தூத்துக்குடி கடல் பகுதியில் சிக்கிய பழமையான அம்மன் சிலை

தூத்துக்குடி தருவைக்குளம் கடல் பகுதியில் நேற்று காலை 11 மணி அளவில் கடலுக்குள் அமைக்கப்பட்ட மீன்பிடி தளத்தின் இரண்டாம் குறுக்கு பாதையில் கீழ் பகுதியில் ‘அன்னை’ விசைப்படகு ஊழியர்கள் உந்து விசை காத்தாடி பழுதுபார்த்தல் வகைக்கு கடலில் இறங்கி பணி செய்து கொண்டு இருந்தனர்.
தங்கள் காலில் வித்தியாசமான முறையில் தட்டுப்பட்டது என்னவென்று கூர்ந்து கவனித்ததில் அது சாமி சிலை என்பதை அறிந்து கவனமாக செயல்பட்டு பழு தூக்கி உதவியுடன் சேதாரம் இன்றி கரை சேர்த்தனர்.
இதுகுறித்து தூத்துக்குடியை சேர்ந்த வரலாறு மற்றும் தொல்லியல் ஆர்வலர் பெ.ராஜேஷ் செல்வரதி கூறியதாவது:-

தருவைக்குளம் வரலாற்று ஆர்வலர் செ.அ.லாரன்ஸ் வாயிலாக பகிரப்பட்ட தன் அடிப்படையில் ஆய்வு செய்ததில் இந்த தெய்வ திருமேனி 37 அங்குலம் உயரம், 24 அங்குலம் அகலம், 10 அங்குலம் கணம் கொண்டு சுமார் 150கிலோ எடை கொண்ட பெண் தெய்வம் திருமேனி. இந்த அம்மனுக்கு நான்கு கரங்கள் உள்ளன.
மேல் வலது கரத்தில் நாகத்தோடு சேர்ந்த உடுக்கையும், மேல் இடது கரத்தில் பாசக்கயிரும், கீழ் வலது கரத்தில் மேல் நோக்கி உள்ள திரிசூலமும், கீழ் இடது கரத்தில் குங்கும கும்பாவும், சிங்க வாகனத்தில் அமர்ந்துள்ள நிலையில் இரண்டு கால்களுக்கு இடையில் படமெடுக்கும் நாகம் அமையப் பெற்றுள்ளது. இது நமது பாண்டியர்களின் சிற்ப சாஸ்திரம் அடிப்படையில் வடிவமைப்பு செய்தது போன்றுள்ளது

அதிக சுழல் அலை வேக பகுதியில் இந்த திருமேனி கிடந்துள்ளது என்பதால் சற்று புதியது போன்று உள்ளது. இதன் மேல் படிந்துள்ள சிப்பி படிமங்களை சுத்தம் செய்து இதன் வடிவமைப்பு முறைகள் குறித்து ஆய்வு செய்தால் உண்மையான காலகட்டம் குறித்த தகவல்கள் வெளிவரும். தற்போதைய நிலையில் தோராயமாக 200 ஆண்டுகள் பழமையானது போன்று தெரிகின்றது. இதுகுறித்து தமிழக தொல்லியல் துறை அதிகாரிகள் சகிதம் தகவல்கள் பரிமாறப்பட்டது இன்னும் ஓரிரு நாட்களில் முறையாக அவர்கள் ஆவணம் செய்து ஆய்வு செய்வார்கள்.
இவ்வாறு அவர் கூறினார்.

