கோவில்பட்டி புதுரோட்டில் ஆமை வேகத்தில் நடக்கும் சாக்கடை சீரமைப்பு பணி; மக்கள் கடும் அவதி
கோவில்பட்டி நகரின் மிக முக்கிய பகுதியாக புது ரோடு விளங்குகிறது. இந்த ரோட்டின் இருபுறமும் கடைகள் மற்றும் வர்த்தக நிறுவனங்கள் உள்ளன. எப்போதும் ஆள் நடமாட்டம் உள்ள பகுதியில் கனரக வாகன போக்குவரத்தும் அதிகம் இருக்கும். அதே போல் ஆக்கிரமிப்பும் அதிகமாக உண்டு.
தூத்துக்குடி துறைமுகம் செல்லும் கனரக வாகனங்கள் செல்வதற்கு இதுதான் வழி. ஆனால் குண்டும் குழியுமான சாலையில் வாகன ஓட்டிகள் படும் அவஸ்தை சொல்லி மாளாது. இந்த நிலையில் சாலையின் நடுவே 2 ஆண்டுகளுக்கு முன்பு `டிவைடர்’ போட்டு விட்டார்கள்.
மழை பெய்தால் புதுரோடு இறக்கத்தில் எப்போதும் தண்ணீர் தேங்கி விடும். இந்த ரோட்டில் சாக்கடை வசதி ஒரு புறத்தில் பாதிதான் இருந்தது. இதனால் மறுபுறம் திருப்பிவிடப்படும் சாக்கடை நிரம்பி ரோட்டுக்கு வந்துவிடும். மழை நீருடன் சேர்ந்து தேங்கி நிற்கும்.
நீண்ட காலமாக இருந்த இந்த குறையை போக்க நகராட்சி நிர்வாகம் சாக்கடை சீரமைப்பு பணியை 5 மாதத்துக்கு முன்பு தொடங்கியது. புதுரோட்டில் மேட்டில் இருந்து இடதுபுறம் இறக்கம் வரை முழுவதுமாக சாக்கடை உண்டு. வலது புறம் ஆழ்வார் தெருவுக்கு முன்பாக சாக்கடை முடிந்துவிடும். அங்கிருந்து சாலைக்கு நடுவே குழாய் மூலம் இடது புற சாக்கடைக்கு திருப்பிவிடப்படும்.
இந்த நடைமுறையை மாற்றி ஆழ்வார் தெருவில் இருந்து புதுரோடு இறக்கம் வரை சாக்கடை புதிதாக அமைக்கும்பணி தொடங்கி ஆமை வேகத்தில் நடைபெற்று வருகிறது. ஒரு வழியாக தற்போது முடியும் தருவாயில் இருக்கிறது.
இந்த பகுதியில் சாக்கடையை சாலைக்கு திருப்பி விட்டு இருக்கிறார்கள்.
இந்த நிலையில் புதுரோடு இடது புறம் யூனியன் வங்கி எதிர்புறத்தில் சாக்கடை தூர் வாரி சீரமைப்பு பணி தொடங்கி 2 3 மாதம் ஆகிவிட்டது,. இன்னும் முடிந்தபாடில்லை. சீரமைப்பு பணிக்காக பெருமாள் தெரு தாண்டி சாக்கடையை அதற்குண்டான பாதையில் செல்லாமல் தடுத்து சாலைக்கு திருப்பி விட்டு இருக்கிறார்கள். இதனால் சாலை இறக்கத்தில் எப்போதும் சாக்கடை தேங்கி நிற்கிறது. பாதசாரிகளுக்கு இடையூறு ஏற்படுத்துவதுடன் இந்த பகுதி வியாபாரிகள் பெரும் அவதிக்கு ஆளாகி இருக்கிறார்கள்.
புதுரோட்டில் இருந்து ராமலிங்கம் தெருவுக்கு வாகனங்கள் எதுவும் செல்லமுடியாமல் துண்டிக்கப்பட்டு இருக்கிறது.
இந்த நிலையில் 2 நாட்களுக்கு முன்பு பழைய போஸ்ட் ஆபீஸ் தெருவுக்கு முன்னதாக உள்ள மின்சார டிரான்ஸ்பார்மர் அருகில் சாக்கடையை சீரமைப்பு பணிக்காக அடைத்து விட்டு சாலையில் திருப்பி விட்டு இருக்கிறார்கள். இதன் காரணமாக அந்த பகுதியில் உள்ள கடைகள், அலுவலகங்கள் முன்பு சாக்கடை ஓடுகிறது.
மேலும் டிரான்ஸ்பார்மர் பகுதியில் சாக்கடை தேங்கி இருப்பதால் எந்த நேரத்தில் அபாயம் ஏற்படுமோ என்ற பயத்திலேயே அந்த பகுதியை மக்கள் கடந்து செல்கிறார்கள்.
கோவில்பட்டி நகராட்சி தலைவர் மற்றும் சட்டமன்ற உறுப்பினர் ஆகியோர் இந்த பணியை பார்வையிட்டு துரிதப்படுத்த எந்தவித நடவடிக்கையும் எடுக்காதது இந்த பகுதி மக்கள் இடையே ஆதங்கத்தை ஏற்படுத்தி உள்ளது.