அ.தி.மு.க.வுக்கு ஒற்றை தலைமை அவசியம்; நிர்வாகிகள், மாவட்ட செயலாளர்கள் வலியுறுத்தல்- டி.ஜெயக்குமார்
![அ.தி.மு.க.வுக்கு ஒற்றை தலைமை அவசியம்; நிர்வாகிகள், மாவட்ட செயலாளர்கள் வலியுறுத்தல்- டி.ஜெயக்குமார்](https://tn96news.com/wp-content/uploads/2022/06/images-5-1.jpg)
சென்னையில் அ.தி.மு.க. தலைமை அலுவலகத்தில் நிர்வாகிகள் மற்றும் மாவட்டச் செயலாளர்கள் ஆலோசனை கூட்டம் நடைபெற்றத
இந்த கூட்டத்திற்குப் பின்னர் முன்னாள் அமைச்சர் டி.ஜெயக்குமார் செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்தார்.
அப்போது அவர் கூறியதாவது:-‘
கருத்து கேட்பு என்ற அடிப்படையில் கருத்துக்கள் கேட்கப்பட்டது.அதன் அடிப்படையில் ஆரோக்கியமான அடிப்படையில் நான்கரை மணிநேரம் அமைதியாக நடைபெற்றது என்றால் ஒரு ராணுவ கட்டுப்பாடு உள்ள இயக்கம் கழகம் என்பதை இதன் மூலம் நிச்சயமாக நீங்கள் அறியலாம்.
பொதுக்குழு கூடவுள்ள நிலையில் அந்த பொதுக்குழுவை ஒட்டி இன்றைக்கு இந்த கூட்டம் நடைபெற்றது.
இவ்வாறு அவர் கூறினார்.
நிருபர் கேள்வி:- இங்கு வெளியே ஒற்றை தலைமை வேண்டும் என்று இருதரப்பினரின் ஆதரவாளர்கள் குரல் எழுப்பினார்களே…இந்த குரல் கூட்டத்தின் உள்ளே ஒலித்ததா.
பதில்அ;- பொதுக்குழுவுக்கு முன்பாக இப்போது நடந்த கூட்டத்தில் ஒற்றை தலைமை குறித்தும் விவாதிக்கப்பட்டது. இந்த விவாதம் ஆரோக்கியமான முறையிலிருந்து இது குறித்து பெரும்பான்மையான தலைமை கழக நிர்வாகிகள்,பெரும்பான்மையான மாவட்ட கழக செயலாளர்கள் கழகத்திற்கு ஒற்றை தலைமைதான் தேவை என்பதை வலியுறுத்தி கருத்துக்களைத் தெரிவித்துள்ளார்கள். கழகம் ஒரு வலிமையான இயக்கம் என்ற வகையிலே ஒற்றை தலைமை அவசியம் என்று வலியுறுத்திப் பேசினார்கள்.
கேள்வி:- இதில் யாரவது ஒருவரை மேற்கொள் காட்டி இவர்தான் வரவேண்டும் என்று விவாதிக்கப்பட்டதா?
பதில்அ;- இப்போது அது விவாதிக்கப்படவில்லை. இது குறித்து கட்சி முடிவு செய்யும்.
கேள்வி.:- ஒற்றை தலைமை யார் என்று முடிவு செய்யப்பட்டுள்ளதா
பதில்:- அதற்குள் உங்களுக்கு ஏன் இந்த அவசரம். அம்மாவின் மறைவுக்கு பிறகு இரட்டை தலைமை என்ற நிலையிலிருந்து,பொதுக்குழுவிற்கு முன்பாக தலைமை கழக நிர்வாகிகள், மாவட்ட கழக செயலாளர்கள் கூட்டம் போடப்பட்டு, அதன் அடிப்படையில் கருத்துக்கள் அதாவது பொதுக்குழுக் கூட்டத்தில் என்ன என்ன தீர்மானம் வரவேண்டும் என்று பேசப்பட்டு, இதுவும் ஒரு கருத்தாக பேசப்பட்டது. ஒற்றை தலைமைக்கு மாவட்ட கழக செயலாளர்கள்,தலைமை கழக நிர்வாகிகள் அத்தனைப்பேருமே ஒற்றை தலைமை தேவை என்பதை வலியுறுத்தியுள்ளார்கள்.
அதன் அடிப்படையில் யார் என்பதைக் கட்சி முடிவு செய்யும். யார் என்பது என்பது குறித்து இன்றைக்கு எதுவும் விவாதிக்கப்படவில்லை.
கேள்வி:- இரட்டை தலைமையிலிருந்து ஒற்றை தலைமை வருவதற்கான காரணம் என்ன?
பதில்.:- .காலம் அனைத்தையும் பார்த்துக்கொண்டுதான் உள்ளது. அன்றைக்கு இருந்த சூழ்நிலை வேறு.இன்றைக்கு இருக்கும் சூழ்நிலை வேறு. இன்றைக்கு கழக தொண்டர்களும் சரி, கட்சி நிர்வாகிகளும் சரி, பொதுவாக எதிர்பார்ப்பது கட்சிக்கு ஒன்றைத் தலைமை தேவை என்பது. அந்த காலத்தின் கட்டாயத்தின் அடிப்படையில் இன்றைக்கு அந்த பொருள் குறித்து விவாதிக்கப்பட்டு.அதன் அடிப்படையில் பெரும்பான்மையானவர்கள் அதற்கு அமோகமான ஆதரவைத் தெரிவித்துள்ளார்கள்.
கேள்வி:- இந்த ஒற்றை தலைமை குறித்து பொதுக்குழுவில் தீர்மானம் நிறைவேற்றப்படுமா?
பதில்:- இன்றைக்கு ஒற்றை தலைமை குறித்து ஒரு கருத்து விவாதிக்கப்பட்டு, அது பெரும்பான்மையோடு ஏற்றுக்கொள்ளப்பட்டது. மேற்கொண்டு நீங்கள் குறிப்பிடுவது தொடர்பாகக் கட்சிதான் முடிவு செய்யும். இன்றைக்கு கருத்து பரிமாற்றம்தான் நடந்துள்ளது. அதற்குச் செயல் வடிவம் அளிப்பது தொடர்பாகக் கட்சிதான் முடிவு செய்யும்.’
கேள்விஅ;- பொதுக்குழுவிற்குச் சிறப்பு அழைப்பாளர்கள் அழைக்கப்படுவார்களா.
பதில்:-2600 பேர் செயற்குழு மற்றும் பொதுக்குழு உறுப்பினர்கள் உள்ளார்கள். சிறப்பு அழைப்பாளர்கள் கிட்டதட்ட 2500 பேருக்கு மேல் உள்ளார்கள். ஒட்டுமொத்தமாக 6 ஆயிரம் பேர் உட்காருவதற்கு இடம் வேண்டும். அதனால் இப்போதைக்கு இந்த கூட்டத்தில் பிரதானமாக, ஏற்கனவே கிளை கழகத்திலிருந்து,ஒருங்கிணைப்பாளர்கள் வரை தேர்தல் நடைபெற்றது. தேர்தல் ஆணையத்தைப் பொறுத்தவரையில் அங்கீகாரம் அளிக்கவேண்டும். நடைபெற்ற தேர்தலை அங்கீகாரம் செய்யும் அதிகாரம் படைத்தது பொதுக்குழுதான். பொதுக்குழுவில் வைத்து ஒப்புதல் பெற்று அதன்பிறகு தேர்தல் ஆணையத்திற்கு அளிப்போம். இதற்காகப் பொதுக்குழு உறுப்பினர்கள் மட்டுமே வரும் கூட்டத்தில் கலந்துகொள்ள உள்ளார்கள்.
சிறப்பு அழைப்பாளர்களைப் பொறுத்தவரையில் மனம் உள்ளது.வேறு வழியில்லை. இடம் பற்றாக்குறை காரணமாக அழைக்க முடியாத சூழ்நிலை. இவை அனைத்தையும் மாவட்ட கழக செயலாளர்களிடம் தெரிவித்துள்ளோம். தலைமைக்கழக நிர்வாகிகளிடமும் இந்த சூழ்நிலை குறித்து விளக்கியுள்ளோம்.
கேள்வி:-இந்த ஆலோசனைக் கூட்டத்தில் சசிகலா குறித்து விவாதிக்கப்பட்டதா.
பதில்.:-அவர்களுக்கும் கட்சிக்கு என்ன சம்பந்தம் உள்ளது. கட்சியில் இல்லாதவர்கள் குறித்து பேச வேண்டாம்.சசிகலா குறித்து விவாதிக்கவேண்டிய அவசியம் என்ன. யார் அவர்கள். அவர்களுக்கும் கழகத்திற்குத் தொடர்பு உள்ளதா. அவர்களுக்கும் கட்சிக்கு ஏதாவது தொடர்பு உள்ளதா. தொடர்பு இல்லாத ஒருவரை,,சம்பந்தம் இல்லாத ஒருவரை,கட்சிக்கு கிஞ்சித்தும் சம்பந்தம் இல்லாத ஒருவர் குறித்து பொதுக்குழுவில் விவாதித்து எங்களுடைய நேரத்தை நாங்கள் ஏன் வீணாக்கவேண்டும். நேரத்தை வீணாக்க விரும்பவில்லை.
கேள்வி.:- நடைபெற்று முடிந்த தேர்தலில் கட்சிக்கு ஏற்பட்ட பின்னடைவு காரணமாக இந்த ஒற்றை தலைமை முடிவு ஏற்பட்டதா.
பதில்:- இல்லை. இருபெரும் தலைவர்களின் நல்லாசி. புரட்சித்தலைவரின் சின்னம் இரட்டை இலை. இவை இருக்கும் வரையில் கழகத்தின் ஒட்டு வங்கி என்றைக்கும் குறையாது. கழகத்திற்கு அழிவு என்பது கிடையாது. 100 வருடத்திற்கு மேலும் கழகம் இருக்கும். வெற்றி,தோல்வி என்பது நாணயத்தின் இருபக்கம் போன்றது. 96 ல் தோற்றோம்.2001 ல் வந்தோம்.2006 ல் தோற்றோம்.2011 ல் வந்தோம்.
இப்போது நடைபெற்ற தேர்தலில் எங்களுக்கும் தி.மு.க.வுக்கும் மூன்று சதவீத வாக்குகள்தான் வித்தியாசம். வரும் பாராளுமன்ற தேர்தலில் நாங்கள் அதிகமான இடங்களை பெறுவோம். 2026 ல் அதிக வாக்குகள் பெற்று மீண்டும் புரட்சித்தலைவர் ஆட்சி,புரட்சித்தலைவி அம்மாவின் ஆட்சியை அமைப்போம்.
கேள்வி:- தமிழகத்தில் நாங்கள்தான் எதிர்க்கட்சி என்று பா.ஜ.க.,பா.ம.க. தொடர்ந்து தெரிவித்துவருகிறதே…
பதில்:- இது குறித்து விவாதிக்கவேண்டிய அவசியம் இல்லையே…எங்கள் கடமையை நாங்கள் செய்துவருகிறோம். அவரவர்கள் எதிர்க்கட்சி என்று சொல்லிக்கொள்ள வேண்டியதுதான்.ஆனால் நாங்கள்தான் முதன்மையான கட்சி. மீதி அனைத்தும் எதிரிகட்சிகள் கிடையாது.உதிரி கட்சிகள்.
இவ்வாறு முன்னாள் அமைச்சர் டி.ஜெயக்குமார் பதில் அளித்தார்.
![Digiqole Ad](https://tn96news.com/wp-content/uploads/2023/01/add-1.jpg)