பெற்றோருடன் போராட்டத்தில் ஈடுபட்ட மாணவனுக்கு கோட்டாட்சியர் அறிவுரை

கோவில்பட்டி அருகே எம்.குமரெட்டியாபுரம் கிராமத்தை சேர்ந்தவர் சண்முகம். 2௦ ஆண்டுகளுக்கு முன்பு இவரது நிலத்தை கண்மாய் அமைப்பதற்கு கையகப்படுத்தியதாக கூறப்படுகிறது.
இதற்கு அரசு தரப்பில் இருந்து நஷ்ட ஈடு இன்னும் தரப்படவில்லையாம். இதனால் சண்முகம் இன்று காலை தனது மனைவி மற்றும் பள்ளிமாணவனான மகனுடன் கோவில்பட்டி கோட்டாட்சியர் அலுவலகம் முன்பு அமர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டார்.
கையகப்படுத்திய நிலத்துக்கு நஷ்டஈடு வேண்டி கையில் 3 பேரும் தட்டு ஏந்தி தரையில் அமர்ந்து இருந்தனர். இது பற்றி அறிந்த கோட்டாட்சியர் மகாலட்சுமி, அவர்கள் மூவரையும் தனது அறைக்கு அழைத்து வர செய்தார்.
இதை தொடர்ந்து சண்முகம் மற்றும் அவரது மனைவி, மகன் மூவரும் கோட்டாட்சியரை சந்தித்தனர், சண்முகத்தின் கோரிக்கையை கேட்டறிந்த மகாலட்சுமி, இன்னும் ஒரு வாரத்தில் இது பற்றி விசாரித்து தீர்வு காண நடவடிக்கை எடுக்கப்படும் என்று உறுதி அளித்தார்.
மேலும் சண்முகத்தின் மகனை பார்த்து ” நீ நன்றாக படித்து அரசு வேலைக்கு செல்ல வேண்டும் என்ற ஆசை இல்லையா? குரூப் 1 தேர்வு எழுதி ஐ.ஏ.எஸ். அதிகாரி ஆக ஆசை இல்லையா? எனவே ஒழுங்காக படி. அரசு தேர்வு எழுத வேண்டும் என்றால் உனக்கு நான் உதவி செய்கிறேன்” என்று அறிவுரை கூறினார்.
இதை கேட்டு சண்முகம் மற்றும் அவரது குடும்பத்தினர் மகிழ்ச்சியுடன் அங்கிருந்து கிளம்பி சென்றனர்.
