ஏகலைவனிடம் குருதட்சனையாக கட்டை விரலை கேட்ட துரோணர்….
![ஏகலைவனிடம் குருதட்சனையாக கட்டை விரலை கேட்ட துரோணர்….](https://tn96news.com/wp-content/uploads/2022/07/201801301239289826_Ekalan-thumb-in-the-kannans-flute_SECVPF.jpg)
அவர் ஒரு ஆரிய பிராமண சூது பிடித்தவர் , இரக்கமில்லாதவர், பார்ப்பன கொடூரக்காரர் என ஏக குற்றசாட்டுகள் பகுத்தறிவு பேசுபவர்களிடம் இருந்து வரும்.
உண்மையில் நடந்தது என்ன..? அந்த துரோணரின் நிலை பரிதாபமானது..
ஆம், துரோணர் அந்த அரச குடும்பத்து ஆசிரியர், எல்லா விதத்திலும் அரசனுக்கு கட்டுபட்டவர், அவனை மீறி அவர் ஏதும் செய்துவிட முடியாது.
சுருக்கமாக சொன்னால் அரச குடும்பத்து அடிமைகளில் ஒருவர்.
அந்நாளில் ராஜவம்சத்துக்கு மட்டுமே ஷத்ரிய வம்சத்துக்கு மட்டுமே சில பயிற்சிகள் கற்றுகொடுக்கபடும், எல்லோரும் எல்லாம் பயின்றால் அரசுக்கு எதிரான சக்திகள் தலையெடுக்கும் எனும் தந்திரம் அது
.
இன்று இந்திய ராணுவ வித்தகர்கள் அங்கீகரிக்கபடா வீரர்களுக்கு அல்லது தெரு ரவுடிகளுக்கெல்லாம் துப்பாக்கி சுடுதலும் இதர பயிற்சியும் தர முடியுமா? முடியாதல்லவா?
இதே நிலையில்தான் துரோணர் இருந்தார்.
அவ்வகையில் பாண்டவரும், கவுரவரும் பயில்கின்றார்கள், தேரோட்டி மகனான கர்ணனும் படிக்கின்றான்.
அவர்கள் அரங்கேற்றம் முடிந்த பின்பு தான் ஏகலைவன் என்றொருவன் இருப்பதும் அவன் வில்வித்தையில் அர்ஜூனனையும் மிஞ்சி நிற்பதும் அறியபடுகின்றது.
அர்ஜூனன் அதை நேரிலே பார்த்துவிட்டான்
அதுவரை தானே பெரும் வீரன் என நம்பிகொண்டிருந்த அவனுக்கு அந்த காட்சி அதிரவைத்தது.
ஆம், ஒரு நாய் அவன் முன் சுருண்டு விழுந்தது எங்கிருந்தோ வந்த அம்புகள் அந்த நாயினை அர்ஜூனனே அசரும் வண்ணம் தைத்தன.
முதல் அம்பு நாயின் காலை தாக்கிற்று, இரண்டாம் அம்பு மரத்தில் பட்டு சரியாக திரும்பி தன் வாயில் குறுக்காக பாய்ந்தது. மின்னலென வந்த அம்புகள் மிக அதிசயிக்க வகையில் எங்கெங்கோ பட்டு திரும்பி நாயின் வாயினை பல வகையில் தைத்து நாயின் தலையினை கழுத்தோடு திருப்பி வைத்தது
.அசந்து நின்றார் அர்ஜூனன். இந்த அம்பினை யார் எய்தது என வியந்து தேடினால் அங்கொரு வேடன் ஒரு சிலையினை வணங்கி கொண்டிருந்தான், அந்த சிலை துரோணாரின் சிலையாய் இருந்தது.
அர்ஜூனனுக்கு ரத்தம் கொதித்தது, துரோணர் மிக பெரும் துரோகத்தை செய்ததாக பொருமினான், அரச குடும்பத்துக்கு செய்ய வேண்டிய காரியத்தை வேடுவனுக்கு சொல்லி தந்தாகவும் இது “ராஜதுரோகம்” எனவும் ஆத்திரமடைந்தான்.
துரோணரின் சிலையினை வணங்குபவன் எப்படிபட்ட சீடனாக இருக்கமுடியும்? துரோணர் இதுபற்றி ஏன் யாரிடமும் சொல்லவில்லை என கடும் குழப்பமும் கோபமும் கொண்ட அவன், ஏதோ காரணங்களுக்காக அவனை அவர் ரகசியமாக தயார்படுத்துவதாக சந்தேகித்தான்
.துரோணாருக்கும் எதிரிகள் இருந்தார்கள், ஒரு அரசனிடம் அவமானபட்டேதான் அஸ்தினாபுரத்துக்கு வந்தார், அப்படிபட்ட துரோணர் ஏதோ செய்கிறார் தங்களுக்கு தெரியாமல் செய்கின்றார் என்பதை அறிந்து கொதித்தான்
.அதை அவையிலே சொன்னால் நிச்சயம் துரோணாரின் தலை வெட்டப்படும், அவ்வளவு கொடிய குற்றம் ராஜதுரோகம்
. ஆயினும் நிதானமான அரஜூனன் இதனை துரோரணிடமே சொன்னான்
.அதிர்ந்தத துரோணார், நிலைமையின் விபரீதத்தை அறிந்து தான் யாருக்கும் அப்படி ஒருவனுக்கு பயிற்சி அளிக்கவில்லை என அலறி அவனை அழைத்து கொண்டு காட்டுக்கு விரைந்தார்
.
அந்த நாயினை கண்டபொழுதே அவருக்கு வியர்த்தது, அவ்வளவு துல்லியமாக அம்பு எறியும் சக்தி அதுவும் அசையும் இலக்கினை வீழ்த்தும் சக்தி யாருக்குமில்லை.
அவனை தேடி சென்ற துரோணருக்கு இன்னும் அதிர்ச்சி காத்திருந்தது.
அவன் ஆற்றுக்கு அந்த பக்கம் இருக்கும் மரத்திற்கு அம்படித்தான், அந்த அம்புக்களை தொடுத்து பாலமே கட்டினான், அதில் ஏறி செல்ல தயாரான பொழுதுதான் துரோணர் தடுத்தார்.
“நில், யார் நீ” அந்த சத்தம் கேட்டதும் ஏகலைவன் அதிர்ந்தான்.
“குருவே” என காலில் விழுந்தான், அர்ஜூனனக்கு கோபம் அதிகமாயிற்று
துரோணர் கத்தினார், “என் சிலையினை வைத்து பூஜித்து என்னை பெரும் சிக்கலில்
இழுத்துவிட்டிருக்கின்றாய்?, இப்பொழுது நான் ராஜதுரோக குற்றத்தில் சிக்க போகின்றேன்” என உறுமினார்.
குனிந்தபடி காதை பொத்திகொண்டு சொன்னான் வேடவன், “குருவே நான் ஏகலைவன், இந்த காட்டின் வேடுவன்
. சில வருடங்களுக்கு முன் உங்களை பற்றி கேள்விபட்டு என் தந்தை என்னை உங்களிடம் பயிற்சி பெற சேர்க்க வந்தார், ஆனால் ராஜகுருமார்களுக்கு தவிர உங்களால் பயிற்சி அளிக்கமுடியாது என மறுத்தீர்கள்.
நான் இந்த காட்டில் உங்களை குருவாக கொண்டு மனதார வணங்கி நானே பயிற்சி பெற்றேன்.
நானே உங்கள் நினைவில் வித்தைகளை கற்றேன், அப்படி உருவானேன்
இதெல்லாம் உங்கள் நினைவில் நான் கற்றது, என் மனதில் இருந்து நீங்கள் சொல்லிகொடுத்தது, உங்களால் உருவானவன் நான், இந்த வித்தை நீங்கள் போட்ட பிச்சை” என வணங்கி நின்றான்.
துரோணருக்கு எல்லையற்ற மகிழ்ச்சி, ஒரு குருவுக்கு பெருமை பொன் அல்ல புகழ் அல்ல இன்னும் எதுவும் அல்ல, தன் சீடன் ஒருவன் சாதித்து நிற்பது ஒன்றுதான் மகிழ்ச்சி.
அதுவும் தன்னை காணாமல் தன் நினைவு ஒன்றிலே மாவீரன் உருவானது அதை விட மகிழ்ச்சி, நிச்சயம் அவன் வித்தை அர்ஜூனனை விட பெரிது. தான் நேரில் உருவாக்கிய அர்ஜூனனை விட தான் காணாமலே உருவான அந்த ஏகலைவன் துரோணருக்கு பெரிதாய் நின்றான்.
ஆனால் அதை துரோணாரால் வாய்விட்டு சொல்லமுடியாது.துரோணரின் நிலை சிக்கலானது, அவனை சேர்த்துகொண்டால் சிக்கல் அவனை வெளிதள்ளவும் அவருக்கு மனமில்லை. அரசவாரிசுகளையும் மீறி ஒரு வேட்டுவன் வித்தையில் மிஞ்சி நிற்பது அரசகுடும்பத்துக்கும் நல்லதல்ல நாட்டுக்கும் நல்லதல்ல, அவன் எதிரி கையில் வீழ்ந்தால் முடிந்தது கதை,
நாட்டு மக்களை சேர்த்து கலகம் செய்தால் இன்னும் மோசம்.அதற்காக வேட்டுவனை அரண்மனைக்கும் அழைக்கமுடியாது சட்டம் இடம் கொடாது. இப்படி ஒரு சிக்கல் இருக்க அவனை சந்திக்க கிளம்புகின்றது மேலிடமும், துரோணரும் அர்ஜூனனும், ஏகலைவனின் வித்தையில் அஞ்சுகின்றான்.
அர்ஜூனனை மீறி ஜொலித்து நிற்கின்றான் ஏகலைவன், அவனை விட்டுவைப்பது நல்லதலல் என மேலிடம் முடிவெடுக்கின்றது.
ஏகலைவன் குரு என யார் என கேட்க அவன் துரோணர் சிலையினை காட்டுகின்றான், ஆம் துரோணரை மனதால் வணங்கி வளர்ந்து தானே வித்தை கற்றவன் ஏகலைவன்
. எல்லோரும் அதிர்கின்றனர், காரணம் துரோணர் அரசகுடும்பத்துக்கு மட்டுமே ஆசிரியர்.. அப்படியானால் இவனை இவ்வளவு திறமையாக அவர் உருவாக்க காரணம் என்ன? எனும் சந்தேக கேள்விகள் எழுகின்றன
.துரோணர் அரச குடும்பத்துக்கு எதிராக ஒருவனை ரகசியமாக வளர்ப்பதாக சந்தேகம் அவர் மீதே படர்கின்றது, ஆம், அரசகுடும்பத்துடன் உறவாடுவது ராஜநாகத்துடன் உறவாடுவதற்கு சமம். சிக்கலில் தவிக்கின்றார் துரோணர், ராஜதுரோக குற்றசாட்டு அவர் மேல் சுமத்தபடும் ஆபத்து நெருங்கிற்று,
இதன் சூத்திரதாரி கண்ணன், ஏகலைவன் கவுரவர் பக்கம் கர்ணனை போல் சிக்கிவிட கூடாது என்பது அந்த நாடகத்தின் பொருள். துரோணர் மிக பெரும் இக்கட்டில் வீழ்ந்தார், அவரை காக்கும் ஒரே நம்பிக்கையாக ஏகலைவன் நிற்கின்றான்,
அவன் நிச்சயம் துரோணரின் பெருமை, துரோணரின் மாபெரும் மகிழ்ச்சியும் சாதனையும் அவன்
.
ஆனால் விதி? துரோணருக்கு அவனை விடவும் முடியவில்லை எடுக்கவும் முடியவில்லை, தவிக்கின்றார். ஆம் அரச கட்டளை மீறி அவர் என்ன செய்யமுடியும்?
அவனை கொல்லவேண்டிய இடம் அது,ஆம் அரசனின் கோபம் அவனை முதலில் கொல்லும் துரோணரை அடுத்து கொல்லும், ராஜதுரோகம் எனும் குற்றத்துக்கான தண்டனை அது! யோசித்தார் துரோணர், அந்த சீடன் அழிவதில் அவருக்கு விருப்பமில்லை அவனை பலமிழக்க வைத்தால் போதுமென குருதட்சனையாக கட்டைவிரலை கேட்கின்றார்
.குரு கேட்டால் தலைகொடுக்கவும் துணியும் ஏகலைவன் கட்டை விரலை மகிழ்வாய் கொடுத்து பலமிழக்கின்றான், இனி அவனால் வில்வித்தை அவ்வளவு துல்லியமாக செய்யமுடியாது
. குருவுக்கு சிஷ்யன் கொடுக்கும் காணிக்கை அவரை காக்கும் என்பது சாஸ்திர நம்பிக்கை , கண்ணீரோடு அவனின் கட்டை விரலை தாயத்தில் வைத்து கழுத்தில் கட்டிகொள்கின்றார் துரோணர்
.அந்த காட்சி உருக்கமானது, கண்ணீர் வரவழைக்கும் காட்சி அது. துரோணருக்கு அவனை போல மாணவன் இல்லை, நல்ல ஆசிரியனுக்கு சிறந்த மாணவனை விட பெருமை எது?
ஆனால் விதி பொல்லாதது அல்லவா? அப்பக்கம் ஏகலவைனுக்கோ குருநாதருக்காக வித்தையினையே கொடுத்துவிட்ட தியாக மகிழ்ச்சி, தன் கட்டைவிரல் அவர் கழுத்தில் இருப்பதில் அவ்வளவு மகிழ்ச்சி
தானே அவரின் மார்பில் சாய்ந்ததாக மகிழ்ந்தான்,
துரோணர் அரண்மனை திரும்பினார். ஆம் துரோணர் அவன் உயிரை காத்தார், அவன் துரோணர் உயிரை காத்தான்.
