அனுமதி மறுப்பு: கோவில்பட்டியில் பா.ஜ.க.ஆர்ப்பாட்டம்; போலீஸ் தள்ளுமுள்ளு-பரபரப்பு
![அனுமதி மறுப்பு: கோவில்பட்டியில் பா.ஜ.க.ஆர்ப்பாட்டம்; போலீஸ் தள்ளுமுள்ளு-பரபரப்பு](https://tn96news.com/wp-content/uploads/2022/08/50f5341e-56b0-4948-baff-5f497d33d421-850x454.jpg)
கோவில்பட்டி வெங்கடேஷ் நகர் மற்றும் அண்ணா நகர் பகுதிகளில் மத மாற்றம் செய்யும் முயற்சியில் செயல்பட்டுக் கொண்டிருந்த சிலரை தட்டிக்கேட்டபா.ஜ.க. நிர்வாகிகளை தாக்கியவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி, பா.ஜ.க. சார்பில் இன்று (ஆகஸ்டு 2) ஆர்ப்பாட்டம் நடைபெறும் என அறிவிக்கப்பட்டிருந்தது. இதற்கு காவல் துறை அனுமதி மறுக்கப்பட்டு, அதற்கான அறிவிப்பும் வெளியிடப்பட்டது.
![](https://tn96news.com/wp-content/uploads/2022/08/afb89fdf-67a7-4c77-9380-66e0c486e03b.jpg)
இந்நிலையில், தூத்துக்குடி வடக்கு மாவட்ட பா.ஜனதா தலைவர் வெங்கடேஷ் சென்னகேசவன் தலைமையில், கோவில்பட்டி கோட்டாட்சியர் அலுவலகம் அருகே இருந்து, அக்கட்சியினர் ஊர்வலமாக புறப்பட்டனர். அவர்களை கூடுதல் காவல் துணை கண்காணிப்பாளர் பிரகாஷ் பாபு தலைமையில், துணை கண்காணிப்பாளர்கள் வெங்கடேஷ், லோகேஸ்வரன் மற்றும் போலீசார் தடுத்தனர்.
![](https://tn96news.com/wp-content/uploads/2022/08/cdf7516d-c285-47c2-a9ac-381f6698ece0.jpg)
இதையடுத்து, அப்பகுதியில் போலீசாருக்கும் , பா.ஜனதா கட்சியினருக்கும் இடையே தள்ளுமுள்ளு ஏற்பட்டது. பின்னர் போராட்டக்காரர்களை போலீசார் கைது செய்து வேனில் ஏற்றினர். இதையடுத்து, கோவில்பட்டி இ.எஸ்.ஐ. மருந்தகம் அருகே, பா.ஜனதாவை சேர்ந்த மேலும் சிலர் ஆர்ப்பாட்டம் மற்றும் மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
![](https://tn96news.com/wp-content/uploads/2022/08/300d1523-612c-4e37-b475-ca9192aa628a.jpg)
இது குறித்த தகவல் அறிந்தவுடன் சம்பவ இடத்திற்கு வந்த போலீசார் , அனுமதியின்றி ஆர்ப்பாட்டம் மற்றும் மறியல் போராட்டத்தில் ஈடுபட்டவர்களை கைது செய்யும் முயற்சியில் ஈடுபட்டனர். ஆனால் அப்போதும் பா.ஜ.க. வினருக்கும், போலீசாருக்கும் இடையே தள்ளுமுள்ளு ஏற்பட்டது. பின்னர் போராட்டத்தில் ஈடுபட்ட அனைவரையும் போலீசார் கைது செய்து தனியார் திருமண மண்டபத்தில் தங்க வைத்தனர்.
இந்த சம்பவங்களால் கோவில்பட்டி எட்டையபுரம் சாலை, தபால் அலுவலகம் மற்றும் புதுரோடு அரசு மருத்துவமனை அருகே சுமார் ஒரு மணி நேரம் பரபரப்பு ஏற்பட்டது. மேலும், பா.ஜ.க.வினர் நகரில் ஆங்காங்கே போராட்டத்தில் ஈடுபடக்கூடும் என்பதற்காக, நகரின் பல்வேறு இடங்களில் போலீசார் கண்காணிப்பு பணியில் ஈடுபட்டனர்.
![Digiqole Ad](https://tn96news.com/wp-content/uploads/2023/01/add-1.jpg)