• April 26, 2024

சீமானுக்கு வாய்க்கொழுப்பு; டி.ஜெயக்குமார் கடும் தாக்கு

 சீமானுக்கு வாய்க்கொழுப்பு; டி.ஜெயக்குமார் கடும் தாக்கு

சென்னையில் முன்னாள் அமைச்சர் டி.ஜெயக்குமார் செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்த்தார். அப்போது கேட்கப்பட்ட கேள்விகளும் அதற்கு அவர் அளித்த பதில்களும் வருமாறு:-

கேள்வி:- ஆவின் பால் நிறுவனத்தில் முறைகேடு நடந்துள்ளது என்றும்,குறைந்த அளவு பால் தரப்படுகிறது என்ற குற்றச்சாட்டு எழுந்துள்ளதே

பதில்:- விஞ்ஞான பூர்வ ஊழல் செய்து சர்காரியா கமிஷனால் குற்றவாளி என்று அடையாளம் காட்டப்பட்டவர்கள். அறிவியல் பூர்வமாக ஊழல் செய்வது என்பது இவர்களுக்குக் கைவந்த கலை. தமிழகம் முழுவதும் 37 லட்சம் லிட்டர் பால் விற்பனை ஆகிறது. அதில் தினந்தோறும் 5.50 லட்சம் லிட்டரை நாசர் என்ற பூனைக்குட்டி குடித்துவிட்டது.
பூனைக் குட்டி குடித்த பாலின் விலை எவ்வளவு. ஒரு நாளைக்கு 2 கோடியே 40 லட்சம். வருடத்திற்கு 800 கோடி லிட்டர் பாலை பூனை நாசர் குடித்துவிட்டு ஏப்பம் விட்டுள்ளது. விசாரணை செய்யவேண்டும் என்றாலே தவறு நடந்துள்ளது என்றுதானே அர்த்தம். நீதிபதி தலைமையில் விசாரணை நடத்தி நாட்டு மக்களுக்கு உண்மை நிலையை தெரிவிக்கவேண்டும். ஆனால் துறை ரீதியான விசாரணை என்பதில் எந்தவிதத்திலும் நியாயம் கிடைக்காது.
கேள்வி:- அ.தி.மு.க. தலைவர்களை சிறுமைப்படுத்தும் வகையில் சீமான் கருத்து தெரிவித்துள்ளாரே

பதில்:- புரட்சித்தலைவர் இன்று அல்ல.,.நாளை அல்ல உலகம் முழுவதும் என்றும் போற்றப்படக்கூடிய தலைவர். அவருக்கு நினைவுச் சின்னம் தொப்பியும்,கண்ணாடியுமாம். தமிழன் ஏற்றம் பெறுவதற்கும், தலை நிமிர்ந்து நிற்பதற்கும் காரணம் அண்ணா. அவருடைய நினைவுச் சின்னம் மூக்குப்பொடி டப்பா என்பதா. அம்மாவைப் பொறுத்தவரையில் உலகம் முழுவதும் ஏற்றுக்கொண்ட மாபெரும் தலைவர். தங்கதாரகை இன்றைக்கும் உலகம் முழுவதும் போற்றப்படக்கூடிய உத்தம தலைவர் அவர். அம்மாவுக்கு மேக்கப் செட்டாம். சீமானுக்கு எவ்வளவு வாய் கொழிப்பு இருக்கிறது பாருங்கள்.
இந்த வாய்க்கொழுப்பைத் தயவு செய்து தி.மு.க.விடம் காட்டுங்கள். அ.தி.மு.க.விடம் காட்டாதீர்கள். காட்டினால் பின் விளைவுகளை கடுமையாக இருக்கும். அ.தி.மு.க.வுடன் விளையாட வேண்டாம். எங்களுடைய தலைவர்களை சீண்டிபார்க்கவேண்டாம். சீண்டினால் அதனால் கடும் விளைவுகளை சந்திக்கவேண்டியிருக்கும்.

கேள்வி:- முதல்வரின் மருமகன் திருச்செந்தூர் கோயிலில் யாகம் நடத்துவதற்கு பா.ஜ.க. பிரமுகரை அழைத்துச் சென்றதாக தகவல் வருகிறதே.

பதில்:-விலாங்கு மீன், பாம்புக்கு தலையை மட்டும் காண்பிக்குமாம். மீனுக்கு வாலை காண்பிக்கும். பாம்புக்கு தலையும், மீனுக்கு வாலும். இதுதான் தி.மு.க.வின் இரட்டை வேடம். ஆதிகாலத்திலிருந்து இப்படிதான் உள்ளது. இந்திராகாந்தியை கடுமையான விமர்சனம் செய்துவிட்டு நேருவின் மகளே வருக நிலையான ஆட்சி தருக என்றார்கள். பாஜகவுடன் எந்த காலத்திலும் உறவு இல்லை என்றார்கள். ஆனால் 1999 ல் அவர்களுடைய அமைச்சரவையில் 5 வருடம் இருந்தார்கள். இவர்கள் சந்தர்ப்பவாதிகள்.நிறம் மாறும் பூக்கள். சந்தர்ப்பவாதத்தின் ஒட்டுமொத்த உருவம்தான் திமுக.

கேள்வி:- அனைத்து கட்சி கட்சி ஆலோசனை கூட்டத்திற்கு எடப்பாடி கே.பழனிசாமிக்கு இணை ஒருங்கிணைப்பாளர் என்றுதான் கடிதம் அனுப்பபட்டதாக ஓ.பன்னீர்செல்வம் தரப்பினர் தெரிவிக்கின்றனரே?

பதில்:- எங்களைப் பொறுத்தவரையில் அ.தி.மு.க. சார்பில் இடைக்கால பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி சார்பில் நானும், பொள்ளாச்சி ஜெயராமனும் கலந்துகொண்டோம். அவர்கள் எந்த கட்சி என்றே எங்களுக்குத் தெரியாது. ஒருவேளை சுயேச்சையாக கூட இருக்கலாம். இதனைப் பற்றி நாங்கள் கவலைப்படதேவையில்லை.இந்த விவகாரத்தை எல்லாம் நாங்கள் தேர்தல் ஆணையத்திடம் பேசிக்கொள்வோம்.

கேள்வி:- கனல் கண்ணன் பெரியார் சிலையை உடைக்கவேண்டும் என்று மேடையில் பேசியுள்ளாரே.

பதில்:-எல்லோருக்கும் எல்லாம் கிடைக்கவேண்டும் என்ற வகையில் பாடுபட்டவர்கள் அண்ணா,பெரியார். அதேபோல புரட்சித்தலைவர், புரட்சித்தலைவி அம்மா. இவர்களுடைய புகழுக்கு களங்கம் விளைவிக்கும் வகையிலும் அதேபோல அவர்களுடைய திருவுருவ சிலைக்கு சேதம் விளைவிக்கின்ற அந்த செயல்களை செய்தால் இந்த ஆளும் தி.மு.க. அரசு இரும்புக்கரம் கொண்டு அடக்கி ஒடுக்கவேண்டும். இதுதான் எங்களின் வேண்டுகோள்.
கேள்வி:-பண்ருட்டி ராமச்சந்திரன் சசிகலாவைச் சந்தித்த பின்னர் எடப்பாடி பழனிசாமியை கடுமையாக விமர்ச்சனம் செய்துள்ளாரே.அவர் மீது நடவடிக்கை எடுக்கப்படுமா?

பதில்:- நடவடிக்கை குறித்து கட்சி தலைமைதான் முடிவு செய்யும். அவருடைய கருத்துக்கு எடப்பாடி பழனிசாமி பதில் சொல்லிவிட்டார்.

இவ்வாறு முன்னாள் அமைச்சர் டி.ஜெயக்குமார் பதில் அளித்தார்.

Digiqole Ad

Related post

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *