‘தினத்தந்தி’ ஐ.சண்முகநாதனுக்கு கலைஞர் எழுதுகோல் விருது; முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் வழங்கினார்

 ‘தினத்தந்தி’ ஐ.சண்முகநாதனுக்கு கலைஞர் எழுதுகோல் விருது; முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் வழங்கினார்

இதழியல் துறையில் சமூக மேம்பாட்டிற்காகவும், விளிம்புநிலை மக்களின் மேம்பாட்டிற்காகவும் பங்காற்றிவரும் ஒரு சிறந்த இதழியலாளருக்கு ஆண்டுதோறும் ‘கலைஞர் எழுதுகோல் விருது’ மற்றும் ரூ.5 லட்சம் பரிசுத் தொகையுடன் பாராட்டுச் சான்றிதழும் வழங்கப்படும் என்று இந்த ஆண்டு அறிவிக்கப்பட்டது.
இவ்விருது ஒவ்வொரு ஆண்டும் முன்னாள் முதல்-அமைச்சர் கருணாநிதியின் பிறந்த நாளான ஜூன் 3-ம் தேதி வழங்கப்படும். அதன்படி, ‘கலைஞர் எழுதுகோல் விருது’ க்கான தேர்வுக் குழுவின் பரிந்துரையின்பேரில் 2021-ம் ஆண்டிற்கான விருதாளராக மூத்த பத்திரிகையாளர் ஐ.சண்முகநாதன் (வயது 87) தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார்.
திருச்சிராப்பள்ளி மாவட்டத்தில் பிறந்த ஐ.சண்முகநாதன் 1953-ம் ஆண்டு ‘தினத்தந்தி’யில் உதவி ஆசிரியராகப் பொறுப்பேற்று இதுநாள் வரை ஏறத்தாழ 70 ஆண்டுகளாக தினத்தந்தி பணியிலேயே தொடர்ந்து இருந்து வருகிறார்
பெரும் மக்களுக்கான இதழியலில் இவ்வளவு நெடிய பணி அனுபவம் என்பது எளிதில் நிகழ்த்ததற்கரிய சாதனை ஆகும். பத்திரிகை துறையில் செய்தி ஆசிரியராக நீண்டகாலம் பணியாற்றி, சமகால பெருவாரியான மக்கள் இதழியலில் மொழிப் பயன்பாட்டைத் தீர்மானித்தவர்களில் ஒருவராக செயல்பட்டிருப்பவர் என்பதோடு, சமகால வரலாற்றை தொகுத்து அளிக்கும் பணிகளிலும் சமூகநீதி விழுமியப் பார்வையோடு அப்பணியை மேற்கொண்டிருக்கிறார் சண்முகநாதன்.
அவருடைய முக்கியமான பங்களிப்புகளில் ஒன்று, ‘தினத்தந்தி’ குழுமத்தினால் வெளியிடப்பட்ட ‘வரலாற்றுச் சுவடுகள்’ நூல் தொகுப்புப் பணி ஆகும். பல்லாயிரம் பிரதிகள் விற்ற இந்நூலானது, சமகால வரலாற்றைப் பார்க்க உதவுகிறது.
இந்நிலையில், முன்னாள் முதல்-அமைச்சர் கருணாநிதியின் பிறந்த நாளை முன்னிட்டு, 2021-ம் ஆண்டிற்கான கலைஞர் எழுதுகோல் விருதினை தினத்தந்தி மூத்த பத்திரிகையாளர் ஐ.சண்முகநாதனுக்கு முதல்-அமைச்சர் மு.க. ஸ்டாலின் இன்று, வழங்கி சிறப்பித்தார். விருதுடன் ரூ.5 லட்சம் பரிசுத் தொகை மற்றும் பாராட்டு சான்றிதழ் ஆகியவற்றை மூத்த பத்திரிக்கையாளர் ஐ.சண்முகநாதனுக்கு முதல்-அமைச்சர் வழங்கினார்.

Digiqole Ad

Related post

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *