• February 9, 2025

தி.மு.க. துணை பொதுச்செயலாளர் பதவியை சுப்புலட்சுமி ஜெகதீசன் ராஜினாமா செய்ததாக பரவும் தகவல்

 தி.மு.க. துணை பொதுச்செயலாளர் பதவியை சுப்புலட்சுமி ஜெகதீசன் ராஜினாமா செய்ததாக பரவும் தகவல்

மத்திய மந்திரி சுப்புலட்சுமி ஜெகதீசன் தி.மு.க. துணை பொதுச்செயலாளராக பதவி வகித்து வருகிறார். ஈரோடு மாவட்டம் மொடக்குறிச்சி பகுதியில் குடும்பத்துடன் சுப்புலட்சுமி ஜெகதீசன் வசித்து வருகிறார். கடந்த சட்டமன்ற தேர்தலில் சுப்புலட்சுமி ஜெகதீசன் மொடக்குறிச்சி தொகுதியில் போட்டியிட்டார். அப்போது இவரை எதிர்த்து பா.ஜ.கவை சேர்ந்த சரஸ்வதி போட்டியிட்டார். இதில் 206 ஓட்டு வித்தியாசத்தில் சுப்புலட்சுமி ஜெகதீசன் தோல்வி அடைந்தார்.
சுப்புலட்சுமி ஜெகதீசன் தனது தோல்விக்கு ஈரோடு மாவட்டத்தை சேர்ந்த கட்சி பிரமுகர் ஒருவர் மற்றும் மொடக்குறிச்சி தொகுதிக்குட்பட்ட 2 ஒன்றிய செயலாளர்கள் தான் காரணம் என்றும் அவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் கட்சி தலைமையிடம் புகார் செய்தார். ஆனால் அவர்கள் மீது எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. இந்நிலையில் சமீபத்தில் நடந்த உள்கட்சி தேர்தலில் சுப்புலட்சுமி ஜெகதீசன் புகார் செய்த 2 ஒன்றிய செயலாளர்களுக்கு மீண்டும் பதவி வழங்கப்பட்டதாக கூறப்படுகிறது
மேலும் அவரது ஆதரவாளர்களுக்கும் பதவி வழங்கப்படவில்லை. மேலும் தனக்கு ராஜ்யசபா எம்.பி. பதவி கிடைக்கும் என்றும் எதிர்பார்த்தார். ஆனால் அதுவும் கிடைக்கவில்லை. இதனால் சுப்புலட்சுமி ஜெகதீசன் கட்சி நிகழ்ச்சிகளை புறக்கணித்து வந்தார். கடந்த மாதம் ஈரோடு மாவட்டம் கள்ளிப்பட்டியில் நடந்த கருணாநிதி சிலை திறப்பு விழா மற்றும் பெருந்துறையில் நடைபெற்ற அரசு நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழாவில் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலினுடன் சுப்புலட்சுமி ஜெகதீசனும் கலந்து கொண்டார்.
இந்நிலையில் சுப்புலட்சுமி ஜெகதீசனின் கணவர் ஜெகதீசன் கட்சி தலைமைக்கு எதிராக அடிக்கடி சமூக வலைதளங்களில் பதிவு செய்தார். இதற்கு சுப்புலட்சுமி ஜெகதீசன் எந்த எதிர்ப்பும் தெரிவிக்கவில்லை. கடந்த 15-ந்தேதி விருதுநகரில் நடைபெற்ற தி.மு.க முப்பெரும் விழாவில் பங்கேற்காமல் துணை பொதுச்செயலாளர் சுப்புலட்சுமி ஜெகதீசன் மற்றும் அவரது கணவர் ஜெகதீசன் ஆகியோர் புறக்கணித்தனர்.
இதற்கிடையே சமூக வலைதளங்களில் தி.மு.க. துணை பொதுச்செயலாளர் பதவியை சுப்புலட்சுமி ஜெகதீசன் ராஜினாமா செய்ததாக தகவல் பரவியது. கட்சி மேலிடத்தின் மீது அதிருப்தியில் இருந்ததாகவும் இதனால் அவர் ராஜினாமா செய்ததாகவும் அதில் தெரிவிக்கப்பட்டிருந்தது. ஆனால் இதுகுறித்து அவரது தரப்பில் இருந்து எந்த விளக்கமும் அளிக்கப்படவில்லை. இதனால் ஈரோடு மாவட்ட தி.மு.க.வில் பரபரப்பு ஏற்பட்டு உள்ளது.
சுப்புலட்சுமி ஜெகதீசனின் கட்சி பதவி ராஜினாமா ஏற்கப்பட்டால், புதிய துணைப் பொதுச்செயலாளராக அமைச்சர் கீதாஜீவன் நியமிக்கப்பட வாய்ப்புள்ளதாக ஒரு தகவல் பரவி வருகிறது. முன்னாள் அமைச்சர்கள் தமிழரசி, டாக்டர் பூங்கோதை உள்ளிட்டோரும் இந்தப் போட்டியில் உள்ளனர்.பெண்களுக்கான இட ஒதுக்கீட்டில் கீதாஜீவன் துணைப் பொதுச்செயலாளராக ஆக்கப்பட்டால் அவரது பொறுப்பிலுள்ள தூத்துக்குடி தெற்கு மாவட்டம் இரண்டாகப் பிரிக்கப்பட்டு இரண்டு புதிய மாவட்ட செயலாளர்கள் நியமிக்க வாய்ப்புள்ளதாக கூறப்படுகிறது.
ஒரு மாவட்டத்திற்கு இரண்டு தொகுதி என்ற அடிப்படையில் தூத்துக்குடி தெற்கு, வடக்கு, மத்திய மாவட்டங்கள் என தி.மு.க.வில் அறிவிக்கப்பட உள்ளதாக அந்த தகவல்கள் தெரிவிக்கின்றன.
எம்.ஜி.ஆர். மூலம் 1977 இல் அரசியலுக்கு அடையாளம் காட்டப்பட்டவர் சுப்புலட்சுமி ஜெகதீசன். கொடுமுடியில் பள்ளி ஆசிரியராக பணியாற்றிய சுப்புலட்சுமி ஜெகதீசன், எம்.ஜி.ஆர். மூலம் அரசியலில் அறிமுகம் செய்யப்பட்டு 1977 இல் மொடக்குறிச்சி தொகுதியில் போட்டியிட்டு வெற்றிபெற்றார். எம்.ஜி.ஆர். அமைச்சரவையில் 1978 முதல் 1980 வரை கைத்தறித்துறை அமைச்சராக இருந்தார். 1980 இல் தி.மு.க.வில் இணைந்து செயல்பட்டு வந்தார்.

1989 தேர்தலில் ஈரோடு தொகுதியில் போட்டியிட்டு வெற்றிபெற்று கருணாநிதி அமைச்சரவையில் 1991 வரை சமூக நலத்துறை அமைச்சராக இருந்தார். 1996 இல் மொடக்குறிச்சி தொகுதியில் போட்டியிட்டு வெற்றிபெற்றார். 2004 மக்களவைத் தேர்தலில் திருச்செங்கோடு மக்களவைத் தொகுதியில் போட்டியிட்டு வெற்றிபெற்று மன்மோகன்சிங் அமைச்சரவையில் இணை மந்திரியாக இருந்தார்.

Digiqole Ad

Related post

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *