இந்தியா முழுவதும் கோவில்பட்டி கடலைமிட்டாய்; அஞ்சல் நிலையங்களில் ஆர்டர் செய்து பெறலாம்
கோவில்பட்டி கடலைமிட்டாய் மிகவும் பிரபலமானதாகும். கோவில்பட்டி என்றாலே கடலைமிட்டாய் தான் நினைவுக்கு வரும். கோவில்பட்டி மற்றும் சுற்று வட்டார பகுதிகள் வானம் பார்த்த கரிசல் பூமியாகும். இங்கு விளைவிக்கப்படும் நிலக்கடலைக்கு இயற்கையாகவே இனிப்பு சுவை உண்டு.
இந்த நிலக்கடலையை கொண்டு தயாரிக்கப்படும் கடலை மிட்டாய் தயாரிப்பில் பல்வேறு நிறுவனங்கள் ஈடுபட்டுள்ளன, இங்கிருந்து வெளிநாடுகளுக்கும் ஏற்றுமதி செய்யப்படுகிறது. அத்துடன் இந்தியா முழுவதும் விறபனைக்கு அனுப்பி வைக்கப்படுகிறது.
இவ்வளவு பெருமை வாய்ந்த கோவில்பட்டி கடலைமிட்டாய் புவிசார் குறியீடு பெற்றுள்ளது. கோவில்பட்டி கடலை மிட்டாயின் பெருமையை உணர்த்தும் வகையில் கடந்த ஆண்டு அக்டோபர் மாதம் சிறப்பு அஞ்சல் உரை வெளியிடப்பட்டது.
இந்த நிலையில் இந்தியா முழுவதும் கோவில்பட்டி கடலைமிட்டாயை அஞ்சல் துறை மூலம் கொண்டு செல்ல கோவில்பட்டி கோட்ட தலைமை அஞ்சலக அதிகாரிகள் முயற்சி மேற்கொண்டனர்.
இதை தொடர்ந்து தனியார் நிறுவனத்துடன் ஒப்பந்தம் மேற்கொள்ளப்பட்டது. பின்னர் அஞ்சல் நிலையங்களில் ஆர்டர்கள் பெறப்பட்டு அவர்கள் வசிக்கும் இடத்துக்கே கடலை மிட்டாய் போய் சேரும் வகையில் ஏற்பாடு செய்யப்பட்டது.
இந்த திட்டம் கடந்த 1 -ந் தேதி முதல் செயல்பட தொடங்கியது. அன்றைய தினம் ஆர்டர்கள் பெறப்பட்டு மறுநாள் முதல் வாடிக்கையாளர்களுக்கு அனுப்பும் பணி தொடங்கியது.
இது குறித்து கோவில்பட்டி அஞ்சல் கோட்ட முதுநிலை கண்காணிப்பாளர் எஸ்,சுரேஷ்குமார் கூறியதாவது:-
கடலைமிட்டாய் கேட்டு தினமும் பதிவாகும் அளவை மறுநாள் காலை அந்த நிறுவனத்துக்கு அளிப்போம். அவர்கள் அன்று மதியத்துக்குள் கடலைமிட்டாய் பாக்கெட்டுகளை எங்களிடம் வழங்குவார்கள்.
கடலமிட்டாய் பதிவு செய்தவர்களுக்கு விரைவு தபால் மூலம் நாங்கள் அனுப்பி வைப்போம், வாடிக்கையாளர்கள் வீட்டில் இருந்தபடியே அவற்றை பெற்றுக்கொள்ளலாம்.
ஒரு பெட்டியில் தலா 2௦௦ கிராம் கொண்ட 5 பாக்கெட்டுகள் வீதம் மொத்தம் ஒரு கிலோ கடலைமிட்டாய் இருக்கும். இந்தியா முழுமைக்கும் தபால் செலவும் சேர்த்து இந்த பெட்டியின் விலை ரூ.39௦ ஆகும்.
இந்த கடலைமிட்டாய் பெறுவதற்கு அஞ்சல் நிலையங்களில் முன்பதிவு செய்யலாம். தபால்காரர்களை சந்திக்கும் பொது அவரிடமே பணத்தை கொடுத்தும் பதிவு செய்யலாம்.
இவ்வாறு அவர் கூறினார்.
இன்று (ஜூன் 4 ந்தேதி) காலை வரை மொத்தம் 2௦ கிலோ கடலைமிட்டாய் ஆர்டர்கள் பெறப்பட்டு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.