காலங்கள் ஓடின பாண்டவருக்கும், கவுரவருக்கும் யுத்தம் நெருங்கிற்று, ஒவ்வொருவரின் பலத்தையும் அளந்த கண்ணன் துரோணர் பக்கமும் வருகின்றான்,
ஏற்கனவே கட்டை விரல் வாங்க காரணமே அந்த மாயவனே,
துரோணர் கழுத்தில் இருப்பது உன்னதமான சிஷ்யனின் காணிக்கை, ஒரு ஆத்மார்த்தமான காணிக்கை அது, அதன் சக்தி வலியது, துரோணரின் உயிர்காக்க கொடுக்கபட்ட அக்காணிக்கையின் சக்தி துரோணரை சாகவிடாது ,
அது இருக்கும்வரை துரோணர் வீழமாட்டார்
என்ன செய்யலாம்? அதே வித்தைதான், ஏழை அந்தணராக மாறிய கண்ணன் யாசகனாய் வந்தான், தன் மகளுக்கு திருமணமென்றும் ஒரு தாலிக்கும் வழியில்லை எனவும் அழுது அந்த தாயத்தையே உற்று பார்த்தான்
.
குறிப்பறிந்த துரோணர் இதைவிட பெரும் தாலி இல்லை, இது ஆசிமிக்கது என அதை வழங்கினார், துரோணரின் கழுத்தில் இருந்து அந்த பெரும் கவசத்தை அகற்றினான் கண்ணன்
. அதன்பின் எல்லாம் முடிந்தது, சாகும் வேளையில் துரோணர் முன் தன் புல்லாங்குழலை காட்டினான் கண்ணன், ஆம் அதில் அந்த விரலை பதித்திருந்தான்
.
அதை கண்டவுடன் துரோணருக்கு எல்லாம் விளங்கிற்று, மெல்ல பேசினான். கண்ணன் அவன் குரல் அந்த ஞான தத்துவத்தை போதித்தது
“துரோணாச்சாரியே.. சிஷ்யர்களில் எல்லாம் உயர்ந்தவன் ஏகலைவன், ஆசிரியரில் எல்லாம் உயந்தவன் நீ
. உங்களுக்குள்ளான உணர்வும் புரிந்துணர்வும் பாசமும் எந்த குருவுக்கும் சீடனுக்கும் அமையாது.
அவனை அன்றே நீ கொன்றிருந்தால் நீ பாவிபாயிருப்பாய், விட்டிருந்தால் அவனை நீனே வளர்த்தாய் என பழி சுமந்திருப்பாய் , அவன் பாண்டவர் பக்கம் வந்தாலும் கவுரவர் பக்கம் வந்தாலும் பழி உனக்கே.
உன் மாணவர்களில் அர்ஜூனன் பெரும் அடையாளம்.
நீ நேரடியாக பயிற்றுவித்தாய், ஆனால் உன்னை மனதால் வணங்கி வளர்ந்த ஏகலைவனே அவனை விட உயர்ந்தவன், ஒரு மாணவன் எப்படி இருக்க வேண்டும் என்பதன் அடையாளம்.
அங்கு உன் உயிரை அவன் காத்து மாணவனின் கடமையினை செய்தான், நீ அவன் உயிரை காப்பாற்றி ஆசிரியனுக்குரிய கடமையினை காத்தாய்.
நீ கேட்டவுடன் கொடுத்த அந்த விரல் அவனின் தியாகத்துக்கும் குருசிஷ்ய பாசத்துக்கும் என்றும் எடுத்துகாட்டாய் இருக்கும், உன் பெயர் இருக்குமிடமெல்லாம் அவனும் இருப்பான்…”
அந்த புல்லாங்குழலில் இருந்த விரலை நோக்கியபடியே உயிர்நீத்தார் துரோணர்
ஆம் நல்ல மாணவன் ஆசிரியர் அளவு வரலாற்றில் நிலைப்பான் என்பதுதான் ஏகலைவன் வாழ்வின் தத்துவம்
மகாபாரதத்தின் ஒவ்வொரு காட்சியும் சிலாகிப்பானவை, வெற்று பாத்திரம் என்றோ தேவையற்ற திணிப்பு என்றோ எதுவுமில்லை.
—காசி விஸ்வநாதன்-திருநெல்வேலி
![Digiqole Ad](https://tn96news.com/wp-content/uploads/2023/01/add-1.jpg)