திருச்செந்தூரில் ஆவணி திருவிழா தேரோட்டம்; பக்தர்கள் குவிந்தனர்
முருக பெருமானின் அறுபடை வீடுகளில் இரண்டாம் படை வீடான திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவிலில் ஆவணி திருவிழா கடந்த 17ம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. விழா நாட்களில் சுவாமி, அம்பாள் வெவ்வேறு வாகனங்களில் வீதிஉலா வந்து பக்தர்கள் காட்சி அளித்தனர்.
திருவிழாவின் சிகர நிகழ்ச்சியான தேரோட்டம் இன்று காலை நடைபெற்றது. காலை 6.15 மணிக்கு விநாயகர் எழுந்தருளிய தேர் வெளி வீதி நான்கிலும் பவனி வந்தது.
6.45 மணிக்கு சுவாமி குமரவிடங்க பெருமான், வள்ளி-தெய்வானையுடன் எழுந்தருளிய தேர் வெளி வீதி நான்கிலும் பவனி நடைபெற்றது.
தொடர்ந்து காலை 7.50 மணிக்கு வள்ளியம்பாள் எழுந்தருளிய தேர் வெளி வீதி நான்கிலும் பவனி வந்து நிலையை வந்தடைந்தது.
நிகழ்ச்சியில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் கலந்துகொண்டு அரோகரா கோஷத்துடன் வடம் பிடித்து தேர் இழுத்தனர்.
விழா ஏற்பாடுகளை கோவில் தக்கார் இரா.கண்ணன் ஆதித்தன், இணை ஆணையர் (கூடுதல் பொறுப்பு) அன்புமணி மற்றும் கோவில் பணியாளர்கள் செய்து இருந்தனர்.