• May 20, 2024

கோவில்பட்டி புறவழிச்சாலை திட்டத்துக்கு அனுமதி கோரி அமைச்சருக்கு வைகோ கடிதம்

 கோவில்பட்டி புறவழிச்சாலை திட்டத்துக்கு அனுமதி கோரி  அமைச்சருக்கு வைகோ கடிதம்

கோவில்பட்டியில் 17 கி.மீ. புதிய புறவழிச்சாலை திட்டத்துக்கு அனுமதி அளிக்ககோரி பொதுப்பணி மற்றும் நெடுஞ்சாலை துறை அமைச்சர் எ.வ.வேலுவுக்கு ம.தி.மு.க/பொதுச்செயலாளர் வைகோ கடிதம் அனுப்பி இருக்கிறார். அந்த கடிதத்தில் கூறி இருப்பதாவது:-

கோவில்பட்டி, வளர்ந்து வரும் தொழில் நகரமாகும். விருதுநகர், தென்காசி, திருநெல்வேலி ஆகிய 3 மாவட்ட பகுதிகளையும் சாலை போக்குவரத்தில் இணைக்கும் முக்கிய சந்திப்பாகவும் இந்த நகரம் விளங்குகிறது.
ஓட்டப்பிடாரம், விலாத்திகுளம், சாத்தூர், சங்கரன்கோவில் சட்டமன்ற தொகுதிகளுக்கு உட்பட்ட பகுதிகளை சேர்ந்த பல்லாயிரக்கணக்கான மக்கள் அன்றாடம் வந்து செல்லும் நகரமாகவும் கோவில்பட்டி விளங்குகிறது.
மேலும் தீப்பெட்டி உள்ளிட்ட பல்வேறு தொழில்கள் பெருமளவில் நடக்கும் நகரம் என்பதால் சுமை ஏற்றும் பெரிய வாகனங்களும் அன்றாடம் வந்து செல்கின்றன.
ராஜபாளையம்-விருதுநகர் பகுதிகளில் இருந்து தூத்துக்குடி துறைமுகத்திற்கு ஏற்றுமதி-ரக்குமதிக்காக செல்கின்ற நூற்றுக்கணக்கான கனரக வாகனங்களும் கோவில்பட்டி நகரின் வழியாகத்தான் அன்றாடம் சென்று வருகின்றன. இதன் காரணமாக அதிக போக்குவரத்து நெரிசல் ஏற்படுகிறது தவிர்க்க இயலாததாகிறது.
இதனை கருத்தில் கொண்டு வளர்ந்து வரும் கோவில்பட்டி நகரின் போக்குவரத்து நெரிசலை சீரமைத்து ஒழுங்குபடுத்திட கோவில்பட்டி எஸ்.எஸ்.டி.எம்.கல்லூரி அருகில் மாநில சாலை (SHU)எண் 26 இல் இருந்து பிரிந்து இலுப்பையூரணி, லிங்கம்பட்டி, சிதம்பராபுரம், திட்டங்குளம்,பாண்டவர்மங்கலம், மந்திதோப்பு வழியாக நாலாட்டின்புதூரில் தேசிய நெடுஞ்சாலையில் (NH7) இணையும் வகையில் சுமார் 17 கி.மீ. தூரம் கொண்ட புதிய புறவழி சாலையை அமைத்திடும் திட்டம் ஒன்று ஆய்வில் உள்ளது. கள ஆய்வுகளும் மேற்கொள்ளப்பட்டு புறவழிச்சாலை அமைப்பதற்கான சாத்தியமான அம்சங்கள் இருப்பதாகவும் கண்டறியப்பட்டுள்ளது.
எனவே வளர்ந்து வரும் கோவிலப்ட்டி நகரம் மற்றும் நகரை சுற்றியும் விரிவடைந்து வரும் தொழில் வளர்ச்சியை கருத்தில் கொண்டு மேற்குறிப்பிட்ட 17 கி.மீ. தூரம் கொண்ட கோவில்பட்டி புறவழிச்சாலை அமைத்திட தக்க அனுமதி வழங்குமாறு அன்புடன் கேட்டுகொள்கிறேன்,
இவ்வாறு அந்த கடிதத்தில் வைகோ கூறி இருக்கிறார்.

Digiqole Ad

Related post

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *