அ.தி.மு.க.வின் முதல் எம்.பி. மாயத்தேவர் மரணம்
எம்.ஜி.ஆர்., அ.தி.மு.க.வை தொடங்கியபிறகு 1973-ஆம் ஆண்டில் திண்டுக்கல் பாராளுமன்ற தொகுதி இடைத்தேர்தல் நடைபெற்றது.
இந்த தேர்தலில் அ.தி.மு.க.முதன் முதலாக களம் கண்டது, இந்த தொகுதி வேட்பாளராக மாயத்தேவர் போட்டியிட்டார். இரட்டை இலை சின்னத்தில் போட்டியிட்டு வெற்றி பெற்றார். வக்கீலான இவர் தான் அ.தி.மு.க.வின் சின்னமான இரட்டை இலையை தேர்வு செய்தவர்.
தேர்தல் வெற்றி மூலம் அ.தி.மு.க.வின் முதல் எம்,.பி. என்ற பெருமையை மாயத்தேவர் பெற்றார். மதுரை மாவட்டம் உசிலம்பட்டி அருகே டி.உச்சப்பட்டி கிராமத்தில் பிறந்த மாயத்தேவர் பள்ளி கல்வியை பாளையங்கோட்டை தூய சவேரியார் மேல்நிலை பள்ளியிலும், இளநிலை மற்றும் முதுநிலை பட்டப்படிப்புகளை சென்னை பச்சையப்பன் கல்லூரியிலும். சட்டக்கல்வியை சென்னை சட்டகல்லூரியிலும் படித்தவர். சென்னை உயர்நீதி மன்றத்தில் வக்கீலாக பணியாற்றியவர்.
1973 இல் அதிமுக சார்பில் திண்டுக்கல் தொகுதியில் போட்டியிட்டு வெற்றி பெற்ற ,மாயத்தேவர் பின்னர் 1977 இல் அதே தொகுதியில் தி.மு.க. சார்பில் போட்டியிட்டு வெற்றி பெற்றார்.
வயது முதிர்ச்சி காரணமாக உடல்நலம் குன்றி இருந்த அவர் இன்று மதியம் திண்டுக்கல் மாவட்டம் சின்னாளபட்டியில் மரணம் அடைந்தார். அவருக்கு வயது 88. மாயத்தேவர் மறைவுக்கு அரசியல் தலைவர்கள் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.