5 ஆண்டுகளுக்கு ஒரு முறை நடக்கும் ஆயிரங்காளியம்மன் பூஜை விழா
புதுச்சேரி மாநிலம் காரைக்காலில் புகழ்பெற்ற ஆயிரங்காளியம்மன் கோவில் உள்ளது. இந்த கோவிலில் 5 ஆண்டுகளுக்கு ஒருமுறை நடைபெறும் பூஜை விழா நடைபெறுவது வழக்கம்
பல நூறு ஆண்டுகளுக்கு முன்பு திருமலைராயன் பட்டினம் கடற்கரையில் பேழை (பெட்டி) ஒன்று கண்டெடுக்கப்பட்டது. அந்தப் பெட்டியை கொண்டுவந்து திறந்து பார்த்த போது அந்தப் பெட்டியில் அம்மன் சிலை மற்றும் ஓலைச்சுவடி இருந்தது. அந்த ஓலைச் சுவடியில் இந்த அம்மனின் பெயர் ஆயிரம் காளியம்மன் என்றும் இந்த அம்மனுக்கு படையலிடும் போது எந்த பொருளை வைத்தாலும் ஆயிரமாக வைத்து படையலிட வேண்டும் என்றும் எழுதப்பட்டிருந்தது.
தினந்தோறும் இது போல பூஜை செய்ய முடியாது என்பதால் அம்மனிடம் உத்தரவு கேட்கப்பட்டது. அப்போது 5 ஆண்டுகளுக்கு ஒரு முறை பூஜை செய்தால் போதும் என்று அம்மன் கூறியதாக சொல்லப்படுகிறது.
அதையடுத்து 5 ஆண்டுகளுக்கு ஒருமுறை ஒவ்வொரு பொருளையும் ஆயிரம் என்ற எண்ணிக்கையில் வைத்து அம்மனுக்கு படையலிடும் நிகழ்ச்சி திருமலைராயன் பட்டினம் பகுதியில் ஆயிரம் காளியம்மன் பூஜை விழாவாக வெகு விமர்சையாக கொண்டாடப்பட்டு வருகிறது.
5 ஆண்டுகளுக்கு ஒரு முறை வைகாசி மாதம் வளர்பிறையில் 48 மணி நேரம் மட்டுமே இந்த அம்மனை தரிசிக்க முடியும் என்பது குறிப்பிடத்தக்கது. மற்ற தினங்களில் அம்மனை பேழையில் வைத்து அந்த பேழைக்கு அபிஷேக ஆராதனைகள் நடைபெற்று வருகிறது.
அதன்படி 5 ஆண்டுகளுக்கு பிறகு கடந்த 8,9-ந் தேதிகளில் ஆயிரம் காளியம்மன் பூஜை விலா சிறப்புட நடைபெற்றது.
விழாவின் தொடக்க நாளான 7-ந் தேதி இரவு திருமலைராயன் பட்டினம் ராஜசோளீஸ்வரர் கோவிலிலிருந்து ஆயிரங்காளியம்மன் கோயிலுக்கு பக்தர்கள் வரிசை எடுத்துச் செல்லும் வரிசை புறப்பாடு நடைபெற்றது.
இதில் வெள்ளி காசு, பழங்கள், இனிப்பு வகைகள், மஞ்சள் கயிறு உள்ளிட்ட பல்வேறு பொருட்கள் ஒவ்வொன்றும் ஆயிரம் எண்ணிக்கையில் எடுத்து வரப்பட்டன.
இந்த வரிசைப் பொருட்கள் ஆயிரங்காளியம்மன் முன்பு வைத்து பொங்கல் படையல் வைத்தனர்.
இதைத்தொடர்ந்து மறுநாள் அதிகாலை அம்மனுக்கு தீபாராதனை காட்டப்பட்டு, அதன் பின்னர் பக்தர்கள் அம்மனை தரிசிக்க அனுமதிக்கப்பட்டனர். தொடர்ந்து 2 நாட்கள் பகதர்கள் அம்மனை தரிசித்தனர்.
பொது தரிசனம், ரூ.100 கட்டண தரிசனம் என இரு வரிசைகள் பக்தர்களுக்கான அமைக்கப்பட்டிருந்தன.
பூஜை விழாவை முன்னிட்டு நகரம் விழாக்கோலம் பூண்டிருந்தது. கோவில் நிர்வாகம், மாவட்ட நிர்வாகம், காவல் துறை சார்பில் பக்தர்கள் வசதிக்கான பாதுகாப்பு உள்ளிட்ட ஏற்பாடுகள் செய்யப்பட்டன.