கோவில்பட்டியில் தேசிய ஜூனியர் ஆக்கி: உத்தரபிரதேச அணி `சாம்பியன்’

 கோவில்பட்டியில் தேசிய ஜூனியர் ஆக்கி: உத்தரபிரதேச அணி `சாம்பியன்’

கோவில்பட்டி கிருஷ்ணா நகர் செயற்கை புல்வெளி ஆக்கி மைதானத்தில் 12-வது தேசிய ஜூனியர் ஆண்கள் ஆக்கி போட்டி கடந்த 17-ந்தேதி தொடங்கியது. தமிழ்நாடு உள்பட 29 மாநில அணிகள் பங்கேற்றன. பகல் மற்றும் இரவு மின்னொளியில் நடந்த இப்போட்டியில் மொத்தம் 50 போட்டிகள் நடைபெற்றன.
8 பிரிவுகளாக பிரிக்கப்பட்ட லீக் போட்டிகளும், பின்னர் காலிறுதி, அரையிறுதி போட்டிகளும் நடைபெற்றன. இறுதிபோட்டிக்கு உத்தரபிரதேசம்-சண்டிகர் அணிகள் தகுதி பெற்றன.
இதை தொடர்ந்து 3, 4 இடத்திற்கான போட்டி மற்றும் இறுதிப்போட்டி ஆகியவை நேற்று மாலை நடைபெற்றது. முதலில் 3,4 வது இடத்திற்கான போட்டி அரியானா -ஒடிசா அணிகள் மோதின. இதில் 3 – 1 என்ற கோல் கணக்கில் அரியானா அணி வெற்றி பெற்று 3வது இடத்தை பிடித்தது.

இதையெடுத்து இறுதிப்போட்டி தொடக்க நிகழ்ச்சி நடைபெற்றது. கனிமொழி எம்.பி., அமைச்சர்கள் மெய்யநாதன், கீதா ஜீவன் ஆகியோர் கலந்து கொண்டு இந்திய அணி மற்றும் வெளிநாடு கவுண்டி அணிகளில் விளையாடிய கோவில்பட்டியை சேர்ந்த முன்னாள் ஆக்கி வீரர்களுக்கும், தமிழகத்தை சேர்ந்த இளம் ஆக்கி வீரர்களுக்கும் நினைவு பரிசு வழங்கி பாராட்டினர். மேலும் 350 இளம் வீரர்களுக்கு கனிமொழி எம்.பி. ஆக்கி மட்டைகள் வழங்கினார்.

பின்னர் இறுதிப் போட்டியை கனிமொழி எம்.பி., அமைச்சர் மெய்யநாதன் ஆகியோர் தொடங்கி வைத்தனர். இறுதிபோட்டியை காண மைதானம் ரசிகர்கள் கூட்டத்தால் நிரம்பி காணப்பட்டது. பல அணிகளுடன் மோதி வெற்றியை ருசித்து வந்த இரு அணி வீரர்களும் சமபலத்துடன் இருந்தனர். இருப்பினும் உத்தரபிரதேச அணி வீரர்கள் தங்களுக்கு கிடைத்த வாய்ப்புக்களை சரியாகப் பயன்படுத்தி அதனை கோல்களாக மாற்றினார்.

ஆட்டம் தொடங்கிய 1௦-வது நிமிடத்தில் சவுரவ் ஆனந்த் குஷ்வாலா ஒரு கோல் அடித்தார். அதே போல் 33-வது நிமிடத்தில் சர்தானந்த் திவாரி ஒரு கோல் அடித்து எண்ணிக்கையை 2 ஆக உயர்த்தினார்.
ஆனால் சண்டிகர் அணி வீரர்கள் எவ்வளவோ முயன்றும் கோல் ஏதும் போட முடியவில்லை. பல வாய்ப்புகள் கைநழுவி போயின. ஆட்ட இறுதியில் 2 – 0 என்ற கோல் கணக்கில் உத்தரபிரதேசம் அணி வெற்றி பெற்று `சாம்பியன்’ பட்டத்தை தட்டிச் சென்றது.

பின்னர் நடைபெற்ற பரிசளிப்பு விழாவில் கனிமொழி எம்பி, அமைச்சர் கீதாஜீவன் ஆகியோர் `சாம்பியன்’ பட்டம் வென்ற உத்தர பிரதேசம் அணிக்கு பரிசுக் கோப்பையை வழங்கினர். தொடர்ந்து 2-வது இடம் பெற்ற சண்டிகர் அணிக்கும், 3-வது இடம் பிடித்த அரியானா அணிக்கும், 4-வது இடம் பிடித்த ஒடிசா அணிக்கும் பரிசு வழங்கினர்.

இந்த நிகழ்ச்சியில், தூத்துக்குடி மாநகராட்சி மேயர் ஜெகன் பெரியசாமி, மேயர் சாருஸ்ஸ்ரீ, மாவட்ட வன பாதுகாப்பு அலுவலர் அபிஷேக் தோமர், கே.ஆர்., கல்வி நிறுவனங்களின் தாளாளர் கே.ஆர்.அருணாசலம், கோவில்பட்டி நகராட்சி சேர்மன் கருணாநிதி, யூனியன் சேர்மன் கஸ்தூரி சுப்புராஜ், கோவில்பட்டி கோட்டாட்சியர் சங்கர நாராயணன், தி.மு.க. ஒன்றிய செயலாளர் முருகேசன், தூத்துக்குடி மாவட்ட ஆக்கி கழக செயலாளர் குரு சண்முக பாரதி, ஒருங்கிணைப்பு குழு காளிமுத்து ராஜா, முருகன், சந்தானம் உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர்.

தொடக்கத்தில் ஆக்கி யூனிட் ஆப் தமிழ்நாடு தலைவர் சேகர் மனோகர் வரவேற்றார். இறுதியில் பொதுசெயலாளர் (பொறுப்பு ) செந்தில்ராஜ்குமார் நன்றி கூறினார்.

Digiqole Ad

Related post

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *