• April 20, 2024

டாக்டரின் பாராட்டு கடிதத்தால் திக்குமுக்காடிய போலீஸ்காரர்

 டாக்டரின் பாராட்டு கடிதத்தால் திக்குமுக்காடிய  போலீஸ்காரர்

இலங்கை தலைநகர் கொழும்புவில் அறுவை சிகிச்சை மருத்துவராக பணியாற்றி ஓய்வு பெற்று, தற்போது கோயம்புத்தூரில் வசித்து வருபவர் டாக்டர் ராமசுப்பு . இவர் கடந்த 18.6.2022 மற்றும் 19.6.2022 ஆகிய நாட்களில் திருச்செந்தூர் கோவிலுக்கு குடும்பத்துடன் வழிபாடு செய்வதற்காக வந்து ஒரு தனியார் விடுதியில் தங்கினார்.

18.6.2022 அன்று நள்ளிரவு சுமார் 12.30 மணியளில் டாக்டர் ராமசுப்புவின் 1 வயது பேரனுக்கு திடீர் வயிற்றுவலி மற்றும் காய்ச்சல் ஏற்பட்டு அவதிப்பட்டான்.
இதனால் ராமசுப்பு மருந்து வாங்குவதற்காக விடுதியிலிருந்து வெளியே வந்து மருந்து கடைகளை தேடி அலைந்தார். நள்ளிரவாகிவிட்டதால் அனைத்து மருந்து கடைகளும் மூடப்பட்டு இருந்ததால் என்ன செய்வதென்று அறியாமல் பரிதவித்தார்.
அப்போது அங்கு நின்று கொண்டிருந்த போலீசாரிடம், தனக்கு அவசரமாக மருந்து வேண்டும் என்று கேட்டார். அப்போது ஒரு காவலர், ராமசுப்புவிடம், நீங்கள் யார் ? எங்கிருந்து வந்து இருக்கிறீர்கள் என்று கூட கேட்காமல் அவரை அருகில் உள்ள மருத்துவமனைக்கு, தனது இரு சக்கர வாகனத்தில் அழைத்து சென்று அவருக்கு தேவையான மருந்து பொருட்களை வாங்கி கொடுத்தார்.

மேலும் சில மருந்துகள் தேவைப்பட்டதால் அங்கு 24 மணி நேரமும் செயல்படும் என அறிவிப்பு பலகை வைக்கப்பட்டு மூடப்பட்டு இருந்த ஒரு மருந்து கடையின் உரிமையாளரை தொடர்பு கொண்டு, கடையை திறக்க செய்து ராமசுப்புவுக்கு தேவையான மருந்துப்பொருட்களை வாங்கிக் கொடுத்தார். பின்னர் ராமசுப்புவை, அவர் தங்கியிருந்து விடுதிக்கு தனது இருசக்கர வாகனத்தில் கொண்டுபோய் இறக்கி விட்டார். ராமசுப்பு இறங்கிய பிறகு, உதவி செய்த போலீஸ்காரரிடம் பெயரை கேட்ட போது, மேற்படி போலீஸ்காரர் தன்னுடைய பெயர் சிவா என்று மட்டும் கூறி விட்டு அங்கிருந்து கிளம்பினார்.
திருச்செந்தூர் பயணத்தை முடித்தபிறகு கோயம்புத்தூர் திரும்பிய டாக்டர் ராமசுப்பு, போலீஸ்காரர் சிவாவின் மனித நேயத்தையும், தன்னலமற்ற சேவை மனப்பான்மையையும் பாராட்டி, தமிழக காவல்துறையையும் பாராட்டி தூத்துக்குடி மாவட்ட காவல் கண்காணிப்பாளருக்கு ஒரு கடிதம் அனுப்பியுள்ளார்.

மாவட்ட காவல் கண்காணிப்பாளர் பாலாஜி சரவணன், அந்த பாராட்டு கடிதத்தை படித்தார். டாக்டருக்கு உதவிகள் செய்த போலீஸ்காரர் யார் என்று விசாரித்தபோது திருச்செந்தூர் கோவில் போலீஸ் நிலையத்தில் பணியாற்றி வரும் முதல் நிலைக் காவலர் சிவா தங்கதுரை என்பது தெரியவந்தது. இதனையடுத்து அவரை நேரில் வரவழைத்து பாலாஜி சரவணன் வெகுவாக பாராட்டினார். டாக்டரின் பாராட்டு கடிதம், கால் கண்காணிப்பாளரின் பாராட்டு இவற்றால் போலீஸ்கார் சிவா தங்கதுரை திக்குமுக்காடிப்போனார்.

டாக்டரின் பாராட்டுக் கடிதம், அவருக்கு உதவி செய்த அந்த போலீஸ்காரருக்கு மட்டுமல்லாமல் காவல்துறையில் உள்ள அனைவருக்குமே ஊக்கமளிப்பதாக உள்ளது என்று டாக்டர் ராமசுப்புக்கு மாவட்ட காவல் கண்காணிப்பாளர் பாலாஜி சரவணன் நன்றி தெரிவித்துள்ளார். இப்போது டாக்டரின் பாராட்டு கடிதம் வைரல் ஆகி வருகிறது.

Digiqole Ad

Related post

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *