங்கள் மக்கள் இயக்கம் சார்பில் பொதுப்பணித்துறைக்கு சொந்தமான பெரிய கண்மாய் கரையோரம் 700 மரக்கன்றுகள் நடும் நிகழ்ச்சி நேற்று நடந்தது.
தூத்துக்குடி மாவட்ட வன அலுவலர் அபிஷேக் தோமர் தலைமை தாங்கினார். விளாத்திகுளம் சட்டப்பேரவை உறுப்பினர் ஜீ.வி.மார்க்கண்டேயன் மரக்கன்றுகள் நடும் பணியை தொடங்கி வைத்தார். அப்போது அவர் பேசியதாவது:-
“விளாத்திகுளம் சட்டப்பேரவை தொகுதியில் முதல்வர் மு.க.ஸ்டாலின் உத்தரவின்படி மரங்கள் மக்கள் இயக்கம் உருவாக்கி உள்ளோம். தூத்துக்குடி மாவட்டத்தை பொறுத்தவரை 3.80 சதவீதம் தான் வனப்பரப்பு உள்ளது. இந்த வனப்பரப்பை 33 சதவீதமாக உயர்த்துவதுதான் எங்களது இலக்கு. இதில் விளாத்திகுளம் தொகுதி முழுவதும் ஒருகோடி மரங்கள் நடவு செய்யப்பட உள்ளது.
இதன் ஒருபகுதியாக வைப்பாற்றில் 55 கி.மீ., தூரம் சீமைக் கருவேல மரங்களை அகற்றும் பணி 90 சதவீதம் முடிந்துள்ளது.
ஒரு கோடி மரங்கள் நடும் திட்டத்தை அக்டோபர் 18ஆம் தேதி சமூக நலன் மற்றும் மகளிர் உரிமைத்துறை அமைச்சர் கீதா ஜீவன் தலைமையில், நாடாளுமன்ற உறுப்பினர் கனிமொழி தொடங்கி வைக்க உள்ளார். அன்றைய தினம் வைப்பாற்று கரையில் 25 லட்சம் பனை விதைகள் நடும் பணி நடைபெறும். தமிழக முதல்வரின் கனவு திட்டமான பசுமை தமிழ்நாடு திட்டத்தை விளாத்திகுளம் தொகுதி தான் முதலில் நிறைவேற்றும் என்ற எண்ணம் எங்களுக்கு உள்ளது.
இவ்வாறு அவர் பேசினார்.

Digiqole Ad

Related post

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *