5 லிட்டர் கஞ்சா எண்ணெய் பறிமுதல்; 3 பேர் கைது
தூத்துக்குடி நகர காவல் உதவி கண்காணிப்பாளர் (பொறுப்பு) சந்தீஸ் மேற்பார்வையில் தென்பாகம் காவல் நிலைய ஆய்வாளர் ஆனந்தராஜன் தலைமையில் உதவி ஆய்வாளர் ரவிக்குமார் மற்றும் தனிப்படை போலீசார் ரோந்து பணியில் ஈடுபட்டனர்.
தென்பாகம் ஜார்ஜ் ரோடு, இந்திரா நகர் பகுதியில் ரோந்து பணியில் ஈடுபட்ட போது, அங்கு சந்தேகத்திற்கிடமான முறையில் நின்றுகொண்டிருந்த கொண்டிருந்தவர்களை பிடித்து விசாரணை செய்ததில், அவர்கள் தூத்துக்குடி இந்திரா நகரை சேர்ந்த மோகன் மகன் ஆனந்தகுமார் (32), ராஜேந்திரன் மகன் சார்லஸ் (32) தூத்துக்குடி மேல சண்முகபுரம் பகுதியை சேர்ந்த முருகேசன் மகன் படையப்பா (எ) அருண்குமார் (28) ஆகியோர் என்பதும் அவர்கள் சட்டவிரோதமாக கஞ்சா எண்ணைய் வைத்திருந்ததும் தெரியவந்தது.
உடனே ஆனந்தகுமார், சார்லஸ் மற்றும் படையப்பா (எ) அருண்குமார் ஆகிய 3 பேரையும் போலீசார் கைது செய்து அவர்களிடமிருந்த ரூ. 5 லட்சம் மதிப்பிலான 5 லிட்டர் கஞ்சா எண்ணெயை பறிமுதல் செய்தனர்.
இதுகுறித்து தென்பாகம் காவல் நிலைய போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.