• February 7, 2025

அ.தி.மு.க.வில் ஒற்றை தலைமை; பொதுக்குழுவில் சிறப்பு தீர்மானம் கொண்டு வர திட்டம்

 அ.தி.மு.க.வில் ஒற்றை தலைமை; பொதுக்குழுவில் சிறப்பு தீர்மானம் கொண்டு வர திட்டம்

அ.தி.மு.க.பொதுக்குழுவை திட்டமிட்டபடி நாளை நடத்துவதற்கு அனைத்து ஏற்பாடுகளையும் எடப்பாடி பழனிசாமி ஆதரவாளர்கள் செய்து வருகின்றனர். ஒற்றை தலைமை விவகாரத்தில் கடும் அதிருப்தியில் உள்ள அ.தி.மு.க. ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம், தொடர்ந்து தனது ஆதரவாளர்களை சந்தித்து ஆலோசனை நடத்தி வருகிறார்.
அதேவேளை அவரை சமாதானப்படுத்த அக்கட்சி முன்னாள் அமைச்சர்கள், மூத்த நிர்வாகிகள் அசராமல் முயற்சி மேற்கொண்டு வருகிறார்கள் ஆனால் எந்த சமரசத்திற்கும் ஓ.பன்னீர் செல்வம் ஒத்துக்கொள்ளவில்லை. ஒற்றை தலைமை விவகாரத்தில் அ.தி.மு.க. தலைவர்கள் மற்றும் தொண்டர்கள் மத்தியில் யாருக்கு அதிக ஆதரவு இருக்கிறது என்று எடப்பாடி பழனிசாமிக்கும், ஓ.பன்னீர்செல்வத்துக்கும் இடையே கடந்த ஒருவாரமாக மிகப் பெரிய பலப்பரீட்சை நடந்து வருகிறது.
இதில் எடப்பாடி பழனிசாமி எட்டி பிடிக்க முடியாத வேகத்தில் முன்னேறி உள்ளார். அ.தி.மு.க.வின் அனைத்து பிரிவுகளிலும் எடப்பாடி பழனிசாமிக்கு அதிக ஆதரவு இருக்கிறது. ஓ.பன்னீர்செல்வத்தின் சொந்த மாவட்டமான தேனி மாவட்ட நிர்வாகிகள் கூட எடப்பாடி பழனிசாமியை தான் ஆதரிக்கிறார்கள். அ.தி.மு.க. மூத்த தலைவர்களில் பெரும்பாலானவர்கள் இதுவரை தங்களது நிலைப்பாட்டை வெளியில் சொல்லாமல் இருந்தனர். ஆனால் நேற்று முதல் அ.தி.மு.க. மூத்த நிர்வாகிகள் எடப்பாடி பழனிசாமிக்கு ஆதரவாக கருத்து தெரிவித்து வருகிறார்கள்.
இன்று 9 வது நாளாக எடப்பாடி பழனிசாமியும் ஓ. பன்னீர் செல்வமும் தனித்தனியாக தனது ஆதரவாளர்களுடன் ஆலோசனை நடத்தி வருகின்றனர். பொதுக்குழு தீர்மானம் இதற்கிடையில் பொதுக்குழுவில் நிறைவேற்ற பொதுவான 23 தீர்மானங்கள் இறுதி செய்யப்பட்டு உள்ளன. 12 பேர் கொண்ட தீர்மான குழுவினர் இதனை இறுதி செய்து இருவருக்கும் கொடுத்துள்ளனர். அ.தி.மு.க. கொண்டு வந்த திட்டங்களை தி.மு.க. முடக்குவதை கண்டித்தும், ஆளும் கட்சியினர் மக்கள் விரோத போக்கை கண்டித்தும் தீர்மானங்கள் கொண்டு வரப்படுகிறது. இது தவிர முல்லைப் பெரியாறு அணை, மேகதாது, காவிரி பிரச்சினை போன்ற பொதுவான பிரச்சினைக்குரிய தீர்மானங்களும் இடம்பெறுகின்றன.
அ.தி.மு.க. செயற்குழு – பொதுக்குழுவில் நிறைவேற்றப்படும் தீர்மானங்கள் ஓ.பன்னீர்செல்வத்தின் ஒப்புதலுக்காக ஒப்படைக்கப்பட்டது. தீர்மானக்குழு தயார் செய்த வரைவு தீர்மானத்தை அ.தி.மு.க. தலைமை அலுவலக நிர்வாகிகள் ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வத்தை நேரில் சந்தித்து வழங்கினர். இந்த தீர்மானங்களை யார்-யார் முன்மொழிவது, வழிமொழிவது என்பது போன்ற பட்டியல் தயாரிக்கப்பட்டு உள்ளது.
ஓ.பன்னீர்செல்வம், எடப்பாடி பழனிசாமியின் ஆதரவாளர்கள் அடங்கிய தீர்மான குழு கொண்டு வந்துள்ள இத்தீர்மானங்கள் பொதுக்குழுவில் வைக்கப்பட்டு நிறைவேற்றப்படும். ஒற்றை தலைமை குறித்த தீர்மானம் இதில் இடம்பெறவில்லை. ஒற்றை தலைமை தீர்மானத்தை பொதுக்குழுவில் சிறப்பு தீர்மானமாக கொண்டு வர எடப்பாடி பழனிசாமி திட்டமிட்டு உள்ளதாக கூறப்படுகிறது.

மேலும் இரட்டை தலைமைக்கு உருவாக்கப்பட்ட விதிகளை அ.தி.மு.க. பொதுக்குழு கூட்டத்தில் நீக்க முடிவு செய்யப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. அதற்கான தீர்மானம் கொண்டு வரப்பட உள்ளதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன. அ.தி.மு.க.வில் ஓ.பன்னீர் செல்வம் – எடப்பாடி பழனிசாமி இணைப்புக்கு பிறகு 2017 ஆம் ஆண்டு உருவாக்கப்பட்ட இரட்டை தலைமை தொடர்பான சட்ட விதிகளை நீக்கிவிட்டு, எம்.ஜி.ஆர்., ஜெயலலிதா தலைமையில் அ.தி.மு.க. இருந்தபோது உள்ள விதிகளை அமல்படுத்த எடப்பாடி பழனிசாமி தரப்பு திட்டமிட்டுள்ளதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளது. நாளை நடைபெறும் பொதுக்குழுவில் இப்போது கிடைத்த தகவல்கள் அனைத்தும் உறுதிபடுத்தப்படுமா என்பது தெரிய வரும்.

Digiqole Ad

Related post

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *