• May 22, 2024

அ.தி.மு.க.பொதுக்குழு கூடியது; ஒற்றை தலைமை தீர்மானம் நிறைவேறவில்லை

 அ.தி.மு.க.பொதுக்குழு கூடியது; ஒற்றை தலைமை தீர்மானம் நிறைவேறவில்லை

அ.தி.மு.க.வில் ஒற்றை தலைமை விவகாரம் விஸ்வரூபம் எடுத்து இருக்கும் நிலையில் எடப்பாடி பழனிசாமி மற்றும் ஓ.பன்னீர்செல்வம் ஆதரவாளர்கள் இடையே மோதல் ஏற்பட்டுள்ளது. இருப்பினும் எடப்பாடி பழனிசாமிக்கு அதிக ஆதரவு இருக்கிறது. எனவே அவரை பொதுசெயலாளராக தேர்வு செய்ய சிறப்பு தீர்மானம் கொண்டுவர திட்டமிடப்பட்டது.
இதற்கிடையே ஓ.பன்னீர்செல்வம் தரப்பில் கோர்ட்டில் மனு செய்யபட்டது, அ.தி.மு.க. பொதுக்குழு கூட்டத்தை நடத்துவதற்கு சென்னை உயர் நீதிமன்றம் அனுமதியளித்தது. ஆனால், வரையறை செய்த 23 தீர்மானங்கள் தவிர்த்து, வேறு எந்த தீர்மானமும் நிறைவேற்றக் கூடாது என உத்தரவிட்டது.

இதன் காரணமாக ஏற்கனவே திட்டமிட்டபடி இன்று அ.தி.மு.க பொதுக்குழு மற்றும் செயற்குழுக் கூட்டம் சென்னை வானகரம் ஸ்ரீவாரு வெங்கடாஜலபதி திருமண மண்டபத்தில் நடைபெற்றது.
கூட்டம் தொடங்குவதற்கு முன்பாக அக்கட்சியின் ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம் கிரீன்வேஸ் சாலையில் உள்ள தனது இல்லத்திலிருந்து மாற்றுப்பாதை வழியாக பொதுக்குழுக் கூட்டம் நடைபெறும் மண்டபத்திற்கு வருகை தந்தார். அப்போது அங்கு குவிந்திருந்த ஓ.பன்னீர் செல்வம், எடப்பாடி பழனிசாமி ஆதரவாளர்கள் மாறிமாறி கோஷங்களை எழுப்பினர். திருமண மண்டபத்திற்கு வந்த ஓ.பன்னீர் செல்வத்திற்கு எதிராக கோஷங்கள் எழுப்பப்பட்டது. இதனால் சிறிதுநேரம் சலசலப்பு ஏற்பட்டது.

மண்டபத்துக்கு வெளியே கூடி இருந்த தொண்டர்கள்


ஓ.பன்னீர் செல்வத்தை வெளியேற சொல்லி பழனிசாமி ஆதரவாளர்கள் முழக்கமிட்டனர். திருமணமண்டபத்தில் பன்னீர்செல்வத்தை கண்டுகொள்ளாத பழனிசாமி ஆதரவாளர்கள்! , ஓ.பன்னீர் செல்வம் முன்னிலையில் ஒற்றைத் தலைமை வேண்டும் என முழக்கமிட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.
தொடண்டர்கள் அனைவரும் அமைதி காக்க வேண்டும் என முன்னாள் அமைச்சர் ஆர்.பி. உதயகுமார், வளர்மதி ஆகியோர் தொண்டர்களிடம் கேட்டுக்கொண்டனர். அ.தி.மு.க. பொதுக்குழுவில் உறுப்பினர்கள் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். இரு தரப்பு உறுப்பினர்கள் வாக்குவாதத்தால் அ.தி.மு.க. பொதுக்குழு நடைபெறும் மண்டபத்தில் பரபரப்பு ஏற்பட்டது. பொதுக்குழு உறுப்பினர்கள் அமைதி காக்க அதிமுக மூத்த தலைவர்கள் வேண்டுகோள் விடுத்தனர்.

பொதுக்குழு கூடுவதற்கு முன்பே மண்டபம் நிறைந்து விட்டது


பரபரப்பான சூழலில் அ.தி.மு.க. பொதுக்குழு கூட்டம் தொடங்கியது. பொதுக்குழுவை அவைத்தலைவர் தமிழ்மகன் உசேன் நடத்துவதற்கு ஓ.பன்னீர்செலவம் முன்மொழிந்தார்! பன்னீர்செல்வம் முன்மொழிந்ததை எடப்பாடி பழனிசாமி வழிமொழிந்தார்.
“அனைத்து தீர்மானங்களையும் இந்த பொதுக்குழு நிராகரிக்கிறது…நிராகரிக்கிறது…நிராகரிக்கிறது” என்று முன்னாள் அமைச்சர் சி.வி.சண்முகம் ஆவேசமாக கூறினார்.
தொடர்ந்து, பொதுக்குழு உறுப்பினர்கள் அனைத்து தீர்மானங்களையும் நிராகரித்துவிட்டனர். அனைத்து உறுப்பினர்களின் கோரிக்கை ஒற்றைத் தலைமை வரவேண்டும் என்பது தான். அடுத்த பொதுக்குழுவில் ஒற்றைத் தலைமையுடன், அனைத்து தீர்மானங்களும் நிறைவேற்றப்படும் என்று கே.பி.முனுசாமி தெரிவித்தார்.

அ.தி.மு.க.வின் அடுத்த பொதுக்குழு கூட்டம் ஜூலை 11 ல் நடைபெறும் என்று அவைத்தலைவர் தமிழ்மகன் உசேன் அறிவித்தார். அவர் உரையாற்றும்போது ஓ.பன்னீர் செல்வம் பெயரை குறிப்பிடவில்லை.

அ.தி.மு.க. பொதுக்குழுவில் ஓ.பன்னீர் செல்வம் பேச முயன்றபோது அவர் மீது தண்ணீர் பாட்டில் வீசப்பட்டது. சட்டத்துக்கு புறம்பான பொதுக்குழுவை நிராகரிப்பதாக மேடையில் கோஷமிட்ட வைத்திலிங்கம்; அதனை தொடர்ந்து ஓ.பன்னீர் செல்வம் மற்றும் அவரது ஆதரவாளர்கள் வெளியேறினர்.

அ.தி.மு.க. பொதுக்குழு கூட்டத்திற்கு ஓ.பன்னீர் செல்வம் வந்த பிரசார வாகனத்தின் டயர் பஞ்சர் செய்யப்பட்டது. பரபரப்பான சூழலில் கூடிய அ.தி.மு.க. பொதுக்குழு கூட்டம் எந்த தீர்மானமும் நிறைவேற்றப்படாமல் ஒரு மணி நேரத்தில் நிறைவு பெற்றது

Digiqole Ad

Related post

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *