• May 21, 2025

போப் பிரான்சிஸ் இறுதிச்சடங்கில் பங்கேற்க ஜனாதிபதி முர்மு, வாடிகன் சென்றார்

 போப் பிரான்சிஸ் இறுதிச்சடங்கில் பங்கேற்க ஜனாதிபதி முர்மு, வாடிகன் சென்றார்

கத்தோலிக்க திருச்சபையின் தலைவர் போப் பிரான்சிஸ் (வயது 88) உடல்நலக்குறைவால் கடந்த 21ம் தேதி உயிரிழந்தார். அவரின் மறைவிற்கு உலகின் பல்வேறு நாடுகளின் தலைவர்களும் இரங்கல் தெரிவித்துள்ளனர்.

அவரின் இறுதிச்சடங்கு 26-ந்தேதி(சனிக்கிழமை) நடைபெற உள்ளது. போப் பிரான்சிஸ் உடல் வாடிகன் நகரில் உள்ள புனித பீட்டர் பேராலயத்தில் அஞ்சலிக்காக வைக்கப்பட்டுள்ளது அவரது உடலுக்கு ஆயிரக்கணக்கான பொதுமக்கள் இறுதி அஞ்சலி செலுத்தி வருகின்றனர்.


நேற்றைய தினம் சுமார் 8 மணி நேரத்தில் 20 ஆயிரத்திற்கும் மேற்பட்ட மக்கள் போப் பிரான்சிஸ் உடலுக்கு அஞ்சலி செலுத்தினர். இதற்காக புனித பீட்டர் தேவாலயம் இரவு முழுவதும் திறந்து வைக்கப்பட்டிருந்தது.

அங்கு பொதுமக்கள் நீண்ட வரிசைகளில் காத்திருந்து, மறைந்த போப் பிரான்சிஸ் உடலுக்கு விடிய விடிய அஞ்சலி செலுத்தினர். போப் பிரான்சிஸ் உடலுக்கு அஞ்சலி செலுத்துவதற்காக உலகின் பல்வேறு நாடுகளிலும் இருந்து பொதுமக்கள் வந்த வண்ணம் உள்ளனர். தொடர்ந்து மக்கள் கூட்டம் அதிகரிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
போப் பிரான்சிஸ் இறுதிச்சடங்கில் இந்தியா சார்பில் ஜனாதிபதி திரவுபதி முர்மு பங்கேற்கிறார். இதற்காக அவர் இன்று டெல்லியில் இருந்து தனி விமானம் மூலம் வாடிகன் புறப்பட்டு சென்றார்.

ஜனாதிபதியுடன் மத்திய மந்திரிகள் கிரன் ரிஜிஜு, ஜார்ஜ் குரியன், கோவா சட்டசபை துணை சபாநாயகர் ஜோஸ்வா டி சுசா ஆகியோரும் வாடிகன் புறப்பட்டு சென்றனர்.

இந்த நிலையில் போப் பிரான்சிஸ் இறுதிச்சடங்கு நடைபெறும் 26ம் தேதி மத்திய அரசு சார்பில் துக்கம் அனுசரிக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இறுதிச்சடங்கு அன்று இந்தியா முழுவதும் தேசியக்கொடி அரைக்கம்பத்தில் பறக்கும் எனவும் மத்திய அரசு அறிவித்துள்ளது.




Digiqole Ad

Related post

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *