சசிகலா, தினகரனை அ.தி.மு.க.வும், தொண்டர்களும் ஏற்றுக்கொள்வதாக இல்லை; டி.ஜெயக்குமார் பேட்டி
சென்னை கோயம்பேடு மார்கெட்டில் வியாபாரிகளின் சார்பில் நடைபெற்ற சுதந்திர விழாவில் முன்னாள் அமைச்சர் டி.ஜெயக்குமார் கலந்துகொண்டு தேசியக்கொடியை ஏற்றினார். இதனைத் தொடர்ந்து செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டி
யின் செய்தியாளர்கள் கேட்ட கேள்விகளும் அதற்கு அவர் அளித்த பதில்களும் வருமாறு:-
கேள்வி:- டிடிவி தினகரன் அ.தி.மு.க.வில் குறித்து பொதுக்குழுவில் எதுவும் பேசவில்லை என்றும் ஒருங்கிணைந்து போவதற்கு வாய்ப்பு உள்ளதாக தெரிவித்துள்ளாரே.
பதில்;- புரட்சித்தலைவரின் சின்னம் இரட்டை இலை. இதற்கு ஒரு மகத்தான வெற்றியைத் தேடித் தந்தவர் புரட்சித்தலைவி அம்மா. அந்த இரட்டை இலையை எதிர்த்து நின்று, அம்மாவின் அரசைக் கவிழ்க்க நினைத்தவர்கள் அவர்கள் இன்றைக்குப் பாசாங்கு செய்வதுபோல பசுதோல் போற்றிய நரிபோல நாங்கள் அ.தி.மு.க. குறித்து எதுவும் பேசவில்லை. ஒருங்கிணைந்துபோகலாம் என்று அவர்கள் நினைக்கலாம். ஆனால் எங்கள் கட்சியும் சரி,தொண்டர்களும் சரி டிடிவி தினகரன்,சசிகலாவை ஏற்றுக்கொள்வதாக இல்லை.
கேள்வி:- சீமான் சாதிவாரி இட ஒதுக்கீடு குறித்துப் பேசியுள்ளாரே
பதில்:- சாதிவாரி கணக்கெடுப்பை அவர் மட்டுமல்ல எல்லோரும் கேட்டுவருகிறார்கள். இது குறித்து முடிவு செய்யவேண்டியது மத்திய அரசுதான்.
கேள்வி:- நீங்கள் தொகுதி ஒதுக்கீடு செய்யும்போது சாதி ஒதுக்கீடு அடிப்படையில் செய்கிறீர்களா என்று சீமான் கேள்வி எழுப்பியுள்ளாரே
பதில் :- அ.தி.மு.க.வைப் பொறுத்தவரையில் விருப்பு,வெறுப்பு இல்லாமல் ஜாதிக்கு அப்பாற்பட்ட கட்சி. மதத்திற்கு அப்பாற்பட்ட கட்சி. இங்கு எல்லோருக்கும் எல்லா முக்கியத்துவம் அளிக்கவேண்டும் என்ற அடிப்படையில்தான் புரட்சித்தலைவர் காலத்திலும் சரி,புரட்சித்தலைவி அம்மா காலத்திலும் சரி,அம்மாவின் மறைவுக்கு பிறகும் கட்சியிலும்,ஆட்சியிலும் பிரநிதித்துவம் அளிக்கப்பட்டது. இது அவருக்கே தெரியும்.
கேள்வி:- அமைச்சர் பி.டி.ஆர். கார் மீது செருப்பு வீசப்பட்ட சம்பவம் குறித்து
..
பதில்:- இரண்டு பேர் மீதும் தவறு இருக்கின்றது. அமைச்சர் உங்களுக்குத் தகுதி இருக்கின்றதா என்று கேட்டதும் தவறு. அவர்கள் செருப்பு வீசியதும் தவறு. எனவே இதில் இரண்டு தரப்பினரும் தவறு செய்துள்ளார்கள்.
கேள்வி:- செஸ் போட்டியை இந்த அரசு சிறப்பாகச் செய்துள்ளதாகக் கூறப்படுகிறதே
பதில் :- செஸ் தொடர்பாக ஏதாவது ஆக்கப்பூர்வமாக ஏதாவது செய்தார்களா. எதுவும் இல்லையே. அவர்கள் குடும்பத்தினர் அமர்ந்து பார்பதற்கும்,அவர் கோட் சூட்டில் வருவதற்கும் ஒரு போட்டோ சூட் நடத்தி பல கோடி செலவில் அவர்கள் குடும்பத்தை விளம்பரப் படுத்திகொள்ளும் விஷயமாகத்தான் பார்த்தார்களே தவிர வேறு என்ன செய்தார்கள். செஸ் போட்டி நினைவாக என்ன செய்தார்கள், எதுவும் செய்யவில்லையே.
கேள்வி :- பிரதமர் பாராட்டியுள்ளாரே
பதில் :- யார் வேண்டுமானாலும் பாராட்டு தெரிவிக்கட்டும். நாங்கள் உள்ளதை மட்டும்தான் சொல்ல முடியும். நீங்கள் பாராட்டினால் நான் பாராட்ட வேண்டும் என்ற அவசியம் உள்ளதா. அப்படி எல்லாம் ஒன்றும் கிடையாது. எங்களுக்கு என்று ஒரு நியதி உள்ளது. நல்லது செய்தால் பாராட்டுவோம். மகாபலிபுரத்தில் 10 நாட்களுக்கு ரூ.30 கோடி பில் போட்டுள்ளார்கள்.,இந்த பணத்தை வைத்து ஒரு ஒட்டலைக் கட்டிவிடலாம். இதனை விசாரித்தால்தான் தெரியும்.ஊழலாகக்கூட இருக்கலாம்.கமிஷன் கூட இருக்கலாம்.கலெக்ஷனுக்கு கூட இருக்கலாம்.கரப்ஷனுக்கு கூட இருக்கலாம்.
கேள்வி :- செஸ் போட்டியை அ.தி.மு.க. வரவேற்கிறதா
பதில் :- ஒரு போட்டி நமது மாநிலத்திற்கு வருவது நல்ல விஷயம்தான். இதில் எந்த மாறுபட்ட கருத்தும் எங்கள் கட்சிக்கு கிடையாது. இந்த போட்டியை வைத்து சென்னையில் பல நல்ல முன்னேற்றங்களை கொண்டுவந்திருக்கலாம். இதனைக் கொண்டுவரவில்லை என்றுதான் நான் தெரிவிக்கிறேன். ஒரு பேனாவை கடலில் வைக்க 80 கோடி செலவு செய்கிறீர்கள்.இதுபோல செஸ் போட்டி தொடர்பாக ஒரு ஆடிட்டோரியம் கட்டியிருக்கலாமே. பெரிய நீச்சல் குளத்தைக் கட்டியிருந்தால் நன்றாக இருந்திருக்குமே. விளையாட்டிற்கு முக்கியத்துவம் அளிக்கும் வகையில் ஆயிரம் கோடியை செலவு செய்திருக்கலாமே. பேனா வைக்க 80 கோடிக்கு மட்டும் குறியாக உள்ளீர்கள். சென்னையில் உள்ள மீனவர்களின் அடையாளத்தை அழித்து இதனைச் செயல்படுத்தலாம் என்று நினைக்கிறீர்கள். மீனவர்கள் இதற்கு எதிர்ப்பு தெரிவிக்க தொடங்கிவிட்டார்கள். ஒரு விழாவை நடத்தி தன்னை முன்னிலைப்படுத்துவதை விட இதனால் சென்னை மேம்பாடு அடைவதுதான் முக்கியம்
இவ்வாறு டி.ஜெயக்குமார் பதில் அளித்தார்.