2020-21 ம் ஆண்டில் அதிக வருமானம் பெற்ற மாநில கட்சி தி.மு.க.; அ.தி.மு.க. வருவாய் சரிந்தது

 2020-21 ம் ஆண்டில் அதிக வருமானம் பெற்ற மாநில கட்சி தி.மு.க.; அ.தி.மு.க. வருவாய் சரிந்தது

தேர்தல் ஆணையத்திடம் மாநில கட்சிகள் சமர்ப்பித்த ஆண்டு வருமான அறிவிப்புகளை ஆய்வு செய்த ஜனநாயக சீர்திருத்தங்களுக்கான சங்கம் அறிக்கை வெளியிட்டு உள்ளது.
அக்டோபர் 31, 2021 வரை சமர்ப்பிப்பதற்கான காலக்கெடுவாக இருந்த போதிலும், வெள்ளிக்கிழமை நிலவரப்படி 54 மாநில கட்சிகளில் 23 கட்சிகளின் அறிக்கைகள் தேர்தல் ஆணையத்தின் இணையதளத்தில் கிடைக்கவில்லை.
ராஷ்ட்ரீய ஜனதா தளம், சமாஜ்வாதி கட்சி மற்றும் ஜம்மு & காஷ்மீர் தேசிய மாநாடு ஆகிய கட்சிகள் வருடாந்திர தணிக்கை செய்யப்பட்ட கணக்குகள் கிடைக்காத கட்சிகள் ஆகும். ஜனநாயக சீர்திருத்தங்களுக்கான சங்கம் வெளியிட்ட அறிக்கை தெரிவித்துள்ளதாவது:-
2020-2021 இல் பகுப்பாய்வு செய்யப்பட்ட 31 பிராந்திய கட்சிகளில் தி.மு.க. தான் அதிக வருமானம் மற்றும் செலவினங்களை கொண்டது ஆகும். அதன் செலவு மொத்த வருமானத்தில் பாதிக்கும் மேலாகும்.
பகுப்பாய்வு செய்யப்பட்ட 31 கட்சிகளின் மொத்த வருமானம் ரூ.529.41 கோடி. இதில் தி.மு.க.வருமானம் ரூ.149.95 கோடி, ஒய்.எஸ்.ஆர். காங்கிரஸ் கட்சி ரூ.107.99 கோடி. பிஜு ஜனதா தளம் ரூ. 73.34 கோடி ஆகும்.
அதே நேரத்தில், கட்சிகள் மொத்தம் ரூ.414.02 கோடியை செலவாக அறிவித்து உள்ளன, அதில் தி.மு.க.வின் செலவு கணக்கு ரூ.218.49 கோடி. இது 52.77 சதவீதம் ஆகும்.
தெலுங்கு தேசம் கட்சி ரூ. 54.76 கோடி செலவாக அறிவித்தது, அதைத் தொடர்ந்து அ.தி.மு.க. செலவு ரூ. 42.36 கோடி ஆகும். 31 கட்சிகளும் தேர்தல் பத்திரங்கள் தங்கள் வருமானத்திற்கான 47.34 சதவீதம் ஆதாரம் என்று அறிவித்துள்ளன.
2019-2020 ஆம் ஆண்டில், 7 தேசியக் கட்சிகளின் வருமானத்தில் 62 சதவீதத்துக்கும் அதிகமானவை தேர்தல் பத்திரங்களிலிருந்து வந்ததாக அறிக்கை கூறுகிறது. தமிழகத்தில் தி.மு.க. ஆட்சிக்கு வருவதற்கு முந்தைய ஆண்டான 2019 – 2020ஆம் நிதியாண்டில் அக்கட்சியின் வருமானம் 64.90 கோடி ரூபாயாக இருந்தது. இது, கடந்தாண்டில் 131 சதவீதம் உயர்ந்து, 149.95 கோடி ரூபாயாக அதிகரித்துள்ளது.
அ.தி.மு.க 34 கோடி ரூபாய் வருமானம் ஈட்டியுள்ளது. அக்கட்சி ஆட்சியில் இருந்த 2019 – 2020ல், 89 கோடி ரூபாய் வருமானம் ஈட்டியது. இந்தத் தொகை, 2020 – 21ல் 34 கோடி ரூபாயாக குறைந்துள்ளது. அதே நேரத்தில், ம.தி.மு.க, பா.ம.க ஆகிய கட்சிகளின் வருமானம் கடந்த ஆண்டை விட உயர்ந்துள்ளது.
கடந்த 2019ல் ரூ.1.50 கோடியாக இருந்த ம.தி.மு.கவின் வருமானம் 2020ல் ரூ.2.86 கோடியாக உயர்ந்துள்ளது. பா.ம.கவின் வருமானம் 55.60 லட்சம் ரூபாயில் இருந்து 1.16 கோடி ரூபாயாக உயர்ந்துள்ளது.

Digiqole Ad

Related post

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *