கல்லூரி பேராசிரியர் தாக்கப்பட்ட சம்பவம்: 3 மாணவர்கள் மீது வழக்குப்பதிவு
தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி கிருஷ்ணா நகரில் அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரி உள்ளது. இங்கு கணிதத் துறை பேராசிரியராக பணியாற்றி வருபவர் சிவசங்கரன் (வயது 46).
அதே கல்லூரியில் படித்து வரும் ஒரு மாணவர், மாணவி ஒருவரை காதலித்து வந்ததாக கூறப்படுகிறது. இதனை அறிந்த சிவசங்கரன், அந்த மாணவரை அழைத்து அறிவுரை கூறினாராம்.
இந்த நிலையில் சிவசங்கரன் நேற்று முன்தினம் தனது அலுவலக அறையில் இருந்தார். அப்போது அதே கல்லூரியில் படிக்கும் மாணவர்கள் 2 பேர் அவரது அறைக்குள் நுழைந்தனர். அவர்கள் திடீரென பேராசிரியர் சிவசங்கரனை தாக்கினர். இதில் காயம் அடைந்த அவர், கோவில்பட்டி அரசு ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார்.
இதுபற்றி பேராசிரியர் சிவசங்கரன், கோவில்பட்டி மேற்கு போலீசில் புகார் கொடுத்தார். அதன் பேரில், தாக்குதல் நடத்திய 2 மாணவர்கள் உள்பட மேலும் ஒரு மாணவர் மீது வன்கொடுமை, அவதூறாக பேசுதல் உள்ளிட்ட 4 பிரிவுகளில் சப்-இன்ஸ்பெக்டர் ஹரி கண்ணன் வழக்குப்பதிவு செய்தார்.
கோவில்பட்டி துணை போலீஸ் சூப்பிரண்டு வெங்கடேஷ், பள்ளிக்கூட அலுவலக அறையில் உள்ள கண்காணிப்பு கேமராவில் பதிவான காட்சிகளை ஆய்வு செய்து விசாரணை நடத்தி வருகிறார்.
மேலும் இந்த சம்பவம் தொடர்பாக கல்லூரி முதல்வர் நிர்மலா விசாரணை நடத்தி 2 மாணவர்களை சஸ்பெண்டு செய்தார்.