திருக்குறுங்குடி நம்பி கோவிலுக்கு வழக்கம் போல் செல்ல அனுமதி

நெல்லை மாவட்டம் களக்காடு வனச்சரகத்தில் வரையாடுகள் கணக்கெடுப்பு பணிகள் இன்று (வியாழக்கிழமை) தொடங்கி 28-ந் தேதி வரை 5 நாட்கள் நடைபெறுகிறது.
‘இப்பணிகளை புலிகள் காப்பக துணை இயக்குனர் ரமேஷ்வரன் தொடங்கி வைக்கிறார். வனசரகர் பிரபாகரன் தலைமையில் வனத்துறையினர் வரையாறு கணக்கெடுப்பு பணிகளை மேற்கொள்கின்றனர்.
இதனை முன்னிட்டு களக்காடு தலையணை வனப்பகுதி மற்றும் திருக்குறுங்குடி நம்பி கோவிலுக்கு சுற்றுலா செல்ல தடை விதிக்கப்படுவதாக வனத்துறையினர் முதலில் அறிவித்தனர்.
எனினும் கோடை விடுமுறையை முன்னிட்டு களக்காடு தலையணை மற்றும் கோவிலுக்கு வருவோரின் எண்ணிக்கை அதிகரித்துள்ளது. இதன் காரணமாக, வழக்கம்போல் களக்காடு தலையணை மற்றும் கோவிலுக்கு செல்ல அனுமதி அளிக்கப்பட்டுள்ளதாக வனத்துறையினர் தெரிவித்தனர்.


