ஆர்த்தி ஸ்கேன் மையங்களில் 2-வது நாளாக வருமானவரி அதிகாரிகள் சோதனை
கோவில்பட்டி, கதிரேசன் கோவில் ரோட்டில் வசிக்கும் கோவிந்தராஜன் என்பவர் சென்னை வடபழனியை தலைமையிடமாக கொண்டு ஆர்த்தி ஸ்கேன் மையம் நடத்தி வருகிறார். கோவில்பட்டியில் ஸ்கேன் மையம் மற்றும் மருத்துவமனை செயல்பட்டு வருகிறது.
தமிழ்நாடு, கேரளா, கர்நாடகா, ஆந்திரா, மேற்கு வங்காளம், டெல்லி உள்ளிட்ட 9 மாநிலங்களில் 45 கிளைகளுடன் இந்த நிறுவனம், செயல்பட்டு வருகிறது. சமீபத்தில் பல்வேறு இடங்களில் புதிய கிளைகளை தொடங்கி உள்ளது.
முறையாக வருமானவரி செலுத்தாமல் வரி ஏய்ப்பு செய்வதாக வருமானவரித்துறைக்கு ரகசிய தகவல் கிடைத்தது. அதன் அடிப்படையில், சென்னை வடபழனி, கீழ்ப்பாக்கத்தில் உள்ள ஸ்கேன் மையங்கள் மற்றும் அண்ணாநகரில் உள்ள நிறுவனத்தின் நிர்வாகிகளின் வீடுகள் மற்றும் அதில் பணியாற்றும் டாக்டர்களின் வீடுகள், கோவில்பட்டியில் உள்ள வீடு உள்ளிட்ட 25 இடங்களில் நேற்று காலை வருமானவரித்துறையினர் சோதனை நடத்தினர்.
இந்த சோதனையில் சென்னை, திருச்சி, மதுரை, நெல்லை பகுதிகளை சேர்ந்த சுமார் 200 வருமானவரித்துறை அதிகாரிகள் கலந்து கொண்டனர்.
கடந்த காலங்களில் இந்த நிறுவனம் செய்த முதலீடுகள், மருத்துவ கருவிகள் கொள்முதல், வருவாய் மற்றும் செலவினங்கள் உள்ளிட்ட பதிவேடுகள் ஆய்வு செய்யப்பட்டது. அதில் ஒரு சில முக்கிய ஆவணங்கள் ஆய்வுக்காக பறிமுதல் செய்யப்பட்டு உள்ளது. தேவைப்பட்டால் வருமானவரி சோதனை மேலும் 2 நாட்கள் தொடர வாய்ப்பு உள்ளது என வருமானவரித்துறை புலனாய்வு பிரிவு உயர் அதிகாரிகள் கூறினர்.
இந்த நிலையில், ஆர்த்தி ஸ்கேன் நிறுவனம் தொடர்பான இடங்களில் வருமான வரித்துறை அதிகாரிகள் 2-வது நாளாக இன்றும் சோதனை நடத்தி வருகின்றனர். தமிழ்நாடு முழுவதும் 25 இடங்களில் சோதனை நடைபெற்று வருகிறது.
தற்போது கணக்கில் காட்டப்படாத ரொக்கம், ஆவணங்களின் மதிப்பு எவ்வளவு என்பது பற்றி கூற இயலாது. வருமானவரி சோதனை முற்றிலும் நிறைவடைந்தவுடன்தான் பறிமுதல் செய்யப்பட்ட, சொத்துக்களின் ஆவணங்கள் மற்றும் ரொக்க நிலவரங்கள் தெரியவரும் என்று அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.