ஆட்சி, அதிகாரத்தில் பங்கு அளிக்கும் கட்சியுடன் கூட்டணி: டாக்டர் கிருஷ்ணசாமி பேட்டி

புதிய தமிழகம் கட்சி நிறுவனத் தலைவர் டாக்டர் கிருஷ்ணசாமி கோவில்பட்டியில் செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டியில் கூறியதாவது:-
புதிய தமிழகம் கட்சியின் 7-வது மாநில மாநாடு டிசம்பர் மாத இறுதியில் மதுரையில் நடைபெறும். கடந்த 10 நாட்களில் நெல்லை, தூத்துக்குடி மாவட்டங்களில் சுமார் 200 கிராமங்களில் சுற்றுப்பயணம் மேற்கொண்டேன்.

உள்ளாட்சி அமைப்புகள் முறையாக செயல்படாத காரணத்தால் குடிநீர், தெருவிளக்கு, சாலைகள் உள்ளிட்ட அடிப்படை வசதிகள் இல்லை. இதில், தேவேந்திரகுல மக்கள் வாழும் பகுதிகள் திட்டமிட்டு புறக்கணிக்கப்பட்டுள்ளன.
மத்திய அரசு ரூ.2 ஆயிரம் கோடி நிதியை விடுவித்துள்ள நிலையில், அனைத்து கிராமங்களிலும் 100 நாள் வேலை திட்டம் மீண்டும் தொடங்கப்பட வேண்டும். இல்லையெனில் புதிய தமிழகம் சார்பில் போராட்டம் நடத்தப்படும்.
சமூக நீதிக்கும் இந்த ஆட்சியாளர்களுக்கும் சம்பந்தமே கிடையாது. தமிழ்நாட்டில் இடஒதுக்கீட்டை மட்டுமே வைத்து சமூக நீதி பேசப்படுகிறது. ஆனால், 18 சதவீத தேவேந்திரகுல வேளாளர் சமூகத்துக்கான இடஒதுக்கீடு கொடுக்கப்படாமல் உள்ளது.

தேவேந்திரகுல வேளாளர், ஆதிதிராவிடர்களுக்கான இடஒதுக்கீட்டை அருந்ததியருக்கு தாரை வார்க்க கூடாது. அதற்கு இந்த அரசு உடந்தையாக இருக்கக்கூடாது என்பதை வலியுறுத்தி திருச்சியில் வருகிற 17-ந் தேதி ஆர்ப்பாட்டம், பொதுக்கூட்டம் நடத்த உள்ளோம். சட்டமன்ற தேர்தலில் ஆட்சி அதிகாரத்தில் பங்களிக்க கூடிய கட்சியுடன் புதிய தமிழகம் கூட்டணி அமைக்கும்.
இவ்வாறு டாக்டர் கிருஷ்ணசாமி கூறினார்.

