எதிர்பார்த்த அளவு மீன்கள் கிடைத்ததால் தூத்துக்குடி மீனவர்கள் மகிழ்ச்சி

தமிழகத்தில் 13 கடலோர மாவட்டங்களை உள்ளடக்கிய 950 கி.மீ நீள கடலில் ஆழ்கடல் மீன்பிடிப்பின் மூலம் மீன்களின் இனப்பெருக்கம் பாதிக்கப்படும் என்பதால் மத்திய அரசு ஆண்டுதோறும் ஆழ்கடல் மீன்பிடிப்பிற்கு தடைவிதித்து வருகிறது.
நாட்டின் கிழக்கு கடற்கரைப்பகுதியில் ஏப்ரல் 14ம்தேதி முதல் ஜூன் 14 வரை 61 நாட்கள் மீனவர்கள் மீன்பிடிக்க செல்லவில்லை.
இந்த தடை காலம் முடிவடைந்த நிலையில் நேற்று அதிகாலை தூத்துக்குடி மீன்பிடி துறைமுகத்திலிருந்து சுழற்சி முறையில் 130 விசைப்படகுகள் ஆழ்கடல் மீன்பிடிப்பிற்கு சென்றனர். இரவு 9 மணி மீன்பிடிப்பிற்கு சென்ற விசைப்படகுகள் கரை திரும்பினர்.
அயிலை, வஞ்சிரம், பாறை, சாளமீன், காரல் மற்றும் வெளிநாட்டிற்கு ஏற்றுமதி செய்யப்படும் விளமீன், சீலா, வருவால் ஊழி, கருப்பு ஊழி உள்ளிட்ட அனைத்து மீன் வகைகளையும் பிடித்து வந்துள்ளனர்.
தற்போதைய சூழ்நிலையில் மீன்பிடித் தடைக்காலத்திற்குப் பின் மீன்கள் தேவை அதிகம் உள்ள நிலையில் மீன்வரத்தும் எதிர்பார்த்த அளவு கிடைத்துள்ளதாக மீனவர்கள் மகிழ்ச்சி தெரிவித்தனர்.
அதே சமயத்தில் சில மீனவர்கள் போதுமான மீன்பாடு இல்லை என்று தெரிவித்தனர். 61 நாள் தடைக்காலம் முடிந்து நடைபெறும் மீன்பிடிப்பு என்பதால் வெளி மாவட்டத்தை சார்ந்த நூற்றுக் கணக்கான மீன் வியாபாரிகள் தூத்துக்குடி மீன்பிடித் துறைமுகத்தில் நேற்று மாலை முதலே வந்து முகாமிட்டனர். மேலும் கேரளா, கர்நாடக மாநிலங்களில் இருந்து வியாபாரிகள் வந்து மீன்களை மொத்தமாக வாங்கிச் சென்றனர்.
