• May 17, 2024

சமூகநீதியை கொண்டு வந்தது தி.மு.க.- அமைச்சர் கீதாஜீவன்

 சமூகநீதியை கொண்டு வந்தது தி.மு.க.- அமைச்சர் கீதாஜீவன்

தூத்துக்குடி வடக்கு மாவட்ட தி.மு.க. சார்பில் சட்டமன்ற தொகுதி மகளிர் அணி மற்றும் மாணவரணியினருக்கான திராவிட மாடல் பயிற்சி பயிலரங்கம் கோவில்பட்டி சத்தியபாமா திருமண மண்டபத்தில் நடந்தது. நிகழ்ச்சிக்கு தூத்துக்குடி வடக்கு மாவட்ட செயலாளரும், அமைச்சருமான கீதாஜீவன் தலைமை தாங்கினார். நகர தி.மு.க. செயலாளரும், நகரசபை தலைவருமான கருணாநிதி வரவேற்றார். மாநில செய்தி தொடர்பு இணைச் செயலாளர் ராஜீவ் காந்தி, தன்னம்பிக்கை பேச்சாளர் பர்வீன் சுல்தானா ஆகியோர் பேசினார்கள்.
கூட்டத்தில் மகளிர் அணி, மாணவர் அணியினரிடம் அமைச்சர் கீதாஜீவன் பொது அறிவு கேள்விகளை கேட்டார். அதற்கு பதில் அளித்தவர்களுக்கு பரிசு வழங்கினார். பின்னர் அவர் பேசியதாவது:-
நம்மிடம் சாதி, மத வேறுபாடு இருக்கக்கூடாது. நாம் எல்லோரும் தமிழர்கள் என்று ஒன்று பட வேண்டும் என்பதை தான் தி.மு.க. வலியுறுத்தி வருகிறது. ஒரு இனத்தை அழிக்க வேண்டும் என்றால் அவர்களின் மொழியை அழிக்க வேண்டும் என்று கூறுகின்றனர்.
இந்தியாவில் இருந்த நிறைய மொழிகள் தற்போது இல்லை. வெறுமனே புத்தகத்தில் தான் இருக்கிறது. யாரும் பேசுவதில்லை. ஆனால் தமிழ் மொழி பாதுகாக்கப்பட்டு, செம்மொழியாக மாற்றியதில் திராவிட தலைவர்களுக்கு பெரிய பங்கு உண்டு. தமிழ் மொழி நமது தாய் மொழி என்கிற உணர்வு வேண்டும் என்று தி.மு.க. வலியுறுத்தி வருகிறது.
தி.மு.க. அனைவருக்கும் இடஒதுக்கீடு வழங்கியது. பொருளாதார முறையில் எம்.ஜி.ஆர். கொண்டு வந்த இடஒதுக்கீட்டை தி.மு.க. எதிர்த்தது. அனைவருக்கும் எல்லாம் கிடைக்க வேண்டும் என்ற சமூகநீதியை கொண்டு வந்தது தி.மு.க.
தி.மு.க. கூட்டத்தில் ஏன் துண்டு போடுகிறார்கள் என கேலி செய்த பா.ஜ.க வினருக்கு கூறிக் கொள்கிறேன். இடுப்பில் துண்டை கட்டாதே, அதைத் தோளில் போடு என்று அண்ணா கூறியதை தான் தி.மு.க. செய்தது. சுயமரியாதை உணர்வை ஊட்டுவதற்கு தான் இந்த வழக்கம். கொண்ட கொள்கையில் பிடிப்புடனும் சமுதாய உணர்வோடும் இருப்போம்.
இவ்வாறு அமைச்சர் கீதாஜீவன் பேசினார்.

Digiqole Ad

Related post

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *