எல்லோருக்கும் எல்லாம் கிடைக்க வேண்டும் என்பது தான் திராவிட மாடல் கொள்கை; அமைச்சர் கீதாஜீவன் பேச்சு
கோவில்பட்டி சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட இளைஞர் அணியினருக்கான திராவிட மாடல் பயிற்சிப்பாசறை நடத்தப்பட்டது. கோவில்பட்டி சவுபாக்யா மகாலில் நடைபெற்ற இந்த பாசறை கூட்டத்துக்கு அமைச்சர் கீதா ஜீவன் தலைமை தாங்கினார்.
தி.மு.க.செய்தி தொடர்பாளர் தமிழன் பிரசன்னா, சமூக சிந்தனையாளர் கோவி.லெனின் ஆகியோர் கருத்துரை வழங்கினர். கோவிலப்ட்டி நகர்மன்ற தலைவர் கருணாநிதி, ,மாவட்ட தி.மு.க. இளைஞர் அணி அமைப்பாளர் மதியழகன் முன்னிலை வகித்தார்.
கூட்டத்தில் அமைச்சர் கீதாஜீவன் பேசுகையில் கூறியதாவது:-
தோளில் துண்டு போட முடியாத நிலை, ஆலயத்திற்குள் அனுமதி கிடையாது, கல்வி கற்க முடியாத நிலை, வேலை வாய்ப்பு இல்லாத நிலை என சமூகத்தில் பல்வேறு சீர்கேடுகளை ஒழித்து இன்றைக்கு தமிழகம் தலை நிமிர்ந்து நிற்கிறது. தொழில்வளர்ச்சி, பொருளாதரத்தில் முன்னேறி இருக்கிறது. இந்தியாவில் முதன்மை மாநிலமாக உள்ளது.
முன்பு இருக்கையில் அமர கூட அனுமதி கிடையாது. இன்றைக்கு அனைவரும் சமமாக அமரும் நிலை உள்ளது. எல்லோரும் படிக்கிறோம், எல்லோருக்கும் வேலைவாய்ப்பு கிடைக்கிறது. எல்லோருக்கும் எல்லாம் என்ற நிலை நீதிகட்சியில் இருந்து உருவாக்கியது தந்தை பெரியார், அண்ணா, முன்னாள் முதல்வர் கருணாநிதி, அவர்கள் வழியில் ஆட்சி புரியும் முதல்வர் மு..க.ஸ்டாலின்.
எல்லோருக்கும் எல்லாம் கிடைக்க வேண்டும் என்பது தான் திராவிட மாடல் கொள்கை. வரலாற்றினை எதிர்கால சந்ததிகள் தெரிந்து கொள்ள வேண்டும் என்பதற்காக தான் திமுக இளைஞரணி சார்பில் திராவிட மாடல் பயிற்சி பாசறை நடைபெற்று வருகிறது.
இவ்வாறு கீதாஜீவன் பேசினார்.
முன்னதாக நகர இளைஞர் அணி அமைப்பாளர் மகேந்திரன் வரவேற்று பேசினார். முடிவில் மாவட்ட துணை அமைப்பாளர் கருப்பசாமி நன்றி கூறினார்,