எடப்பாடி பழனிசாமி மீதான அவதூறு வழக்கு ரத்து

நாடாளுமன்றத் தேர்தலின்போது, மத்திய சென்னையில் பிரசாரம் செய்த அ.தி.மு.க., பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி, தொகுதி மேம்பாட்டு நிதியை முறையாக தயாநிதிமாறன் எம்.பி., செலவிடவில்லை என்று குற்றம் சாட்டினார்.
இதற்கு கடும் எதிப்பு தெரிவித்த தயாநிதி மாறன், தன்னை பற்றி தொகுதியில் அவதூறு கருத்துக்களை தெரிவித்ததற்காக எடப்பாடி பழனிசாமிக்கு எதிராக அவதூறு வழக்கை தாக்கல் செய்தார்.
இந்த வழக்கு எம்.பி., எம்.எல்.ஏ.க்கள் மீதான வழக்குகளை விசாரிக்கும் சிறப்பு கோர்ட்டில் நிலுவையில் இருந்தது. இந்த வழக்கை ரத்து செய்ய கோரி சென்னை ஐகோர்ட்டில் எடப்பாடி பழனிசாமி மனு தாக்கல் செய்தார்.
இதுதொடர்பான மனுவில், ஏற்கனவே செய்தித்தாள்களில் வெளியான செய்தியின் அடிப்படையில் பேசியதாகவும், தேர்தல் பிரச்சாரத்தின் போது பேசும் பேச்சுக்கள் அவதூறாகாது என்பதால், தனக்கு எதிரான வழக்கை ரத்து செய்ய வேண்டும் என கோரி இருந்தார்.
இந்நிலையில் இந்த மனுவை விசாரித்த நீதிபதி ஜி.கே.இளந்திரையன், அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி எதிராக தாக்கல் செய்யப்பட்ட அவதூறு வழக்கை ரத்து செய்து உத்தரவிட்டார். விரிவான உத்தரவு பின்னர் பிறப்பிக்கப்படும் என்றும் அவர் தனது தெரிவித்தார்.


