கல்லூரி மாணவி அடித்துக்கொலை; ஒருதலைக்காதலால் வாலிபர் ஆத்திரம்
சேலம் மாவட்டம், கெங்கவல்லி அருகே உள்ள கூடமலை ஊராட்சி மேலவீதி பகுதியை சேர்ந்தவர் விவசாயி முருகேசன். இவருக்கு ஜெயலட்சுமி என்ற மனைவியும் நந்தினி, ரோஜா ஆகிய மகள்களும் விஜய் என்கிற ஒரு மகனும் உள்ளனர்.
முருகேசன் கூடமலையில் இருந்து கடம்பூர் செல்லும் சாலையில் உள்ள சின்னசாமி என்பவருடைய தோட்டத்தை குத்தகைக்கு எடுத்து குடும்பத்துடன் தோட்டத்திலேயே தங்கி விவசாயம் செய்து வருகிறார்.
முருகேசனின் இரண்டாவது மகள் ரோஜா ஆத்தூர் அருகே உள்ள தனியார் கல்லூரியில் பி,ஏ, தமிழ் இரண்டாம் ஆண்டு படித்து வருகிறார். இதனிடையே ஆத்தூர் அருகே உள்ள தாண்டவராயபுரம் பகுதியை சேர்ந்த நீலக்கிருஷ்ணன் மகன் சாமிதுரை என்பவர் ரோஜாவை ஒரு தலை பட்சமாக காதலித்து வந்தாக கூறப்படுகிறது.
அடிக்கடி மாணவியின் ஊருக்கு சென்ற சாமிதுரை பஸ்சில் கல்லூரிக்கு செல்லும் போது மாணவி ரோஜாவை காதலிக்க வலியுறுத்தி கட்டாய படுத்தியதுடன் திருமணம் செய்ய வலியுறுத்தி மிரட்டல் விடுத்து வந்ததாக கூறப்படுகிறது.
இச்சம்பவம் மாணவியின் உறவினர்களுக்கு தெரியவந்ததால் ஊரின் முக்கியஸ்தர்களை அழைத்து பேச்சுவார்த்தை நடத்தி எச்சரிக்கை செய்து அனுப்பி வைத்தனர். இதனால் ஆத்திரமடைந்த சாமிதுரை ரோஜா வீட்டில் ஆட்கள் இல்லாததை நோட்டமிட்டு தோட்டத்திற்கு சென்று வீட்டின் பின்புற பகுதியில் பதுங்கி இருந்தான்.
அப்போது வீட்டில் இருந்து வெளியே வந்த ரோஜாவை தன்னை காதலித்து திருமணம் செய்து கொள் இல்லையென்றால் உன்னை கொன்று விடுவேன் எனக்கூறி இருக்கிறார். இதற்கு ரோஜா மறுப்பு தெரிவித்து கூச்சலிட்டதால் ஆத்திரமடைந்த சாமிதுரை மறைத்து வைத்திருந்த மண்எண்ணையை ரோஜா மீது ஊற்றினார்.
பின்னர் ரோஜாவை கீழே தள்ளி கழுத்தில் காலை வைத்து மிதித்து கொண்டு கல்லை தூக்கி தலையில் போட்டு கொடூரமாக தாக்கிவிட்டு அங்கிருந்து தப்பியோடி விட்டார்.
குடும்பத்தினர் ரோஜாவை மீட்டு சிகிச்சைக்காக கூடமலை ஆரம்ப சுகாதார நிலையத்திற்கு கொண்டு சென்றனர். அங்கு ரோஜாவை பரிசோதனை செய்த மருத்துவர்கள் ஏற்கனவே இறந்து விட்டதாக தெரிவித்தனர்.
இச்சம்பவம் குறித்து தகவலறிந்த ஆத்தூர் டி.எஸ்.பி, ராமச்சந்திரன் நேரில் சென்று விசாரணை மேற்கொண்டுள்ளார்.