கோவில்பட்டி ரெயில் நிலையத்தில் பெண் பயணிகளுக்கு பாதுகாப்பு அறிவுரைகள்


கோவில்பட்டி ரெயில் நிலையத்தில் பெண் பயணிகளுக்கு பாதுகாப்பு அறிவுரைகள் வழங்குவது தொடர்பான கூட்டம் நடந்தது. பயணிகள் காத்திருப்பு அறையில் நடந்த கூட்டத்தில், பெண் பயணிகள் பலர் கலந்து கொண்டனர்.
அவர்களிடம் தூத்துக்குடி ரெயில்வே காவல் உதவி ஆய்வாளர் பெருமாள், மகாகிருஷ்ணன் ஆகியோர் பெண் பயணிகள் பாதுகாப்பு தொடர்பாக விளக்கினர்.
பெண்கள் அறிமுகம் இல்லாத நபர்கள் கொடுக்கும் குளிர்பானங்களையோ அல்லது தின்பண்டங்களையோ வாங்கி உண்ண வேண்டாம். ரெயில் பயணத்தின்போது நகைகளை அணிந்து கொண்டு ஜன்னல் ஓரத்தில் அமர்வதையும், படுத்து உறங்குவதையும் தவிர்க்க வேண்டும். பெண்கள் சந்தேகப்படும்படியான நபர்களை கண்டால் உடனடியாக ரெயில்வே காவல் துறையினர் – 1512, ரயில்வே பாதுகாப்பு படை – 139 ஆகிய இலவச தொலைபேசி எண்களில் தொடர்பு கொண்டு தெரிவிக்கவேண்டும் என்று விளக்கினார்கள்.
மேலும் ரெயில்களில் இணைக்கப்பட்டுள்ள “மகளிர் மட்டும் பெட்டி” என்பது பெண் பயணிகள் மட்டுமே பயணம் செய்ய அனுமதிக்கப்பட்ட பெட்டியாகும். இதில் ஆண் பயணிகளை அனுமதிக்க வேண்டாம். மீறி பெட்டியில் ஏறினால் 9962500500, 139, 1512 ஆகிய எண்களில் தொடர்பு கொண்டு தெரிவிக்கலாம், என விளக்கிக் கூறப்பட்டது.


