கொள்முதல் நிறுத்தம்: தட்டுப்பாடு இன்றி பங்க்களில் பெட்ரோல், டீசல் வினியோகம்
மத்திய அரசின் கலால் வரி குறைப்பின் காரணமாக பெட்ரோல், டீசல் சில்லறை விற்பனை விலையை உடனே மாற்றியதால் மிகப்பெரிய இழப்பு ஏற்பட்டுள்ளதாக பெட்ரோல், டீசல் விற்பனையாளர்கள் சங்கம் சார்பில் தெரிவிக்கப்பட்டது.
மேலும், இந்த இழப்பை எண்ணெய் நிறுவனங்கள் ஈடு செய்ய வலியுறுத்தி இன்று(மே31) ஒருநாள் பெட்ரோல், டீசல் கொள்முதல் செய்வது நிறுத்தப்படுவதாக விற்பனையாளர் சங்கத்தினர் கூறி இருந்தனர். மேலும், கடந்த 2017 ல் இருந்து இதுவரை விளிம்பு தொகை உயர்த்தப்படவில்லை எனவும், அதை உயர்த்தி வழங்க வேண்டும் எனவும் வலியுறுத்தி உள்ளனர்.
இதன் காரணமாக தமிழகம், கர்நாடகம், ஆந்திரா, பஞ்சாப் உள்ளிட்ட அகில இந்திய அளவில் 24 மாநிலங்களில் பெட்ரோல், டீசல் கொள்முதல் இன்று நிறுத்தம் செய்யப்படுவதாக அறிவித்து அதன்படி இன்று கொள்முதல் செய்யவில்லை.
இதன் காரணமாக பெட்ரோல் பங்க்களில் பெட்ரோல், டீசல் தட்டுப்பாடு ஏற்படுமோ என்ற சந்தேகம் பொதுமக்கள் மத்தியில் எழுந்தது. ஆனால் பெட்ரோல் விற்பனை நிலையங்களில் இன்றைய தேவைக்கு உரிய பெட்ரோல், டீசலை நேற்றே கொள்முதல் செய்து விட்டனர். இதன் காரணமாக எந்த வித தட்டுப்படும் ஏற்படவில்லை.
கோவில்பட்டியில் அனைத்து பெட்ரோல் பங்க்களிலும் வழக்கம் போல் வினியோகம் நடைபெற்றது. எந்த வித தடையும் இல்லாமல் பெட்ரோல், டீசல் வினியோகம் நடந்தது, இது பற்றி பெட்ரோல் பங்க் உரிமையாளர் ஒருவர் கூறுகையில், ” இந்த கொள்முதல் நிறுத்த போராட்டத்தினால் யாருக்கும் பாதிப்பு கிடையாது. எங்கள் கோரிக்கையை நாங்கள் ஒற்றுமையாக இருந்து தெரியப்படுத்தி இருக்கிறோம். பொதுமக்களுக்கு பாதிப்பு ஏற்படக்கூடாது என்பதற்காக தேவையான பெட்ரோல், டீசல் இருப்பு வைக்கப்பட்டு இருந்தது. எங்கள் கோரிக்கை விரைவில் நிறைவில் நிறைவேறும் என்ற நம்பிக்கை ஏற்பட்டு உள்ளது” என்றார்