பெற்றோரை இழந்த குழந்தைகள் அரசு இல்லங்களில் தங்கி கல்வி பயிலலாம் : ஆட்சியர் இளம்பகவத் தகவல்

தூத்துக்குடி மாவட்ட ஆட்சியர் க.இளம்பகவத் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் கூறி இருப்பதாவது:-
தூத்துக்குடி மாவட்டத்தில் தட்டப்பாறை, அரசினர் சிறுவர் இல்லம் மற்றும் ஸ்ரீவைகுண்டம், அன்னை சத்தியா அம்மையார் நினைவு அரசு சிறுமியர் இல்லம் மற்றும் அரசின் மானியம் பெற்று இயங்கி வரும் 8 குழந்தைகள் இல்லங்களும் இளைஞர் நீதிச் (பராமரிப்பு மற்றும் பாதுகாப்பு) சட்டம் 2015-கீழ் பதிவு பெற்று இயங்கி வருகின்றன.
பெற்றோரை இழந்த குழந்தைகள், ஒற்றை பெற்றோரை இழந்த குழந்தைகள், பராமரிப்பு மற்றும் பாதுகாப்பு தேவைப்படும் குழந்தைகள் ஆகியோர் தூத்துக்குடி, குழந்தை நலக்குழு அனுமதி பெற்று தட்டப்பாறை அரசினர் சிறுவர் இல்லத்திலும் ஸ்ரீவைகுண்டம், அன்னை சத்தியா அம்மையார் நினைவு அரசு சிறுமியர் இல்லத்திலும் மற்றும் அரசின் மானியம் பெற்று இயங்கி வரும் 8 குழந்தைகள் இல்லங்களிலும் 6 முதல் 18 வயது வரையிலான குழந்தைகள் தங்கி 1ம் வகுப்பு முதல் 12ம் வகுப்பு வரை கல்வி பயின்று வருகின்றனர்.
அவ்வில்லங்களில் தங்கியுள்ள குழந்தைகளுக்கு தேவையான கல்வி, உணவு, இருப்பிடம், திறன் சார்ந்த பயிற்சிகள் அனைத்தும் கட்டணமின்றி வழங்கப்பட்டு வருகிறது. மேலும் குழந்தைகளுக்கு தேவையான தங்கும் அறை, வகுப்பறைகள், நூலகம், மற்றும் கணிணி மற்றும் தட்டச்சு பயில்வதற்கான அறைகள் மற்றும் போதுமான அடிப்படை வசதிகள் உள்ளன.
அரசின் வழிகாட்டுதலின்படி நியமனம் செய்யப்பட்ட ஆற்றுப்படுத்துநர்களால் குழந்தைகளுக்கு ஆற்றுப்படுத்துதல் வழங்கப்பட்டது. குழந்தைகளுக்கு தற்காப்பு கலை பயிற்சி வழங்கப்படுகிறது. மருத்துவத்துறையின் மூலமாக குழந்தைகளுக்காக இல்லங்களிலேயே மருத்துவ முகாம் நடத்தப்படுகிறது. இல்லங்களில் தங்கியுள்ள குழந்தைகள் கல்வி சுற்றுலா சென்று வருகின்றனர். மாவட்ட மற்றும் மாநில அளவில் குழந்தைகள் இல்லங்களில் தங்கியுள்ள குழந்தைகளுக்கிடையே விளையாட்டு போட்டிகள் நடத்தப்படுகின்றன.

எனவே, பெற்றோரை இழந்த குழந்தைகள், ஒற்றை பெற்றோரை இழந்த குழந்தைகள், பராமரிப்பு மற்றும் பாதுகாப்பு தேவைப்படும் குழந்தைகளை 2 அரசு குழந்தைகள் இல்லங்களிலும் அரசு மானியம் பெற்று இயங்கிவரும் 8 குழந்தைகள் இல்லங்களிலும் தங்கி கல்வி பயின்று பயனடைய விரும்புவோர் மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலுவலர், மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலகு, 176, முத்து சுரபி பில்டிங், மணி நகர், பாளை ரோடு, தூத்துக்குடி மாவட்டம் – 628 003 (தொலைபேசி எண்: 0461-2331188) என்ற முகவரியிலும், தூத்துக்குடி குழந்தை நலக்குழுவினை 176, முத்துமாலை பில்டிங் , மணி நகர், பாளை ரோடு, தூத்துக்குடி மாவட்டம் – 628 003 என்ற முகவரியிலும் தொடர்பு கொள்ளலாம்.
இவ்வாறு மாவட்ட ஆட்சியர் க.இளம்பகவத் தெரிவித்துள்ளார்.

