காதல் திருமணம் செய்த தம்பதி வெட்டிக்கொலை
தூத்துக்குடி மாவட்டம் எட்டையாபுரம் அருகே உள்ள வீரப்பட்டி கிராமம் ஆர்.சி தெருவை சேர்ந்தவர் முத்துக்குட்டி (வயது 50). இவரது மகள் ரேஸ்மா (20), கோவில்பட்டியில் உள்ள கல்லூரியில் 2ஆம் ஆண்டு படித்து வந்தார். இவர் அப்பகுதியை சேர்ந்த கூலி தொழிலாளியான வடிவேல் மகன் மாணிக்கராஜ் (26) என்பவரை காதலித்து வந்தார்.
இவரது காதலுக்கு ரேஷ்மாவின் தந்தை முத்துக்குட்டி கடும் எதிர்ப்பு தெரிவித்தார். இதையடுத்து சில தினங்களுக்கு முன்னர் காதல் ஜோடி இருவரும் ஊரை விட்டு வெளியேறி திருமணம் செய்து கொண்டதாக கூறப்படுகிறது. 2 தினங்களுக்கு முன்பு இருவரும் தங்கள் ஊருக்கு வந்தனர்.
இவர்களது திருமணத்திற்கு ரேஷ்மாவின் தந்தை முத்துக்குட்டி கடும் எதிர்ப்பு தெரிவித்தாராம். பின்னர் ஊர் பஞ்சாயத்து மூலம் பேசி அவர்கள் இருவரையும் தனிக்குடித்தனம் வைத்துள்ளனர். ஆனாலும் முத்துக்குட்டி, தனது மகள் மீது கடும் ஆத்திரத்தில் இருந்தார்.
இன்று மாலை 4 மணியளவில் ரேஷ்மா மற்றும் அவரது கணவர் வீட்டில் இருந்தபோது, அங்கு வந்த முத்துக்குட்டி இருவரையும் சராமாரியாக அரிவாளால் வெட்டினார், அவரது தாக்குதலில் இருந்து தப்பிக்க முடியாமல் பலத்த காயம் அடைந்த காதல் தம்பதி இருவரும் அங்கேயே ரத்த வெள்ளத்தில் கீழே சாய்ந்து விழுந்து இறந்து போனார்கள.
இதை தொடர்ந்து முத்துக்குட்டி அங்கிருந்து தப்பி ஓடிவிட்டார். இந்த சம்பவம் குறித்து தகவல் அறிந்த எட்டையாபுரம் போலீஸ் இன்ஸ்பெக்டர் ஜின்னா பீர்முகமது மற்றும் போலீசார் சம்பவ இடத்துக்கு சென்று விசாரணை நடத்தினர்.
ரேஷ்மா, மாணிக்கராஜ் இருவரது உடல்களையும் கைப்பற்றி பரிசோதனைக்காக கோவில்பட்டி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இது தொடர்பாக எட்டையாபுரம் போலீசார் வழக்குப் பதிவு செய்து தப்பியோடிய முத்துக்குட்டியை தேடி வருகின்றனர். சம்பவ இடத்தை விளாத்திகுளம் டி.எஸ்.பி. பிரகாஷ் பார்வையிட்டார்.